சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வேட்டை மனநிலையின் வேர்கள்!

வேட்டை மனநிலையின் வேர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை மனநிலையின் வேர்கள்!

ஓவியா

ண்மைக்காலமாகப் பெண்கள்மீதான பாலியல் வன்முறைகள் கவனம் பெற்றிருக்கின்றன. ஆனால் ‘அந்தக்காலத்திலெல்லாம் இப்படி இல்லை’ என்று சொல்லப்படுவது உண்மையல்ல. காலங்காலமாகவே பெண்கள்மீதான பாலியல் வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. ஆனால் இரண்டு வேறுபாடுகள். இன்று உலகில் எந்த மூலையில் வன்முறை நடைபெற்றாலும் அது உடனே சமூக ஊடகங்களின் வாயிலாகப் பரவி அதிர்ச்சியலைகளை ஏற்படுத்துகிறது. மேலும், வளர்ந்துகொண்டிருக்கும் தொழில் நுட்பங்கள், வன்முறையாளர்கள் மற்றும் குற்றவாளிகளுக்குப் புதிய பல குரூரமான வழிமுறைகளை உருவாக்கித் தந்துகொண்டிருக்கின்றன. நடந்துகொண்டிருக்கும் சில அண்மைச் சம்பவங்களுக்குள் போவதற்கு முன்னால் சில அடிப்படையான பார்வைகளை முன்வைக்க வேண்டியுள்ளது.

பெண் உடல் இங்கு பல்வேறு வர்த்தகங்களின் கச்சாப் பொருளாகத் தொடர்ந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. பொதுத் தளத்தில் தடையின்றி உலா வரும் திரைப்படங்கள், பொருள்களை விற்பதற்கான விளம்பர உத்திகள், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் தொடங்கி ஆண்களின் ரகசிய உலகமாக இயங்கிவரும் நீலத்திரைப்படங்கள், வீடியோக்கள் வரை பெண் உடலைக் கச்சாப் பொருளாக்கும் அளவில்தான் வேறுபாடே தவிர, அடிப்படையில் ஆணின் நுகர்வுக்கான ஒரு பண்டமாகவே ‘பெண் உடல்’ வைக்கப்படுகிறது. பிறப்புறுப்பு தவிர வேறு எந்த வேறுபாடுமின்றி இருபால் குழந்தைகளும் பிறக்கின்றன. ஆனால் குடும்பங்கள் மற்றும் சமுதாயங்களின் அணுகுமுறை, அந்தக் குழந்தைகளைத் தொடக்கத்திலிருந்தே பிரித்துதான் பார்க்கிறது. ‘பொத்தி வைத்து வளர்க்கணும் பொம்பிளைப் பிள்ளையை’ என்கிற நடைமொழி இன்னும் ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

Hyderabad rape and murder
Hyderabad rape and murder

இரு பால் குழந்தைகளும் வளர்கின்றன. ஆனால் ஒரு பாலினத்தின் வளர்ச்சி மட்டும் கிசுகிசுப்புத் தன்மையுடன் பார்க்கப்படுகிறது. தேவையில்லாமல் சடங்குகளுடன் கொண்டாடப் படுகிறது. தொடர்ந்து பெண் குழந்தையின் நடை, உடை, பாவனைகளில், ஒரு நுகரப்படும் பொருளுக்கான சாயல்கள் ஏற்றப்படுவதைத் தடுக்கவோ மாற்றவோ நமது மனம் தயாராக இல்லை. உடல் மாற்றங்கள் பற்றிய வெளிப்படையான உரையாடல்களைத் தடை செய்கிற இந்தச் சமுதாயம், மிதமிஞ்சிய கற்பனைகளுடன் அதை ரகசிய உரையாடலாக மாற்றிவிடுகிறது.

தேவைக்கு மேல் பணம் சேர சேர மனிதர்களுக்கு அதை எப்படி அனுபவிப்பது என்கிற கேள்விக்குக் கிடைக்கிற ஒரே பதிலும் ‘பெண் உடல் நுகர்வு’ என்பதாகத்தான் இருக்கிறது. இன்னொரு பக்கம் கவனிப்பாரற்று உதிரியாக விளிம்புநிலை வாழ்க்கையில் வளரும் சிறுவர்களும் இளைஞர்களும் முழுமையாக இதில் மாட்டிக்கொள்கிறார்கள். இவர்களின் கூட்டு வேட்டையின் இலக்காகப் ‘பெண் உடல்’ இருக்கிறது. இந்த வேட்டை சமுதாயத்தின் வேர்களைத் தேடி அழிப்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

என்கவுன்டர் செய்யப்பட்டவர்கள்
என்கவுன்டர் செய்யப்பட்டவர்கள்

இப்போது அண்மையில் நடந்த ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலையைப் பார்ப்போம். இந்தக் கொலை தொடர்பான செய்திகள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில், சொல்லப்பட்ட விஷயங்களை உண்மையென எடுத்துக்கொண்டு பார்த்தால், இது ஒரு கூட்டுப் பாலியல் வன்முறை என்பதும், குற்றவாளிகள் திட்டமிட்டுச் செய்திருப்பதாகவும் ஒரு புரிதலுக்கு வர வேண்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விளிம்புநிலையில உள்ள ஆண்கள். இன்னொரு பக்கம் உன்னாவில் நடந்த இன்னொரு பாலியல் வன்முறையை எடுத்துக்கொண்டால் அதில் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் நேரிடையாகத் தொடர்பிலிருப்பதைப் பார்க்கிறோம். அந்தப் பெண்ணுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. பொள்ளாச்சி வன்முறைகளை எடுத்துக்கொண்டால் அது பெண்களை மாட்ட வைத்து படம் எடுத்து முழுமையான வியாபாரமாக நடந்திருக்கிறது. இவ்வாறு எந்தெந்தப் பிரிவிலிருக்கும் ஆண்கள் இதனைச் செய்வதில் ஈடுபடுகிறார்கள் என்பது பற்றியும் அவர்களது சமுதாயப் பின்னணி பற்றியும் இங்கு ஊடகங்கள் மட்டுமல்ல, சாதாரண மக்கள்கூட அலசுவதில்லை. உண்மையில் ஹைதராபாத் சம்பவத்தில், ‘லாரி கிளீனர் பசங்க கெடுத்துக் கொன்னுட்டாங்க’ என்றவுடன் அவர்கள்மீது வரும் ஆவேசம், அதே வன்முறை பெரிய இடத்துத் தொடர்புகளுடன் நடத்தப்படுகிறது என்பதை அறிகிறபோது மக்கள் மத்தியிலேயே மங்கித்தான் போகிறது. பேராசிரியர் நிர்மலாதேவி யாருக்காக அந்தப் பெண்களை அழைத்தார் என்பது இன்றுவரை வெளியாகவில்லை.

மரணதண்டனை மட்டுமே, அதுவும் உடனடியான கொலை ஒன்றுதான் தீர்வு என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள் என்பதை ஹைதராபாத் என்கவுன்டர் நமக்கு உணர்த்துகிறது. இந்த என்கவுன்டர் மூலமாக அங்கு நடந்த உண்மை வெளியில் வராமலே போய்விட்டது என்கிற சாதாரண விஷயம்கூடத் தெரியாமல்தான் இவர்கள் என்கவுன்டர்களை ஆதரிக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்று பாடிய சமுதாயம் இது.

Hyderabad rape and murder
Hyderabad rape and murder

இந்த இடத்தில்தான் ஒரு கேள்வி வருகிறது. வெறும் கொலைக்கு, அதாவது பாலியல் வன்முறையில்லாத வெறும் கொலைக்கு இவர்கள் இவ்வளவு ஆர்ப்பரிப்பார்களா? இன்னும்கூட இவர்கள் காப்பாற்ற விரும்புவது பெண்களையா, பெண்களுக்கான கற்பையா? பாலியல் வன்முறையில் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கான எதிர்ப்பிலும் வாழ்கிறதோ ஆணாதிக்கம்? பத்தாண்டுக்கால சிறைத் தண்டனை என்பவற்றையெல்லாம் தண்டனையேயில்லை என்று மக்கள் நினைப்பது வியப்பளிக்கிறது. மரண தண்டனையைவிட நீண்ட சிறைத்தண்டனையே குற்றவாளிகளை மிகவும் வருத்தும் தண்டனையாகும். காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாகச் செயல்பட்டாலே குற்றங்களை வெகுவாகக் குறைக்க முடியும்.

‘சரி, இவற்றையெல்லாம் ஆராய்வது ஒரு புறமிருக்கட்டும். எங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கிறது. நாங்கள் பதற்றத்துடன் இருக்கிறோம். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். நமது தனிப்பட்ட பிரச்னைகளை சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பிரச்னைகளுடன் இணைத்துச் சிந்திக்க மறுப்பதே நாம் செய்யும் முதல் குற்றம். இருந்தபோதிலும் அவர்கள் பதற்றத்தை நாம் அனுசரணையுடன் அணுக வேண்டிய நிலையிலிருக்கிறோம். மேலும் நம் ஒவ்வொருவருக்கும்கூட அந்தப் பதற்றம், கவலை இருக்கவே செய்கிறது. டாக்டர் அம்பேத்கர் கூறியதையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆடுகளைத்தான் பலியிட முடியும். சிங்கங்களை அல்ல. பெண்களை பலமுள்ளவர்களாக்குங்கள்; அதிகாரமுள்ளவர்களாக்குங்கள். பெண்களை சிங்கங்களாக வளர்த்து வாருங்கள். அதேபோல் பெண்களைக் காட்சிப்பொருள்களாக்காதீர்கள். பெண்களும் ஆண்களும் ஒரேவிதமான ஆடையை அணியுங்கள். பால்வேறுபாடுகளை நினைவுபடுத்திக்கொண்டே இருக்காதீர்கள் என்கிறார் பெரியார். பெண்கள் காட்சிப் பொருள்களல்ல என்கின்ற உண்மையை இங்கு பெண்ணும் ஆணும் உணர வேண்டும். அவ்விதமாக நாம் அவர்களை வளர்க்க வேண்டும். ஒழுக்கம் என்பது திணிக்கப்படும் கட்டுப்பாடாக இல்லாமல் விரும்பி ஏற்கும் வாழ்க்கை நெறியாக இருக்க வேண்டும்.

வேட்டை மனநிலையின் வேர்கள்!

பெண்களே, நம்மை வேட்டையாட வலை விரித்திருக்கும் ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம் என்பதையும் அந்தச் சமுதாயத்தைக் கட்டமைக்கும் காரணிகளையும் ஆழ்ந்து சிந்தித்து உணருங்கள். ஆண்கள் நம்மால் உருவாக்கப் படுகிறவர்கள்தான். நம்மால் கட்டுப் படுத்த முடியாத சக்தியல்ல என்பதை உணருங்கள். உங்கள் வலிமையை நீங்கள் உணரும்போது அதைச் செயலாக்கிட நீங்கள் முனையும்போது இந்தச் சமுதாயம் நம் வசப்படும்.