Published:Updated:

`விருப்ப உறவு கொள்ளும் மைனர்களை போக்ஸோவில் தண்டிக்கலாமா?' - ஆய்வு செய்யும் உச்சநீதிமன்றம்

Supreme Court
Supreme Court ( Vikatan )

சுயவிருப்பத்துடன் உறவு கொள்ளும் 18 வயதுக்குக் குறைந்த மைனர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் சம்மதித்திருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர் பள்ளியில் படிக்கும்போதே காதல் வயப்பட்டு விருப்ப உறவு கொண்டனர். 2014-ம் ஆண்டு இச்சம்பவம் நடந்தபோது, இருவரும் மைனர்களாக இருந்தனர். அந்தப் பையன் தன் காதலியிடம், அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி உறவு கொண்டிருக்கிறார். ஆனால் பின்னர், தன் பெற்றோர் திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை என்று கூறி அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதையடுத்து அப்பெண் இது தொடர்பாகத் தனது 17-வது வயதில், 2015-ம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸில் பாலியல் வன்முறை புகார் செய்தார்.

Court (Representational Image)
Court (Representational Image)

அப்போது பையனுக்கு 18 வயதாகி இருந்தது. அதை விசாரித்த விசாரணை நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்ட பையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. விசாரணையின்போது, புகார் செய்த பெண், தான் விருப்பப்பட்டுத்தான் தன் காதலனுடன் உறவு வைத்துக்கொண்டதாகத் தெரிவித்தார். அப்படி இருந்தும் விசாரணை நீதிமன்றம் அதை ஏற்காமல் குற்றவாளிக்கு 2019-ம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக அப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார். அதில் அப்பெண், தான் விருப்பப்பட்டுத்தான் உறவு கொண்டதாகத் தெரிவித்தார். ஆனால் அதை, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட வாலிபர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மனு செய்யப்பட்டது.

இம்மனுவில், ``விருப்ப உறவில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பது போக்ஸோ சட்டத்தின் நோக்கம் இல்லை. தானும், சம்பந்தப்பட்ட பெண்ணும் பள்ளியில் படிக்கும்போதே பழகினோம். விருப்பப்பட்டுத்தான் உறவு கொண்டோம். சம்பவம் நடந்தபோது இருவரும் மைனர்கள். எனவே, விருப்ப உறவில் ஈடுபடும் மற்றும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் மைனரை போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியுமா?" என்று மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo by Bill Oxford on Unsplash
இந்தியாவில் பாலியல் இசைவு வயது 18... இது சரிதானா... அல்லது மாற வேண்டுமா? - ஓர் அலசல்

இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ``மைனர்கள் விருப்ப உறவு கொண்டால் அவர்களுக்கு போக்ஸோ சட்டத்தில் தண்டனை வழங்க முடியுமா என்பதை கோர்ட் தெளிவுபடுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து இப்பிரச்னை குறித்து விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தெரிவித்தது. அதுவரை மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

தற்போது வரை, 18 வயதுக்குக் குறைந்த பெண் விருப்ப உறவு கொண்டாலும், அது குழந்தைக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்காகவே பதிவு செய்யப்படுகிறது. எனவே, இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு