Published:Updated:

`பாலின மற்றும் பால் ஈர்ப்புப் பாகுபாடு கிடையாது!’- முன்னுதாரணமான டாடா நிறுவனம்

டி.சி.எஸ்-ல் ஏற்கெனவே இதுபோன்ற கொள்கை முடிவு அமலில் இருப்பதும், மாற்றுப்பாலினத்தவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு எதிரான கொள்கை முடிவுகள் அமலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

டாடா
டாடா

இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா ஸ்டீல் தனது ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளில் மாற்றுப்பாலினத்தவர்களையும் தன்பால் ஈர்ப்பாளர்களையும் இணைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களில் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் இணையர்களும் அடங்குவார்கள்.

திருநர், தன்பாலின ஈர்ப்பாளர்கள்
திருநர், தன்பாலின ஈர்ப்பாளர்கள்

`பாலின அடையாளத்தாலும் பால் ஈர்ப்பு அடையாளத்தாலும் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்கும்விதத்திலும், அதனால் ஊழியர்களின் திறன் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையிலும் எவரது சுயமரியாதைக்கும் பாதிப்பு இல்லாமல் அனைவரையும் பிரிவினையின்றி ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த உரிமைகள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக' டாடா ஸ்டீல் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி எவ்வித பாலின மற்றும் பால் ஈர்ப்புப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் உடல் பரிசோதனை, மருத்துவம் சார்ந்த சலுகைகள், பிள்ளைகள் தத்தெடுக்கும் காலத்துக்குத் தேவையான விடுமுறை, பேறுகால மற்றும் குழந்தை பெற்றதற்குப் பிறகான விடுமுறை, தேனிலவுக்கான விடுமுறை, டாடா நிறுவன ஊழியர்களுக்கான சிறப்பு விடுமுறை காலத் திட்டம் ஆகியன அமலில் இருக்கும்.

டாடா
டாடா

மேலும், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக 30 நாள்கள் விடுமுறையும் அளிக்கப்படும். டாடாவின் தொழில்நுட்பப் பிரிவு நிறுவனமான டி.சி.எஸ்-ல் ஏற்கெனவே இதுபோன்ற கொள்கை முடிவு அமலில் இருப்பதும், மாற்றுப்பாலினத்தவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு எதிரான கொள்கை முடிவுகள் அமலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.