Published:Updated:

”முன்னேற்றப் பாதைக்கு வித்திட்ட முந்திரி”- அரசு உதவியுடன் சாதித்த அரியலூர் பழங்குடியினப் பெண்கள்!

முந்திரி விவசாயம்
News
முந்திரி விவசாயம்

7,600 கிலோ முந்திரி மகசூல் கிடைத்தது. இதன் மூலம் ரூ 9.5 லட்சம் வருமானம் கிடைத்தது. வேலி அமைக்க, உரம் உள்ளிட்ட பராமரிப்புக்கு ஆன செலவு 6.2 லட்சம் போக 3.5 லட்சம் லாபம் கிடைத்தது - பழங்குடியினப் பெண்கள்.

”முன்னேற்றப் பாதைக்கு வித்திட்ட முந்திரி”- அரசு உதவியுடன் சாதித்த அரியலூர் பழங்குடியினப் பெண்கள்!

7,600 கிலோ முந்திரி மகசூல் கிடைத்தது. இதன் மூலம் ரூ 9.5 லட்சம் வருமானம் கிடைத்தது. வேலி அமைக்க, உரம் உள்ளிட்ட பராமரிப்புக்கு ஆன செலவு 6.2 லட்சம் போக 3.5 லட்சம் லாபம் கிடைத்தது - பழங்குடியினப் பெண்கள்.

Published:Updated:
முந்திரி விவசாயம்
News
முந்திரி விவசாயம்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய பழங்குடியினப் பெண்கள், அரசு உதவியுடன் முந்திரித் தோப்பைக் குத்தகைக்கு எடுத்துப் பராமரித்தனர். 7,600 கிலோ முந்திரி அறுவடை செய்த அவர்கள் செலவு போக ரூ 3.5 லட்சம் லாபம் அடைந்துள்ளனர். அசத்தலான அவர்களது முயற்சி அரசுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. மற்ற பெண்களுக்கும் முன்மாதிரியாக மாறியிருக்கிறது.

முந்திரித் தோப்பில் பழங்குடியினப் பெண்கள்
முந்திரித் தோப்பில் பழங்குடியினப் பெண்கள்

அரியலூர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமாகப் பார்க்கப்படுகிறது. சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் நிரம்பியிருந்தாலும் விவசாயம் மக்கள் முன்னேற்றத்திற்கு முதன்மையாக இருந்துவருகிறது. நெல், முந்திரி, பருத்தி உள்ளிட்ட பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அரியலூர், ஆண்டிமடம் அருகே உள்ள குவாகம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர்.

தினமும் கூலி வேலைக்குச் சென்று குடும்பம் நடத்தும் சூழலில் அவர்களது பொருளாதார நிலை இருந்துவந்தது. குவாகம் கிராமத்தில் உள்ள பழங்குடியினப் பெண்கள், இருளர், தாமரை மற்றும் செம்பருத்தி என்ற பெயர்களில் மூன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்திவருகின்றனர். அதன் மூலம் வாழ்க்கை மேம்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

முந்திரி மரங்கள் பராமரிப்பு பணி
முந்திரி மரங்கள் பராமரிப்பு பணி

இந்த நிலையில், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிற முந்திரித் தோட்டத்தை அரசு உதவியுடன் டெண்டர் எடுத்தனர். குழுவாகச் சேர்ந்து உழைத்து முந்திரித் தோப்பைப் பராமரித்ததில் செலவு போக ரூ 3.5 லட்சம் லாபம் பெற்று அசத்தியுள்ளனர். முந்திரி அப்பெண்களின் முன்னேற்றத்திற்கான வாசலைத் திறந்துள்ளது.

கலெக்டர் ரமண சரஸ்வதி, அரசின் உதவியை சரியாகப் பயன்படுத்தி நீங்கள் முன்னேற்றம் அடைந்திருப்பதுடன், அரசுக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள் என மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்களைப் பாராட்டியிருக்கிறார். விடாமுயற்சியின் பலனாக ஏகபோகமாக முந்திரி அறுவடை செய்ததன் மூலம் தங்களைப் போன்ற பின்தங்கிய பெண்களுக்கான நம்பிக்கையை விதைத்திருக்கின்றனர்.

