Published:Updated:

``இப்பவும் அந்தக் குழந்தையோட பொறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடுறோம்" - வாடகைத்தாயின் வலி

வாடகைத் தாய்

``வாடகைத்தாய் பத்தி அந்த புரோக்கர் சொன்னதும், எனக்கு முகமே சுருங்கிப் போச்சு. ஏதோ தப்பான வேலைக்குக் கூப்பிடுறாங்கனு மனசு படபடத்துச்சு. முடியாதுனு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்...’’

``இப்பவும் அந்தக் குழந்தையோட பொறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடுறோம்" - வாடகைத்தாயின் வலி

``வாடகைத்தாய் பத்தி அந்த புரோக்கர் சொன்னதும், எனக்கு முகமே சுருங்கிப் போச்சு. ஏதோ தப்பான வேலைக்குக் கூப்பிடுறாங்கனு மனசு படபடத்துச்சு. முடியாதுனு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்...’’

Published:Updated:
வாடகைத் தாய்

மகப்பேறு என்பது இந்தச் சமுதாயத்தால் மிகவும் கொண்டாடப்படும் ஒன்று. கணவன் பக்கம் குறை இருந்தாலும் பெண்களைத்தான், `மலடி', `குழந்தை பெத்துக்க லாயக்கு இல்லாதவ', `ராசியில்லாதவ' போன்ற வார்த்தைகளால் இந்தச் சமுதாயம் வசைபாடும். இது ஒருபுறம் இருக்க, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்று இன்று எத்தனையோ நோய்கள் பெண்களைத் தாக்கி, அவர்களைத் தாய்மைநிலை அடையவிடாமல் செய்கிறது.

வாடகைத்தாய்
வாடகைத்தாய்

தாய்மை அடையும் நிலையை இழந்த பிறகும், ஒரு பெண் வாடகைத்தாய் மூலம் தாயாக முடியும். எத்தனையோ பெண்கள் வாடகைத்தாய் மூலம் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். அதாவது, குழந்தையில்லாத தம்பதியின் விந்து மற்றும் கருமுட்டையைச் சேகரித்து, கரு உருவாக்கப்படும். பின்னர் அந்தக் கரு, ஒரு வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் செலுத்தப்படும். அந்த வாடகைத்தாயின் வயிற்றில் கரு வளர்ந்து, ஒன்பது மாத இறுதியில் பிரசவம் நிகழும். இப்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் இப்போது பிரபலங்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

வாடகைத்தாய் முறை மூலம் தாய்மைநிலை அடைய முடியாத ஒரு பெண், `அம்மா' எனும் அந்தஸ்தைப் பெறுகிறார். இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான், மறுப்பதற்கில்லை. ஆனால், இப்படி வாடகைத்தாயாக வருபவர்களுக்கான கட்டணமும் சட்டங்களும் இன்னும் முறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன. வாடகைத்தாயாக வருபவர்களுக்கு என்று சட்டங்கள் இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன. வாடகைத் தாயாக வருபவர்களுக்கு பல லட்சங்கள் என்று பேசி, அதில் சில ஆயிரங்களே கொடுக்கப்படுகிறது. பணத்தை மையப்படுத்தி அழைத்து வரப்படுவர்கள் பண விஷயத்திலேயே ஏமாற்றப்படுகிறார்கள். வாடகைத்தாயாக இருந்து, குழந்தை பெற்ற பின் அந்த உணர்வு எப்படி இருக்கும், வாடகைத்தாயாக இருக்க முன் வருபவர்கள் என்ன சிக்கல்களை எல்லாம் கடந்து வருகிறார்கள் என்பதை வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுத்த சுமதி அக்கா நம்மிடம் பகிர்கிறார்...

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

``எனக்கு சொந்த ஊரு சென்னை, வியாசர்பாடி. பத்து வருசத்துக்கு முன்னாடி நான் வாடகைத்தாயா இருந்தேன். எனக்கு நாலு பசங்கம்மா. வீட்டுக்காரரு ஆட்டோ டிரைவர். குடும்பத்துல ரொம்ப கஷ்டம். கடன்காரங்க வீட்டுக்கு முன்னாடி வந்து, டெய்லி சண்டை போடுவாங்க. வாங்குன கடன் என்னமோ கொஞ்சம் தான், அதுக்கான வட்டிக்காசு அசலை தாண்டியிருச்சு. கூலி வேலைக்குப் போனேன். அம்பது, நூறு கிடைக்கும். அதை வெச்சு குடும்பத்தைக் கவனிக்குறதா, கடனைக் கட்டுறதா?

தினமும் போராட்டமான வாழ்க்கை. புள்ளைங்களுக்கு முழுசா மூணு நேரம் சாப்பாடு போடுறதே சிரமமா இருந்துச்சு. அப்போதான் எங்க ஏரியால இருந்த ஒரு பாட்டி, வாடகைத்தாய் பத்தி என்கிட்ட சொன்னாங்க. ஒரு புரோக்கர்கிட்டயும் கூட்டிட்டுப் போனாங்க. பாட்டி சொன்னப்போ எனக்கு முழுசா புரியல. வாடகைத்தாய் பத்தி அந்த புரோக்கர் சொன்னதும், எனக்கு முகமே சுருங்கிப் போச்சு. ஏதோ தப்பான வேலைக்குக் கூப்பிடுறாங்கனு மனசு படபடத்துச்சு. முடியாதுனு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். ஆனா, `ரெண்டு லட்ச ரூபா தர்றோம்'னு சொன்னாங்க.

வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் அதே யோசனையா இருந்துச்சு. ரெண்டு லட்ச ரூபா கிடைச்சா கடனை அடைச்சுட்டு நிம்மதியா வாழலாம்ங்கிற எண்ணம் மனசுக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு. வீட்டுக்காரர்கிட்ட சொன்னேன். `வேற ஒருத்தனுக்கு புள்ள பெத்து குடுக்கப்போறேன்னு சொல்றியே உனக்கு வெட்கமா இல்லையா'னு திட்டினாரு. ரெண்டு வாரம் என்கிட்ட பேசவே இல்ல. அந்த நேரத்துல அந்த ரெண்டு லட்ச ரூபா எனக்கு முக்கியமா இருந்துச்சு. அதனால் வீட்டுக்காரர்கிட்ட திரும்பி திரும்பி பேசிக்கிட்டே இருந்தேன். ரெண்டு மாசம் கழிச்சு சம்மதம் சொன்னாரு. ஆனா, குழந்தைகளுக்குப் புரிய வைக்கதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. 

வாடகைத் தாய்
வாடகைத் தாய்

ஊசி மூலமா கருமுட்டையைச் செலுத்துனாங்க. வாடகைத் தாயாக இருக்குறவங்க ஒன்பது மாசமும் ஆஸ்பத்திரிலதான் இருக்கணும்னு சொன்னாங்க. என் குடும்பம், குழந்தைகளை விட்டுட்டு ஒன்பது மாசம் அவங்க சொன்ன ஆஸ்பத்திரில இருந்தேன். புள்ளைங்ககிட்ட எனக்கு உடம்பு முடியலைனு சொல்லிட்டோம். அக்கம் - பக்கத்துல, எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்னு சொல்லி சமாளிச்சேன். ஆஸ்பத்திரியில என்னோட வீட்டுக்காரரும், புள்ளைங்களும் என்ன பார்க்க வந்தாகூட வெளிய விடமாட்டாங்க. ஜன்னல் வழியாதான் பார்ப்பேன். வயித்துக்குள்ள குழந்தை இருந்த பத்து மாசமும் எனக்கு அப்படி ஒரு கவனிப்பு. மூணு நேரமும் நல்ல சாப்பாடு கிடைச்சது. நிறைய பழங்கள் கொடுத்தாங்க. எங்கள மாதிரி ஏழைங்க நினைச்சுப் பார்க்க முடியாத பிரசவ வாழ்க்கை அது.

ஆபரேஷன் மூலமா ஒன்பதாவது மாசம் குழந்தையை வெளிய எடுத்துட்டாங்க. கண்ணு முழிச்சுப் பார்த்தப்போ குழந்தை தொட்டிலுல இல்ல. காசு வாங்கிட்டு குழந்தை பெத்துக் கொடுத்தாலும் ஒன்பது மாசம் என் கூடவே இருந்த உசுராச்சேம்மா? அழுகைய அடக்க முடியல. `புள்ள ஆம்பளையா? பொம்பளையா'னு கேட்டேன். `அதெல்லாம் கேட்க மாட்டீங்கனு கையெழுத்து போட்டுக் கொடுத்துருக்கீங்க'னு நர்ஸ் அம்மா கத்துச்சு. அதுவும் சரிதான்னு எனக்கும் தோணுச்சு.

ஆப்ரேஷன் முடிச்சு குழந்தை பொறந்ததுக்கு அப்புறம், அங்க இருந்தவங்க என்னை மனுஷியாகூட மதிக்கல. தையல் போட்ட இடம் வலிக்குதுனு சொன்னாகூட, `காசு வாங்கிட்டுதான பெத்தீங்க'னு மனசாட்சியே இல்லாம பேசி கேவலப் படுத்துனாங்க. அந்த நேரத்துல இருந்த உடல் வலியையும், மனசு வலியையும் எத்தன லட்சம் கொடுத்தாலும் சரிசெய்ய முடியாதும்மா. பால் கட்டி அழுதேன். மாத்திரை கொடுத்து சமாதானப்படுத்துனாங்க. உடம்பு வலி குறைஞ்சது. ஆனா, மனசு வலி..?' கண்கள் கலங்கி அமைதியாகிறார். வடிந்த கண்ணீரை முந்தானையில் துடைத்துக்கொண்டு, மீண்டும் பேச ஆரம்பித்தார்.

குழந்தை
குழந்தை

`எனக்குள்ள இருந்த உசுரு, என்கூட இல்லைங்கிறதை என்னால ஏத்துக்கவே முடியல. இப்போ குழந்தை பொறந்து பத்து வருஷம் ஆச்சு. குழந்தையோட முகத்தைக்கூட நான் பார்த்தது இல்ல. ஆம்பளப் புள்ளையா, பொம்பளப் புள்ளையானுகூட தெரியாம தான், காசுக்காக பெத்துக் கொடுத்தேன் தான். ஆனா, என்னோட தாய்மை உணர்வு நிஜமானது. குழந்தை எங்க யார்கிட்ட இருக்குதுனு தெரியாது. இப்பவும் அந்தக் குழந்தை பொறந்த தேதியில எங்க வீட்ல நாங்க கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடுறோம். எங்க இருந்தாலும் அந்தப் புள்ள நல்லா இருக்கட்டும்னுதான் இப்போகூட சாமிகிட்ட வேண்டிப்பேன். 

காசுக்காகதான் குழந்தை பெத்துக் கொடுக்க சம்மதிச்சேன். ஆனா, பேசுன காசைக்கூட கொடுக்கலம்மா. புரோக்கர்கிட்ட கேட்டா, டாக்டர் எடுத்துக்கிட்டாங்க, நர்ஸ் எடுத்துக்கிட்டாங்கனு சொல்லி குறைச்சலான காசைதான் தந்தாங்க. என்ன மாதிரி நிறைய பொண்ணுங்க ஏமாந்து போயிருக்காங்க. எங்க போயி கேட்க முடியும் சொல்லுங்க. கிடைச்ச காசுல வீட்டுக் கடனை அடைச்சேன். என்னால ஒரு பொண்ணுக்கு அம்மானு அந்தஸ்து கிடைச்சுருக்குங்கிற சந்தோஷம் மட்டும்தான் மிச்சம்..." என்றார் சுமதி அக்கா.