Published:Updated:

தஞ்சை: கஜா புயல் நிவாரணப் பணம்... அரசுப் பள்ளிக்காகச் செலவிட்ட பெண்!

பள்ளி மைதானத்தில் பாக்கியலெட்சுமி ( ம.அரவிந்த் )

'' 'எனக்கு கஜா புயல் நிவாரணப் பணம் வந்திருக்கு, வாலிபால் கோர்ட் அமைக்க ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும். நானே அதை செய்து தர்றேன்' என்றேன்.

தஞ்சை: கஜா புயல் நிவாரணப் பணம்... அரசுப் பள்ளிக்காகச் செலவிட்ட பெண்!

'' 'எனக்கு கஜா புயல் நிவாரணப் பணம் வந்திருக்கு, வாலிபால் கோர்ட் அமைக்க ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும். நானே அதை செய்து தர்றேன்' என்றேன்.

Published:Updated:
பள்ளி மைதானத்தில் பாக்கியலெட்சுமி ( ம.அரவிந்த் )

பேராவூரணி அருகே பெண் ஒருவர் தான் கடும் பொருளாதார சிக்கலில் தவித்த நிலையிலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தனக்கு நிவாரணமாகக் கிடைத்த பணத்தின் மூலம் அரசுப் பள்ளி ஒன்றுக்கு மாணவிகள் பயன்பெறும் வகையில் வாலிபால் விளையாடுவதற்கான கோர்ட் அமைத்துக் கொடுத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சுத்தம் செய்தபோது
சுத்தம் செய்தபோது

2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி வீசிய கஜா புயல் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதங்களை ஏற்படுத்திச் சென்றது. குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி விவசாயிகளின் பெரும் வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்களைச் சாய்த்துப்போட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரே இரவில் பலர் வீடுகளை இழந்து நிர்க்கதியாய் நின்றனர். ஆடு, மாடு, மரம், மனிதர்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஆடித் தீர்த்த பிறகே, அமைதியானது அந்த அசுரக்காற்று. இதனால் தென்னையை நம்பியே வாழ்ந்தவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகினர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களின் விவசாய நிலத்தில் விழுந்த தென்னை மரங்களை கணக்கில் கொண்டு அரசு அப்போது இழப்பீடாக நிவாரணத் தொகை வழங்கியது ஓரளவுக்கு ஆறுதலாக அமைந்தது.

கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்கள்
கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்கள்

கஜா புயல் வீசி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், அவை ஏற்படுத்திச் சென்ற சுவடுகள் இன்னும் மறையவில்லை. வாழ்வாதார அடிப்படையிலும் மனதளவிலும் அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளில் பலர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்தவர், 36 வயதாகும் பாக்கியலெட்சுமி. இவரின் கணவர் திருநீலகண்டன். இவர்களுக்கு சாம்பவி என்ற மகள் உள்ளார். இவர்கள் வாழ்க்கைக்கும் தென்னை மரங்களே ஆதாரமாக இருந்து வந்தன. இந்நிலையில் திருநீலகண்டன் விபத்து ஒன்றில் இறந்துவிட குடும்ப சுமையை பாக்கியலெட்சுமி சுமக்கத் தொடங்கினார்.

வாலிபால் கோர்ட்
வாலிபால் கோர்ட்

தனக்கிருந்த ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே தன் மகள் சாம்பவி படிப்பு மற்றும் குடும்பச் செலவுகள் அனைத்தையும் கவனித்து வந்தார். இந்நிலையில், கஜா புயலால் பாக்கியலெட்சுமியின் தென்னந்தோப்பில் நின்ற 90 சதவிகித மரங்கள் சாய்ந்தன. இதில் பாக்கியலெட்சுமி நிலைகுலைந்து போனார். அவரை கடும் பொருளாதார சிக்கல்கள் சூழ்ந்தன.

ஆனால், அப்படியே முடங்கிவிடாமல் தன்னம்பிக்கையோடு எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தொடங்கினார் பாக்கியலெட்சுமி. இந்த நிலையிலும், அரசு தனக்குக் கொடுத்த நிவாரணத் தொகை ரூபாய் ஒன்றரை லட்சம் பணத்தில், பேராவூரணியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வாலிபால் கோர்ட் அமைத்துக் கொடுத்திருக்கிறார். இந்தத் தகவல் தற்போது வெளியாகி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் அவரது இந்தச் செயலைப் பாராட்டி வருகிறார்கள்.

மைதானம் சுத்தம் செய்தபோது
மைதானம் சுத்தம் செய்தபோது

பாக்கியலெட்சுமியிடம் பேசினோம். ''பேராவூரணி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் அங்கு வாலிபால் பயிற்சி பெற்று வருகின்றனர்.

உடற்கல்வி ஆசிரியர்கள் அன்னமேரி, ரெங்கேஸ்வரி, பகுதி நேர வாலிபால் கோச்சாகப் பணிபுரியும் நீலகண்டன் ஆகியோர் மாணவிகளுக்கு சிறந்த முறையில் வாலிபால் பயிற்சி கொடுத்து வருவதால் இந்த மாணவிகள் பல மாவட்டங்களில் நடைபெறும் வாலிபால் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடி வருகின்றனர்.

கணவருடன் பாக்கியலெட்சுமி
கணவருடன் பாக்கியலெட்சுமி

வாலிபால் விளையாட்டு கிராமப்புற ஏழை மாணவிகளுக்கான தன்னம்பிக்கையையும், எதிர்காலத்துக்கான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்து வருகிறது. இதனால் ஏராளமான மாணவிகளின் வாழ்க்கை நிலை உயர்ந்திருக்கிறது. என் அண்ணன் மகள் ஷாலினி வாலிபால் பிளேயர் என்பதால் அவர் பயனடைந்ததை நான் நேரடியாகப் பார்த்தவள்.

