Election bannerElection banner
Published:Updated:

`மணல் கொள்ளையைத் தடுத்தோம்; அலுவலகத்தையே எரித்தனர்!'- சமூகப் பிரச்னைகளுக்கு போராடும் பெண்கள் இயக்கம்

 கோரிக்கையை எழுப்பும் பெண்கள்
கோரிக்கையை எழுப்பும் பெண்கள் ( நா.ராஜமுருகன் )

``பெண்களால் நடத்தப்பட்ட போராட்டம் என்பதால், அதன் வீரியம் அதிகமா இருந்தது. அதன் காரணமாக, மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எங்கள் மீது கோபப்பட்டு, `சுவாதி பெண்கள் இயக்க' கட்டடத்தை எரித்தார்கள்." - கிறிஸ்டினா

பொதுவாக, பெண்கள் இயக்கத்தை வழிநடத்துபவர்கள் பெண் பாதுகாப்பு, பெண் கல்வி என்று பெரும்பாலும் பெண்களின் நலன் சார்ந்தே இயங்குவார்கள். ஆனால், கரூர் மாவட்டத்தில் உள்ள `சுவாதி பெண்கள் இயக்கம்' என்ற அமைப்பில் உள்ள பெண்கள், விவசாயப் பிரச்னைகளுக்காகப் போராடுவது, மணல் கொள்ளையைத் தடுப்பது என்று மாறுபட்டுச் செயல்பட்டு வருகிறார்கள்.

மேடையில் பெண்கள்
மேடையில் பெண்கள்
நா.ராஜமுருகன்

27,000 பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பினர் ஒன்றுகூடி, தேர்தலையொட்டி அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 31 வருடங்கள் ஆனதை சிறப்பிக்கும் வகையில், பெண்கள் தினத்தையொட்டி கரூரில் உள்ள ஒரு திருமண மகாலில் நடைபெற்ற விழாவில், பெண்கள் திரளாகக் கலந்துகொண்டு, பல முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறார்கள்.

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, குடும்ப வன்முறைகளைத் தடுப்பது, கல்வி நிலையங்கள், பொது இடங்கள், பணியிடங்கள் எனப் பல இடங்களில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியளிப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து, பெண்கள் மீதான வன்முறைகளுக்கு மது முக்கியப் பங்கு வகிப்பதால், மதுக்கடைகளை அரசு மூட வேண்டும், சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் விலை உயர்வு செய்த மத்திய அரசுக்குக் கண்டனம் என்று பல்வேறு விஷயங்களைத் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நிகழ்வில் கலந்துகொண்ட பெண்கள்
நிகழ்வில் கலந்துகொண்ட பெண்கள்
நா.ராஜமுருகன்

மேலும், `பெண் விவசாயிகளுக்கு, `விவசாயி' என்ற அங்கீகாரம் தர வேண்டும், அவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் மற்றும் விவசாய இடுபொருள்களுக்கான மானியத்துடன்கூடிய நிதியுதவி அளிக்கப்பட வேண்டும், விவசாயிகளை நசுக்கும் சட்ட மசோதாவான 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்க வேண்டும்' என்று விவசாயிகள் நலன் சார்ந்த கோரிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகளுக்கு வைத்திருக்கிறார்கள். அதோடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுகள் கண்காணிக்கப்பட்டு, தடுக்கப்பட்டு, ஊழலற்ற, முறைகேடுகள் அற்ற நேர்மையான தேர்தலை நடத்திட, தேர்தல் ஆணையம் முழுப் பொறுப்பேற்று செயல்பட வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையையும் முன் வைத்து, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

இதுசம்பந்தமாக, `சுவாதி பெண்கள் அமைப்பு' நிறுவனர் மற்றும் செயலாளரான கிறிஸ்டினாவிடம் பேசினோம்.

``இந்த இயக்கத்தை ஆரம்பித்து, 31 வருடங்கள் ஆகின்றன. முதலில் இந்த இயக்கத்தை ஆரம்பித்தபோது, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், பாலியல் வக்கிரங்களை தடுக்கத்தான், இந்த அமைப்பை ஆரம்பித்தோம். ஆனால், போகப் போக இந்த அமைப்பின் தேவை மற்றும் நோக்கத்தை விரிவுபடுத்தினோம். தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்தன. அதற்குக் காரணம் என்ன என்று ஆய்வு செய்தபோது, மது அரக்கன் முன்னால் வந்து நின்றான். அதனால், தமிழ்நாடு முழுக்க, `தமிழ்நாடு மது ஒழிப்பு இயக்கத்தை' ஆரம்பித்து, மதுக்கொள்கையை மாற்ற வலியுறுத்தி, பலகட்டப் போராட்டங்களை முன்னெடுத்தோம். இதன் காரணமாக, தமிழக அளவில் பல மதுக்கடைகள் மூடப்பட்டன. அதேபோல், 1990-களுக்குப் பிறகு, கரூரில் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டன.

கிறிஸ்டினா
கிறிஸ்டினா
நா.ராஜமுருகன்

இங்கே பாயும் காவிரி, அமராவதி போன்ற ஆறுகளில் மணல் கொள்ளை நடந்தது. இதனால், விவசாயம் பாழ்பட்டது. நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குப் போய், குடிநீர் பிரச்னையால் மக்கள் அல்லாட நேர்ந்தது. அதற்கு எதிராக, பல போராட்டங்களை நடத்தினோம். பெண்களால் நடத்தப்பட்ட போராட்டம் என்பதால், அதன் வீரியம் அதிகமா இருந்தது. அதன் காரணமாக, மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எங்கள் மீது கோபப்பட்டு, `சுவாதி பெண்கள் இயக்க' கட்டடத்தை எரித்தார்கள்.

ஆனால், நாங்கள் அசரவில்லை. 2004-ம் ஆண்டு, நத்தமேடு பகுதியில் காவிரியின் குறுக்கே மணல் கொள்ளையை அரங்கேற்றுவதற்காக சாலை அமைத்தார்கள். அதுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம். போராட்டம் நடத்திய 332 பேரை கைது செய்தார்கள். அதில், 16 பேர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிந்தார்கள். 20 நாள்கள் ஜெயிலில் இருந்தோம். ஆனாலும், எந்த அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல், தொடர்ந்து மணல் கொள்ளையை எதிர்த்து வந்தோம்.

2012-ம் ஆண்டு, காவிரி கரையோரம் உள்ள மாவட்டங்களில் உள்ள பொதுநல அமைப்புகளோடு சேர்ந்து, மணல் குவாரிகளை மூட வலியுறுத்தி, பொதுநல வழக்கு போட்டோம். இதனால், காவிரி கரையோரம் உள்ள மாவட்டங்களில் இயங்கி வந்த 53 மணல் குவாரிகள் மூடப்பட்டன. கரூர் மாவட்டத்தில் மட்டும் 7 குவாரிகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது.

நிகழ்வில் பேசும் கிறிஸ்டினா
நிகழ்வில் பேசும் கிறிஸ்டினா
நா.ராஜமுருகன்
`ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட அப்பா, அண்ணனைக் கொன்னாங்க... இப்போ நான் வந்திருக்கேன்!' - அன்னலட்சுமி

தொடர்ந்து, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற எங்கள் அமைப்பு சார்பாக, 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கரூர் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டோம். 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கரூர், திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினோம். தொடர்ந்து, வரும் தேர்தலில் வாக்காளர்களுக்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம். நேர்மையான ஆட்சி நடத்துபவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த, வாக்காளர்கள் முயல வேண்டும் என்பதை பல்வேறு வழிகளில் வழியுறுத்தி வருகிறோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய, இந்த அமைப்பின் பொருளாளர் மஞ்சுளா, ``எங்கள் அமைப்பு சார்பில், பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை இயற்ற வைப்பது, சட்டத்திருத்தங்கள் செய்வது, ஊடகங்கள் மூலம் பெண்ணிய கருத்தாக்கங்களைப் பதிவு செய்வது, இயற்கை வளங்களையும் விவசாயத்தையும் பாதுகாப்பது எனப் பன்முக அணுகுமுறைகள் மூலம் சில விளைவுகளை ஏற்படுத்தி வருகிறோம். சமூகத்தில் சரிபாதியான பெண்கள், இரண்டாம்கட்ட நிலையிலேயே இருக்கின்றனர். அவர்களுக்கு, இன்னும் நிலைத்த, நீடித்த முன்னேற்றத்தை நோக்கிய மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காக, நாங்கள் கடுமையாகப் போராடி வருகிறோம். வரும் சட்டமன்றத் தேர்தலை பெண்கள் மட்டுமல்ல, ஆண் வாக்காளர்களும் தங்களுக்கு ஒரு புதிய மாற்றத்துக்கான விடிவை ஏற்படுத்தும் ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்.

மஞ்சுளா
மஞ்சுளா
நா.ராஜமுருகன்

வியாபாரமாக்கப்படும் கல்வி, பிரிவினையைத் தூண்டும் போக்கு, ஆணாதிக்க சிந்தனைகளை உறுதிப்படுத்தும் பிற்போக்குவாதங்கள், தொடரும் சாதிய வன்கொடுமைகள், அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம், நலிவடையும் தொழில்கள், நசுக்கப்படும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கான காரணிகளை, காரணமானவர்களை இனம் கண்டு, அவர்களுக்கு எதிராக நாம் சமர் செய்ய வேண்டும். அதற்கு, நமது வாக்குரிமையை விற்றுவிடாமல், மக்கள் நலனுக்காக அக்கறையுடன் தொண்டாற்றும் நேர்மையானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த இருக்கிறோம்" என்றார்.

களத்துக்கு வரட்டும் பெண் சக்தி!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு