Published:Updated:

``தவறுதலாக `லைக்’ செஞ்சுட்டேங்க” - நடிகை ஸ்வரா பாஸ்கரிடம் மன்னிப்பு கேட்ட பாரதிய ஜனதா எம்.பி

ஐஷ்வர்யா

அண்மையில் ட்விட்டரில் தனது புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் ஸ்வரா பாஸ்கர், அந்தப் புகைப்படத்துக்குப் பதிலளித்திருந்த பொதுநபர் ஒருவர் ‘பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன்’ என்கிற ரீதியில் பதிவிட்டிருந்தார்.

swara bhaskar
swara bhaskar

"Basically, if I’m not involved in a twitter controversy once a week, assume I’m dead!!! " என்று தொடங்குகிறது நடிகை ஸ்வரா பாஸ்கரின் ட்விட்டர் பக்கம். இந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருப்பதுபோலவே அண்மையில் ஒரு ட்வீட் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகை ஸ்வரா பாஸ்கர். தனு வெட்ஸ் மனு, ராஞ்சனா உள்ளிட்ட பல்வேறு இந்திப் படங்களில் நடித்தவர். பெரும்பாலும் இரண்டாவது கதாநாயகி கதாபாத்திரங்களையே ஏற்று நடித்தாலும் அதில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர்.

swara bhaskar
swara bhaskar

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் கன்ஹையா குமாருக்காகத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டவர். `மீ டு’ பிரளயம் சமூக வலைதளங்களைச் சுனாமியாகச் சுழற்றியடித்தபோது பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்காகவும் குரலெழுப்பியவர். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவத்’ திரைப்படம் வெளியான தருணத்தில் அதைப் பார்த்துவிட்டு, ‘பெண்களுக்கு எத்தனையோ ஆற்றல் இருந்தும் அவர்களை ‘கற்பு’ என்னும் சொல்லுக்குள் மட்டும் அடக்கிவிடுவது துரதிர்ஷ்டவசமானது’ என்று சஞ்சய் லீலா பன்சாலிக்கு வெளிப்படையாகவே கடிதம் எழுதியவர். `வீர் தே வெட்டிங்’ என்னும் இந்தித் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி ஒன்றில் நடித்ததற்காக ‘இந்திய கலாசாரத்தை அவமதித்துவிட்டார்’ என்று அவர் மீது பாரதிய ஜனதா கட்சியினர் உட்பட பலர் விமர்சனத்தை முன் வைத்தனர். 

இந்த நிலையில், அண்மையில் ட்விட்டரில் தனது புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார் ஸ்வரா பாஸ்கர். அந்தப் புகைப்படத்துக்குப் பதிலளித்திருந்த பொதுநபர் ஒருவர் `பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன்’ என்கிற ரீதியில் பதிவிட்டிருந்தார்.

Swara Bhaskar Tweet
Swara Bhaskar Tweet

அந்த பின்னூட்டத்துக்கு பாரதிய ஜனதா எம்.பி ஒருவர் லைக் செய்திருந்தது தற்போது சர்ச்சைக்குள்ளாகியி ருக்கிறது. லைக் செய்த பாரதிய ஜனதா எம்.பி லல்லுசிங், அயோத்யாவைச் சேர்ந்தவர். ஃபரிதாபாத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருக்கிறார்.

பின்னூட்டத்துக்கு லல்லுசிங் லைக் செய்திருந்தது ட்விட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து ஸ்வரா பாஸ்கர் ட்விட்டரிலேயே கடிதம் ஒன்றையும் லல்லு சிங்குக்கு எழுதியிருந்தார்.

ராமர் உரிமைகளுக்கான அடையாளமாக இருக்க வேண்டுமேயொழிய வன்முறையாளர்களின் அடையாளமாக இருக்கக் கூடாது.

அதில், ``மாண்புமிகு எம்.பி லல்லுசிங் அவர்களுக்கு... மரியாதைக்குரிய ராமரின் நகரமான அயோத்தியை உள்ளடக்கியது உங்கள் தொகுதி. ஆனால், என்னுடைய பதிவின் கீழ் உள்ள பின்னூட்டத்துக்கு நீங்கள் லைக் செய்திருப்பது, நாடாளுமன்றத்தில் ஆபாசப்படம் பார்ப்பதை அனுமதிக்கும் இந்தத் தேசத்தின் பாலியல் வன்கொடுமைச் சிந்தனையை நாட்டின் சைபர் சட்டங்களுக்கு எதிராக அங்கீகரிப்பதாக இருக்கிறது. நீங்கள் என் தந்தையின் வயதுடையவர், இந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் ஓர் அங்கமும் கூட. உங்கள் நடவடிக்கை பெண்களை மதிக்கும் வகையிலாக இருக்க வேண்டும். ராமர் உரிமைகளுக்கான அடையாளமாக இருக்க வேண்டுமேயொழிய வன்முறையாளர்களின் அடையாளமாக இருக்கக் கூடாது. உங்களது இந்த நடவடிக்கை உங்களுக்கும் உங்கள் வயதுக்கும் ஒப்பானதாக இல்லை.

நன்றி

ஸ்வரா பாஸ்கர்” என்று எழுதியிருந்தார்.

அதற்கு பதில் விளக்கம் அளித்த எம்.பி லல்லு சிங். ``உங்கள் பதிவை நேற்று ஸ்க்ரால் செய்துகொண்டிருந்தபோது கைத்தவறுதலாக அந்த லைக் இடப்பட்டிருக்கிறது. அதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். எவர் உணர்வுகளையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. எனது சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்வே அதற்குச் சான்று” எனப் பதில் அளித்துள்ளார்.

Lallu Singh
Lallu Singh

பெண்களை அவமதித்து கீழ்த்தரமாக நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருநபர் மனதார மன்னிப்புக் கேட்பது வியக்கத்தக்கது என லல்லுசிங்குக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. கிரிமினல் சட்டத்திருத்தம் 2013-ன்படி சமூக வலைதளங்களில் பெண்களிடம் பாலியல் ரீதியான சொற்களை உபயோகிப்பதும் பாலியல் வன்கொடுமையின் (Rape) கீழான குற்றமாகவே கருத்தப்படும் எனப் பிரிவு 375 மாற்றி அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.