Published:Updated:

அசாஞ்சேவும் முகிலனும் ஒன்றா? - இயக்கங்கள் செய்ய வேண்டியது என்ன?

முகிலன், ஜூலியன் அசாஞ்சே

களப்போராளி என்பதற்காகவே அவர் கேள்விக்குள்ளாக்கப்படக் கூடாது என்கிற கண்மூடித்தனமான கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

அசாஞ்சேவும் முகிலனும் ஒன்றா? - இயக்கங்கள் செய்ய வேண்டியது என்ன?

களப்போராளி என்பதற்காகவே அவர் கேள்விக்குள்ளாக்கப்படக் கூடாது என்கிற கண்மூடித்தனமான கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

Published:Updated:
முகிலன், ஜூலியன் அசாஞ்சே

"இந்த விடுதலையைக் கொண்டாடும் நாளில் ஜூலியன் அசாஞ்சேவை நினைவில் கொள்ளுங்கள் (AS YOU CELEBRATE YOUR FREEDOM, REMEMBER JULIAN ASSANGE)” என்று தலைப்பிடப்பட்ட கட்டுரை ஒன்று, அமெரிக்கச் சுதந்திர தினத்தன்று நியூஸ் வீக் பத்திரிகையில் வெளியானது. கருத்துவேறுபாடுகளின் மீதான உரிமையையும் அதை அங்கீகரிக்கும் கடமையையும் ஒட்டி அமெரிக்கச் சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது. அதுவரை மக்களின் ஹீரோவாகப் பார்க்கப்பட்ட ஜூலியன் அசாஞ்சே, கடந்த ஏப்ரல் மாதம் ஸ்வீடன் நாடு அவரின் மீதான பாலியல் புகார் வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியதை அடுத்து பிரிட்டனின் ஈக்குவாடார் தூதரகத்திலிருந்து கைது செய்யப்பட்டார். ஸ்வீடன் நாட்டின் இரண்டு பெண்கள், 2010-ல் அவர் மீது பாலியல் புகாரைக் கொடுத்திருந்தார்கள்.

முகிலன், ஜூலியன்  அசாஞ்சே
முகிலன், ஜூலியன் அசாஞ்சே

ஆனால், வழக்கு விசாரிக்கப்பட்ட 10 நாள்களிலேயே ஸ்டாக்ஹோம் போலீஸாருக்குப் பதில் அளித்த அவர், அது பாலியல் வன்கொடுமை இல்லை. அந்த இரண்டு பெண்களின் ஒப்புதலோடுதான் அவர்களோடு உறவில் இருந்ததாகவும் (CONSENSUAL SEX) அது பாலியல் வன்கொடுமை புகாராகச் சித்திரிக்கப்படுவது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். அமெரிக்கா கொடுத்த அழுத்தம்தான் அசாஞ்சே மீதான பாலியல் புகார் மீண்டும் விசாரிக்கப்படவும், ஈக்குவடார் தேசம் அவருக்கு வழங்கியிருந்த அடைக்கலமும் திரும்பப் பெறப்படக் காரணம் எனக் கூறப்பட்டது. இப்படிப் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முக்கியப் புள்ளிகள் பட்டியலில் தெஹல்காவின் தருண் தேஜ்பாலும் பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எம்.ஜே.அக்பரும் அடக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தருண் தேஜ்பால், எம் ஜே அக்பர்
தருண் தேஜ்பால், எம் ஜே அக்பர்