அரியலூர்
அரியலூர்

இதுகுறித்து குவாகம் கிராமத்தைச் சேர்ந்த ராணி என்பவரிடம் பேசினோம், ”வறுமைக்குப் பழக்கப்பட்டது என்னுடைய குடும்பம். தினமும் கூலி வேலைக்குச் சென்றால் மட்டுமே வீட்டில் அடுப்பெரியும் நிலை. எனக்கு மட்டுமல்ல, எங்க ஊரைச் சேர்ந்த பல பெண்களின் நிலையும் அப்படித்தான் உள்ளது. வாழ்வில் முன்னேறிவிட வேண்டும் எனப் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம்.

மூன்று சுய உதவிக்குழுக்கள் தொடங்கினோம். நான் இருளர் குழுவில் உறுப்பினராக உள்ளேன். அரசு உதவியுடன் எங்கள் குழுக்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு வனத்தோட்டத்துக்குச் சொந்தமான முந்திரித் தோப்பைக் குத்தைக்கு எடுத்துப் பராமரித்து சாகுபடி செய்ய நினைத்து வனத்தோட்ட அதிகாரிகளை அணுகினோம். ஆன்லைன் மூலம் மட்டுமே டெண்டர் நடத்தப்படும் ஏலத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் ரூ 4.5 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்றனர்.

முந்திரி அறுவடை
முந்திரி அறுவடை

எங்களிடம் போதுமான பணம் இல்லை. என்ன செய்வதென தெரியாமல் கையைப் பிசைந்தபடி திகைத்து நின்றோம். மூன்று குழுக்களைச் சேர்ந்த 80 பெண்களின் எதிர்காலம் இதில் அடங்கியிருக்கிறது. டெண்டரை எடுக்கவில்லை என்றால் எங்களது நிலை கேள்விக்குறிதான் என்ற சூழல் நிலவியது. தொடர்ந்து முயற்சி செய்தோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையில் உதவி கேட்டோம்.

எங்களுடைய கோரிக்கை கலெக்டர் ரமண சரஸ்வதி மூலமாக அரசு கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை எங்களுக்குச் சிறப்பு நிதியாக ரூ 5 லட்சம் வழங்கியது. வெளிப்படையான ஆன்லைன் டெண்டர் நடத்தப்பட்டதில் முந்திரித் தோட்டத்தை நாங்கள் குத்தகைக்கு எடுத்தோம்.

சுய உதவிக்குழுவில் உள்ள எண்பது பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முந்திரி மரங்களைப் பராமரிக்கக் கடுமையாக உழைத்தோம். விளைச்சல் அதிகரிக்கத் தேவையானவற்றைச் செய்தோம். பெரும்பாலான நாள்கள் முந்திரித் தோப்புக்குள்ளேயே கிடந்தோம். அதன் பலனாக முந்திரி நல்ல விளைச்சல் காண மகிழ்ச்சியாக அறுவடை செய்தோம்.

மொத்தம் 7,600 கிலோ முந்திரி மகசூல் கிடைத்தது. இதன் மூலம் ரூ 9.5 லட்சம் வருமானம் கிடைத்தது. வேலி அமைக்க, உரம் உள்ளிட்ட பராமரிப்பு என மொத்தம் 6.2 லட்சம் செலவு போக 3.5 லட்சம் லாபம் கிடைத்தது. பழங்குடியினப் பெண்களான நாங்கள் எங்க வாழ்க்கை முன்னேற கூட்டாகச் சேர்ந்து உழைத்தோம். அரசு பெரிய மனசுடன் உதவி செய்ததில் முந்திரி எங்களுக்கான முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளது.

முந்திரி அறுவடையில் பெண்கள்
முந்திரி அறுவடையில் பெண்கள்

அரசு அதிகாரிகள், மற்ற சுய உதவிக் குழுக்களுக்கும், பெண்களுக்கும் நீங்கள் முன்மாதிரியாக மாறியிருக்கிறீர்கள் என எங்களைப் பாராட்டினர். ஆர்வத்தை அறிந்து, நிலையை உணர்ந்து அரசு சார்பில் செய்யக்கூடிய உதவிகளைச் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. இதையே எங்களுக்கான அடையாளமாக்கி வாழ்வில் மேம்படுவோம்” என மகிழ்ச்சியுடன் முடித்தார்.