இன்னொரு பக்கம், எனக்கும் விளையாட்டு மீது பெரும் ஆர்வம் இருந்தது. இந்நிலையில், மாணவிகள் அனைவரும் வாலிபால் பயிற்சி எடுப்பதற்கான மைதானம் பள்ளியில் இல்லாமல் சிரமப்பட்டனர். தாலுகா அலுவலகம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என வெவ்வேறு மைதானங்களில் பயிற்சி பெற்று வந்தனர்.

வாலிபால் மைதானம்
வாலிபால் மைதானம்

இதனால் மாணவிகள் வீட்டுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது உள்ளிட்ட பல நடைமுறை சிக்கல்களைச் சந்தித்து வந்தனர். கிராமங்களில் பெண்களை இதுபோன்ற விளையாட்டுகள் விளையாடுவதற்கு அனுமதிப்பதே பெரிய விஷயம். `இன்னொரு இடத்துக்கு வாழப்போற பெண்ணுக்கு விளையாட்டு எதுக்கு, உடம்புல அடிபட்டா எதிர்காலம் என்னவாகும்' என்றெல்லாம் கூறும் பெரற்றோர்களே அதிகம் இருக்கிறார்கள்.

இதனால் பல மாணவிகள் தங்கள் கனவுகளை மனசுக்குள்ளேயே பொசுக்கிவிடுகின்றனர். அதையும் மீறி வெளியே வந்து வெற்றியை எட்டும் மாணவிகளை எண்ணி ஒரு பெண்ணாகப் பல முறை பெருமை அடைந்திருக்கிறேன். நம் பள்ளியிலேயே வாலிபால் விளையாடுவதற்கான கோர்ட் இருந்தால் நன்றாக இருக்கும், இன்னும் ஏராளமான மாணவிகளை உருவாக்கலாம் என உடற்கல்வி ஆசிரியர்கள் கூறி வந்தனர்.

வாலிபால் பிளேயர்ஸ்
வாலிபால் பிளேயர்ஸ்

இதையறிந்த நான், 'எனக்கு கஜா புயல் நிவாரணப் பணம் வந்திருக்கு, நானே இதை செய்து தர்றேன்' என்றேன். 'வாலிபால் கோர்ட் அமைக்க ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும், நீங்களே சிரமத்துல இருக்குற இந்த நேரத்துல மேலும் உங்களுக்கு கஷ்டம் எதுக்கு?' என்றனர். 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல செய்றேன்' என்று நான் விடாப்பிடியா இருந்ததையடுத்து, தலைமையாசிரியரிடம் பேசி முறையாக அனுமதி பெற்று பணிகளைத் தொடங்கினோம்.

முதலில் பள்ளி மைதானத்தில் மண்டிக் கிடந்த புல், பூண்டுகளை அகற்றி மேடு, பள்ளமாக இருந்த பகுதிகளை ஜே.சி.பி எந்திரம் கொண்டு சமன்படுத்தினோம். வாலிபால் கோர்ட்டைச் சுற்றிலும் கான்கிரீட்டில் சிறிய சுவர் எழுப்பி அதில் செம்மண் கொட்டி விளையாடுவதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்தினோம்.

மைதானம்
மைதானம்

கோர்ட்டைச் சுற்றிலும் சுமார் 12 அடி உயரத்திற்கு கம்பி வேலி அமைத்தோம். விளையாடுவதற்குத் தேவையான நெட், பால் மற்றும் இரண்டு பக்கமும் ஊன்றுவதற்கு இரும்பு போஸ்ட் கம்பிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கியிருக்கிறோம். கிட்டத்தட்ட 90 சதவிகித பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை சுமார் ரூ. 1 லட்சத்துக்கு மேல் செலவாகிவிட்டது. இன்னும் ரூ. 50,000 செலவாகும் என உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் வழிகாட்டுதலோடு இந்தப் பணிகள் அனைத்தும் நடைபெற்றன.

கொரோனா லாக்டெளனால் இதன் பணிகள் பாதிப்படைந்தன. மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட சில தினங்களில் மீதி பணிகளும் முடிவடைந்துவிடும். மாணவி ஒருவர், 'எங்க கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு இதைச் செஞ்சு கொடுத்திருக்கீங்க, உங்களுக்குப் பெரிய மனசு' என நெகிழ்ந்தார். 'நீங்கள் பல வெற்றிகளை அடைந்து பெரிய உயரத்துக்குப் போக வேண்டும். அதுவே என் ஆசை' என அந்த மாணவியை வாழ்த்தினேன். அவரின் கண்கள் கலங்கின. முழு பணியும் முடிந்து வாலிபால் கோர்ட்டில் மாணவிகள் விளையாடினால்தான் என் மனது நிறையும்'' என்றார்.

 பாக்கியலெட்சுமி
பாக்கியலெட்சுமி

தலைமையாசிரியர் சுகுணாவிடம் பேசினோம். ''வாலிபால் பயிற்சி பெறுவதற்கான முறையான இடம் இல்லாமல் இருந்தது. இதனை தெரிந்துகொண்ட பாக்கியலெட்சுமி, தாமாக முன்வந்து ஆர்வமுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் மேற்பார்வையில் இதனை செய்து கொடுத்திருக்கிறார். அவருடைய இந்த செயல் பெரும் பாராட்டுக்குரியது'' என்றார்.