தமிழகத்தில் சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் 140 நாள்களாகக் காணாமல் போயிருந்த நிலையில், திருப்பதி ரயில்வே நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அவரை, பாலியல் புகாரின்கீழ் கைது செய்துள்ளனர். அவருடன் பலவருடங்களாகப் போராட்டக்களத்தில் இணைந்து செயல்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கு குறித்து இருவேறு பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. அவரை ஆதர்சமாக நம்புபவர்கள், "முகிலன் அப்படிப்பட்டவர் அல்ல... அவர் குற்றமற்றவர்" என்கின்றனர். அதனால், அந்தப் பெண்ணை வசைபாடிவிட்டுக் குற்றச்சாட்டையே ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டுகிறார்கள். முகிலனை அறிந்த பெரும்பாலானவர்கள், "இது பாலியல் வன்கொடுமை வழக்கு என்பதே தவறு. சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணும் முகிலனும் ஒப்புதலோடுதான் இணைந்திருந்தார்கள். ஆக, இதைப் பாலியல் வன்கொடுமை வழக்காக ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்று வாதம் செய்கிறார்கள். வேறு சிலர், ’சே குவேராவும் பெண்களுடனான அவர்தம் உறவும்’ என்று வரலாற்றின் பக்கங்களிலிருந்து இதற்கு ஒப்புமை கொடுக்கிறார்கள். சே குவேரா அப்படியிருந்ததால், முகிலன் அப்படி இருக்க வேண்டும் என்பதல்ல. சே குவேராவே செய்திருந்தாலும் தவறு தவறுதான். போராளி என்பதற்காக அவரை யாரும் விமர்சிக்கவோ கேள்வி கேட்கவோ கூடாது என்பது அபத்தமான வாதம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

களப் போராளி என்பதற்காகவே அவர் கேள்விக்குள்ளாக்கப்படக் கூடாது என்கிற கண்மூடித்தனமான கருத்தும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.

முகிலன் கைதுக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் ஜூலியன் அசாஞ்சேயையும் முகிலனையும் ஒப்பிட்டு, அரசும் அதிகாரமும் சமூகப் போராளிகளை அச்சுறுத்தும் ஆயுதமாகப் பாலியல் புகார்களைத்தான் கையிலெடுக்கிறது என்பது போன்ற கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அரசும் அதிகாரமும் ஒடுக்குமுறைக்காக எந்த ஆயுதத்தையும் கையில் எடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம், ஒருவர் களப்போராளி என்பதற்காகவே அவர் கேள்விக்குள்ளாக்கப்படக் கூடாது என்கிற கண்மூடித்தனமான கருத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

முகிலன் தொடர்பாகப் புகார் கொடுத்த பெண், அவர் காணாமல் போவதற்கு முன்பே, தாம் அவர் பற்றிய புகார்களை எழுப்பியதாகவும் அதனால்தான் அவர் மாயமானார் என்றும் கூறியுள்ளார். முகிலன் அப்படிப் பயந்து ஓடும் நபரல்ல, அவர் கடத்தப்பட்டார் என்று அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். தற்போது முகிலன் மீண்டும் கிடைத்திருக்கும் நிலையில், இத்தனை நாள்களாக நிலவிவந்த இப்படியான கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் பொறுப்பேற்று பதில் சொல்லவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். அவரின் தெளிவான பதில் மட்டும்தான் அவர் காணாமல்போனதன் மீதான விவாதத்தில் தேவையற்ற நேரவிரயத்தைக் குறைக்கும்.

முகிலன்
முகிலன்
படம்: ஐஷ்வர்யா

மற்றொரு பக்கம், அசாஞ்சே விவகாரம் முகிலன் விவகாரத்தோடு பொருத்திப் பார்க்கத் தகுந்ததா என்கிற கேள்வி எழுகிறது. இந்திய, குறிப்பாகத் தமிழகப் போராட்டச் சூழல்கள் அந்நியக் களங்களைப்போல அல்லாமல் கொள்கைசார் இயக்கங்கள் கையில் எடுக்கும் போராட்டங்கள். இங்கு வலதுசாரி மற்றும் இந்துத்துவச் செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டக் களங்களில் இயங்கும் பெரும்பாலான தனிநபர்கள் பெரியாரிய மார்க்சிய அம்பேத்கரிய கொள்கையாளர்களாகவும் தமிழ் தேசியச் சிந்தனையாளர்களாகவுமே இருக்கின்றனர். இந்தச் சிந்தனைவாதம் அத்தனையுமே இங்கிருக்கும் மக்கள் வாழ்க்கைச் சூழல்களில் இருந்து உருவாக்கப்பெற்றவை. இவர்களது வாழ்வியல் முறையுமே அந்தந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அந்த மனிதர்களால் ஈர்க்கப்பட்டுக் களத்துக்கு வரும் ஆண்களும் பெண்களுமே இப்படியான கொள்கை சார்ந்த ஈடுபாடு உடையவராகத்தான் இருக்கிறார்கள். அது சார்ந்து களப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ள வருகிறார்கள். அந்தப் பெண்கள் யாரும் அசாஞ்சேவிடம் சென்ற பெண்கள்போல Consensual sex-க்காகச் செல்பவர்கள் இல்லை. அந்தச் சூழலில் ஒரு தவறு நிகழும்போது அதை அசாஞ்சே விவகாரத்துடன் எப்படி ஒப்புமைப்படுத்த முடியும்?

