Published:Updated:

`எங்களால நிச்சயம் செய்ய முடியும்னு தோணுச்சு'- மயானத்தில் வேலை பார்க்கும் பெண்கள்!

Namakkal E Cemetery
Namakkal E Cemetery ( ர.ரகுபதி )

"இந்த உலகத்துல எந்த ஒரு வேலையையும் பிடிச்சு செஞ்சோம்னா, அதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் இருக்க முடியாது" என்று தன் புன்சிரிப்புடன் தொடங்குகிறார்கள் மலர்க்கொடியும் கலாராணியும்.

பெண்கள் எப்போதும் மென்மையானவர்கள் என்ற கருத்து ஒரு காலத்தில் நிலவியது. விம்பிள்டன் டென்னிஸ் முதல், விண்வெளி வரை பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். இந்த வேலைகளுக்கு மத்தியில் சுடுகாட்டில் பிணங்களை எரியூட்டும் வேலையையும் எங்களால் செய்ய முடியுமென சாதிக்கிறார்கள் நாமக்கல்லைச் சேர்ந்த இரண்டு பெண்கள்.

Namakkal E Cemetery
Namakkal E Cemetery
ர.ரகுபதி

மலர்க்கொடியும் கலா ராணியும் நாமக்கல் நகராட்சி மின் மயானத்தில் ஊழியர்களாக வேலை பார்க்கின்றனர். "இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட பிணங்களை எரித்துள்ளோம். ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கம், பயம் இருந்தாலும், போகப் போக பழகிருச்சு. முதல்ல இங்க பூங்கா வேலைக்குதான் வந்தோம். அப்போதான் இந்த வேலைக்கு ஆளுங்கள தேடிட்டு இருந்தாங்க. இந்த உலகத்துல ஆம்பளைங்க செய்யுற எல்லா வேலையையும் பெண்களும் செஞ்சிட்டு வராங்க. இத மட்டும் ஏன் வேண்டாம்னு சொல்றோம்? எங்களால நிச்சயம் செய்ய முடியும்னு தோணுச்சு.

யுனைடெட் வெல்வர் டிரஸ்ட் என்கிற தனியார் தொண்டு நிறுவனம்தான் மின் மயானங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்துட்டு வர்றாங்க. அவர்களை அணுகினோம். ஒரு பெண் இப்படிக் கேட்டதில் அவர்களுக்கு அதிர்ச்சி, பிறகு ஒப்புக்கிட்டாங்க" என்றபடி மலர்க்கொடி முடிக்க, கலா ராணி தொடர்ந்தார். ``எங்க ஒவ்வொரு குடும்பமும் ரொம்ப கஷ்டப்படுற குடும்பம்தான். நாங்க எல்லாரும் கூலி வேலை, காயலாங் கடைன்னு பல இடத்துல வேலை செஞ்சிருக்கோம். இந்த வேலையில சேர்ந்து ஆறு வருஷம் முடியப்போகுது.

பிணங்களை எரிக்குறது எங்களுக்குக் கிடைச்ச கௌரவமா நினைக்கிறோம்.
malarkodi
malarkodi
ர.ரகுபதி

பிணம் எரிக்கறது கடவுளுக்கு நாம செய்யுற தொண்டுதான். சில நேரத்துல குழந்தைங்களை கொன்னுட்டு, தாயும் தற்கொலை பண்ணுனது, குடும்பமே தற்கொலை செய்துகொல்றதுனு பல விஷயங்கள் மனசை ரொம்ப பாதிச்சிருச்சு. மனுஷன்களோட தலைவிதி என்னவோ, அதுதான் நடக்கும். அது எப்போ வேணாலும் இருக்கும். அதனால வாழுற வரைக்கும் மத்தவங்களுக்கு ஏதாவது உருப்படியா செய்ங்க, இல்லையா யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாம இருங்க, அதுவே போதும்.

நாங்க கடைசியா சொல்ற ஒரே விஷயம் இதுதான், இன்னும் பல இடத்துல பெண்களை ஆண்களுக்கு நிகராக மதிக்கறது இல்ல, அது முதல்ல ஒழியணும். பிணங்களை எரிக்குறது எங்களுக்குக் கிடைச்ச கௌரவமா நினைக்கிறோம். பொண்ணுங்களும் எல்லா துறையிலயும் இப்போ சாதிச்சுட்டு வர்றாங்க. படிச்ச பொண்ணுங்க படிச்ச படிப்பை வச்சு வேலைக்குப் போறாங்க. படிக்காதவங்க சுயமா ஏதாவது தொழிலைக் கத்துக்கிட்டு ஜெயிங்க, ஆண்களால செய்ய முடியுற எல்லா வேலையையும் பெண்களாலும் செய்ய முடியும், அதனால ஜெயிங்க” என்றார்.

kala rani
kala rani
ர.ரகுபதி

இவர்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தாலும், அதைத் துணிச்சலோடு எதிர்கொண்டு இப்பணியைச் செய்துவருகிறார்கள். நல்ல சம்பளம், நிறைவான மனநிறைவு கிடைப்பதால் இவ்வேலையைவிட மனமில்லை என்கின்றனர். இவர்களின் துணிவு நம் அணைவருக்குமானது, நம்பிக்கை பரவட்டும்!

அடுத்த கட்டுரைக்கு