Published:Updated:

நள்ளிரவுப் பயணம்... பெண்களின் பாதுகாப்பு!- தெலங்கானா போலீஸ் கண்காணிப்பில் ஓலா, டோரா, உபர்

’ஹாக்-ஐ’ என்னும் சிறப்பு அப்ளிகேஷன், ஓலா, உபர் உள்ளிட்ட அனைத்து தனியார் போக்குவரத்து அப்ளிகேஷன்களுடன் இணைக்கப்படும்.

தெலங்கானா போலீஸ்
தெலங்கானா போலீஸ்

நள்ளிரவுப் பயணங்கள் குறிப்பாக, பெண்களின் பயணங்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் தெலங்கானா மாநில காவல்துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ’ஹாக்-ஐ’ ( #HawkEyeMobileApp ) என்னும் சிறப்பு அப்ளிகேஷன், ஓலா, உபர் உள்ளிட்ட அனைத்து தனியார் போக்குவரத்து அப்ளிகேஷன்களுடன் இணைக்கப்படும் என்று அந்த மாநில காவல்துறை அறிவித்துள்ளது. கார் உள்ளிட்ட தனியார் வாகனப் போக்குவரத்து வசதியை உபயோகிப்பவர்கள், அவசரகதியான சூழலில், அவர்கள் உபயோகிக்கும் அப்ளிகேஷன்களில் உள்ள எமர்ஜென்சி பொத்தானை அழுத்த வேண்டும். அது, காவல்துறை உருவாக்கியிருக்கும் ஹாக்-ஐ அப்ளிகேஷன் வழியாக அவர்கள் இருக்கும் பகுதியின் விவரத்தை காவல்துறைக்குத் தெரியப்படுத்தும்.

தெலங்கானா டிஜிபி
தெலங்கானா டிஜிபி

உடனே, கன்ட்ரோல் அறை வழியாக வாகனம் இருக்கும் பகுதியில் கண்காணிப்பில் இருக்கும் காவல்துறை அதிகாரி, சம்பவ இடத்துக்கு விரைந்து அனுப்பிவைக்கப்படுவார் என்று மாநில காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓலா, டோரா, உபர் உள்ளிட்ட பெரும்பாலான கேப்களுடன் இந்த இணைப்பு ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், இன்னும் சில தனியார் வாகனப் போக்குவரத்து நிறுவனங்களைத் தங்களது பாதுகாப்புச் சேவையுடன் ஒருங்கிணைத்துக்கொள்ளச் சொல்லி அந்த மாநில காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.