மேலும், மேலை நாடுகளின் Consensual sex என்கிற வாதமும் தமிழகத்தில் Consensual sex என்கிற வாதமும் முற்றிலுமே மாறுபட்டவை. நம் மண்ணில் Consensual என்பது பெரும்பாலும் உறவின் (Relationships) மீதான வாக்குறுதிகளின் மீது உருவாகுபவை. இந்தியத்தின் பாலியல் மற்றும் உறவுச் சிக்கல்கள் குறித்து இன்னமும் இங்கே விவாதிக்க வேண்டியதும் மாற்றம் காணப்பட வேண்டியதும் நிறையவே இருக்கிறது. எனினும், அந்த விவாதத்தை ஒருபுறம் வைத்துவிட்டு களத்துக்கு வரும் பெண்கள் என்கிற பார்வையில் மட்டும் இதை அணுகுவோம்.

எவனொருவன் பாதிக்கப்பட்டானோ, அவன் பக்கம் நிற்பதே அறம்.
பெரியார்

”அவர்கள் இருவரும் ஒப்புதலுடனே இணைந்து வாழ்ந்திருக்கின்றனர். அதனால், இதை பிரிவு 376 என்கிற பார்வையில் அணுக முடியாது. ஆனால், முகிலன்மீது வைக்கப்படும் புகார்கள்போல இயக்கக் களங்கள் நிறையவே புகார்களைச் சந்தித்து வருகின்றன. ஆனால், அது வெளியே வருவதில்லை. முகிலன் ஊடகம் அறிந்த நபர் என்பதால் வெளியே வந்திருக்கிறது. இயக்கங்கள் அல்லது அமைப்புகள் சார்ந்து களத்தில் செயல்பட வரும் ஆண்கள் கள வேலைகளுக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டல்களை மேற்கொள்வது நடக்கிறது” என்கிறார்கள் களத்திலிருக்கும் பெண்களில் பலர்.

பெண்களுக்கான வெளி, பெண் உரிமை, பெண் கல்வி, பெண் சுதந்திரம் என்னும் அத்தனை விவாதப் பொருள்களையும் இங்கு பெரும்பான்மையான பெண்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த பெருமை, இயக்கங்களையே சேரும். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அதே களத்தில் இதுபோன்ற பாலியல் சிக்கல் பிரச்னைகள் ஏற்படும்போது அதற்கான தீர்வுகளைக் காண்பது முக்கியமாகிறது. தற்காலிகத் தீர்வாக விசாகா கமிட்டி போன்ற கட்டமைப்புகளை இயக்கங்களில் கொண்டுவருவதும் நீண்டகாலத்துக்கான தீர்வாகக் கல்வி முறையில் நாம் கேட்கும் ’பாலியல் கல்வி, பெண்களுக்கான வெளி, பெண் சுதந்திரம், பெண் கல்வி, முக்கியமாகக் கல்லூரிக் காலத்திலேயே களப்பணிகளுக்கு வரும் பெண்களிடம் கல்வியைக் கட்டாயப்படுத்துவது’ உள்ளிட்டவற்றை முதலில் இயக்கங்களில் 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்துவதும் மட்டுமே இதுபோன்ற புகார்கள் எதிர்வரும் காலத்தில் எழாமல் இருக்கச் சாத்தியம்.

குறிப்பாக, பெண்களுக்காகப் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதிபடுத்த வேண்டும். முக்கியமாக இயக்கக் கொள்கை வேறுபாடுகள் கடந்து அனைத்துப் பெண்கள் ஒருங்கிணைவு இதில் மிகமிக அவசியம். It takes a lot of guts to say the right thing and it will take a lot more to do the right thing and accept the right thing. நம்மிடையே அறம் இருந்தால்தான் நாளை வெளியுலகில் அறம் பேச நாம் தகுதியுள்ளவர்களாக இருப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism