Published:Updated:

`` `நாப்கின்ல எதுக்கும்மா இங்க் ஊத்துறாங்க?'னு கேட்ட மகனுக்கு என் விளக்கம்..!" - ஆசிரியர் சபரிமாலா

``மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன. என் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. ஆபாசமான விமர்சனங்களும் அதிகம் வருகின்றன."

சபரிமாலா
சபரிமாலா ( Facebook )

நீட் தேர்வுக்கு எதிராக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவர் சபரிமாலா. பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களைச் சந்தித்து பாலியல் கல்வி, நீட் தேர்வை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். சபரிமாலாவிடம் பேசினோம்.

``தற்போதைய உங்களின் செயல்பாடுகள் பற்றி..."

சபரிமாலா
சபரிமாலா

``ஆசிரியராகப் பணியாற்றியபோது கொஞ்சம் சுயநலத்துடன் இருந்தேன். தற்போது என் வாழ்க்கையை, பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காகவே அர்ப்பணிக்கவேண்டும் என நினைக்கிறேன். இந்தக் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி மிகவும் அவசியம். பெண் பிள்ளைகள் மீதான நம்பிக்கையை ஆண் குழந்தைகளிடம்தான் முதலில் விதைக்க வேண்டும். தொலைக்காட்சியில் வரும் விளம்பரத்தைப் பார்த்து, `நாப்கின்ல எதுக்கும்மா இங்க் ஊத்துறாங்க?' என என் மகன் என்னிடம் கேட்கிறான். பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எல்லாம் ஆண் குழந்தைகளிடம் அவரவர்களின் வயதுக்கு ஏற்றபடி விளக்கிக் கூற வேண்டும். நான் என் பிள்ளையிடம் கூறுகிறேன். இதை எல்லா ஆண் குழந்தைகளுக்கும் சொன்னால், பிற்காலத்தில் அவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

`அடிமையாக வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம்?' என முடிவெடுத்து, ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தேன். அதற்காக ஒருபோதும் நான் வருத்தப்படவில்லை. பெருமைப்படுகிறேன்!
சபரிமாலா
சபரிமாலா
சபரிமாலா

பெண் குழந்தைகளுக்கு நிகழும் வன்கொடுமைகளுக்கு எதிராக, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மூன்று நாள்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அதனால் பெரிதாக மாற்றம் கிடைத்துவிடவில்லை. ஆனாலும், என் முயற்சிகளைக் கைவிடமாட்டேன். நீட் தேர்வை எதிர்கொள்வது பற்றியும், நீட் தேர்வு தோல்வியால் துவண்டுவிடக் கூடாது எனவும் மாணவர்களிடம் விழிப்புணர்வு கொடுக்கிறேன். இப்பணிகளுக்காக, 6 - 12-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் எல்லோரையும் சந்தித்துப் பேசவேண்டும் என்பது என் திட்டம். அதற்காக, `வீடு திரும்பா போராட்டம்' ஒன்றை முன்னெடுத்திருக்கிறேன். மாற்று உடை எடுப்பதற்காக மட்டுமே அவ்வப்போது என் வீட்டுக்கு வருகிறேன்."

அந்த நோக்கத்துக்காக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் முழுக்க பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் சென்று இரண்டரை லட்சம் மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில், செய்திகளின் வழி எனக்குத் தெரிந்தவரையில் வன்கொடுமையால் 15 பெண் பிள்ளைகளை இழந்திருக்கிறோம். இப்படிக் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வுகாண தொடர்ந்து பள்ளிகளுக்குச் சென்று இருபால் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். பல்வேறு பள்ளிகளில் பேசிய பிறகு, `இந்த விஷயங்களையெல்லாம் எப்படிப் பேசுவது எனத் தயங்கிக்கொண்டிருந்தோம். இனி நாங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்' எனப் பல ஆசிரியர்கள் முன்வந்து கூறினார்கள்.

``கடந்த இரண்டு ஆண்டுகளில், உங்களின் முயற்சியால் எத்தகைய மாற்றம் நிகழ்ந்துவிட்டதாக நினைக்கிறீர்கள்?"

மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் சபரிமாலா
மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் சபரிமாலா

``ஆசிரியர் பணியிலிருந்து நான் ராஜினாமா செய்த பிறகு தற்போதுவரை `நீட் தேர்வு' விஷயத்தில் வரவேற்கக்கூடிய விஷயம் தமிழகத்தில் நிகழவில்லை. ஜீவித் என்ற மாணவர், தேனி மாவட்டத்திலுள்ள ஓர் அரசுப் பள்ளியில் படித்தவர். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 560 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்றார். அவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும், அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்குத் தேவையான மதிப்பெண் கிடைக்கவில்லை. ஆனாலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து நீட் தேர்வுக்குத் தயாராகிவருகிறார். பலரின் உதவியால் பணத்தை திரட்டி, அவரை தனியார் பயிற்சி மையத்தில் படிக்க வைக்கிறோம். விரைவில் அந்த மாணவரின் மருத்துவக் கனவு நிறைவேறும். இந்த முயற்சிகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், நீட் தேர்வால் நாம் பறிகொடுத்த மாணவர்களின் உயிர்களைத் திரும்ப கொண்டுவர முடியுமா?

நீட் தேர்வை எப்போது ஏற்றுக்கொள்ளலாம் என்றால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையான கல்வித்திட்டம் நம் தமிழக அரசுப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும். அல்லது, நாடு முழுக்க எல்லா பள்ளிகளிலும் ஒற்றைப் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இதுதானே சமத்துவம்! இல்லையென்றால், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வைத் தமிழக அரசின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும். இதற்காகத்தான் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன்."

ஓர் இழப்பு நடக்காமல் எந்தப் புதிய மாற்றமும் உருவாகாது.
சபரிமாலா

``ஆசிரியர் பணியை ராஜினாமா செய்ததுக்காக வருத்தப்பட்டதுண்டா?"

சபரிமாலா
சபரிமாலா

``இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிராக, 5 மணிநேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன். அரசுப் பணியில் இருந்துகொண்டு, போராட்டத்தை முன்னெடுத்ததுக்காக அப்போது நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டேன். ஒருவேளை நான் பணியில் இருந்துகொண்டே மாணவர்களின் உரிமைக்காகப் போராடியிருந்தால், எனக்கு எதிராகப் பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்திருப்பார்கள். அதையெல்லாம் உணர்ந்துதான், `அடிமையாக வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம்?' என முடிவெடுத்து, ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தேன். அதற்காக ஒருபோதும் நான் வருத்தப்படவில்லை. பெருமைப்படுகிறேன்! என் மகன் ஜெயசோழன் நான்காம் வகுப்புப் படிக்கிறான். அவனருகில் இல்லாத தவிப்பை அவனைவிடவும் நான் அதிகம் உணர்கிறேன்; வருந்துகிறேன். ஓர் இழப்பு நடக்காமல் எந்தப் புதிய மாற்றமும் உருவாகாது. என் முயற்சியை என் கணவரும் மகனும் நன்கு உணர்ந்துள்ளதால், அவர்களின் ஆதரவுடன் தொடர்ந்து களப்பணியில் ஈடுபடுகிறேன்."

``பொருளாதாரத் தேவைகளை எப்படிப் பூர்த்திசெய்துகொள்கிறீர்கள்?"

சபரிமாலா
சபரிமாலா

``இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு பட்டிமன்றத்தில் பேசுகிறேன். அதுவும் கமர்ஷியல் அல்லாத, சமூக விழிப்புஉணர்வு கருத்துகள் இடம்பெறும் பட்டிமன்றம். அதற்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. இருந்தாலும் அப்பட்டிமன்றங்களில் பேசுவதால், ஓரளவுக்குப் பணம் கிடைக்கும். சிரமம்தான் என்றாலும், என் கணவரின் வருமானத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்."

சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையான கல்வித்திட்டம் நம் தமிழக அரசுப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும். அல்லது, நாடு முழுக்க எல்லா பள்ளிகளிலும் ஒற்றைப் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இதுதானே சமத்துவம்!
சபரிமாலா

``உங்களது செயல்பாடுகளுக்கு எதிராக ஏதாவது அழுத்தங்கள் வருகின்றனவா?"

``இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறேன். `உங்கள் பணிகளை நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில், விளைவுகள் கடுமையாக இருக்கும்' எனப் பல்வேறு கடிதங்கள், மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன. என் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. ஆபாசமான விமர்சனங்களும் அதிகம் வருகின்றன. நான் எந்தச் சமூக அமைப்பு மற்றும் கட்சிகளின் ஆதரவிலும் இயங்கவில்லை. என் கொள்கையில் எந்தப் பிழையும் இல்லை; போலித்தனமும் இல்லை. எனவே, எதற்கும் நான் அஞ்சப்போவதில்லை. என் பணியைத் தொடர்ந்து செய்வேன்."