Published:Updated:

இந்தியா என்பதற்காகத்தான் கொண்டாட வேண்டுமா?

கமலா ஹாரிஸ்
பிரீமியம் ஸ்டோரி
கமலா ஹாரிஸ்

தன் வாழ்க்கையின் திசையைத் தீர்மானித்த மிக முக்கியமான தருணம் அது என நெகிழ்ந்திருக்கிறார்.

இந்தியா என்பதற்காகத்தான் கொண்டாட வேண்டுமா?

தன் வாழ்க்கையின் திசையைத் தீர்மானித்த மிக முக்கியமான தருணம் அது என நெகிழ்ந்திருக்கிறார்.

Published:Updated:
கமலா ஹாரிஸ்
பிரீமியம் ஸ்டோரி
கமலா ஹாரிஸ்

மலா ஹாரிஸ் - அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஒரேநேரத்தில் உச்சரிக்கப்படும் பெயர். இந்திய வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்து இன்று அமெரிக்கத் துணை அதிபருக்கான தேர்தல் களத்தில் நிற்கிறார்.

இந்தியா என்பதற்காகத்தான்  கொண்டாட வேண்டுமா?

உலகின் மிக முன்னேறிய நாடாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் அமெரிக்காவில் ஜனாதிபதியாகவோ, துணை ஜனாதிபதியாகவோ ஒரு பெண்கூடத் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லை என்பதே உண்மை நிலவரம். இந்நிலையில், அமெரிக்காவில் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் டெமோகிராடிக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ், உண்மையில் பன்மைத் துவத்தின் அடையாளம்.

இந்தியா என்பதற்காகத்தான்  கொண்டாட வேண்டுமா?

இந்தியாவின் சியாமளா கோபாலன் எனும் ஆராய்ச்சியாளருக்கும், வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங் களுக்கு இடையில் உள்ள கரீபியன் தீவு நாடான ஜமைக்காவில் பிறந்த டொனால்ட் ஹாரிஸ் எனும் பேராசிரியருக்கும் மூத்த மகளாகப் பிறந்தவர் கமலா ஹாரிஸ். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே சாதி என்று ஒரே கூட்டுக்குள் சுருங்கிப்போனவர்களுக்குக் கிடைக்காத அனுபவங்களும் சுதந்திரமும் கமலா ஹாரிஸுக்குக் கிடைத்தது. இப்போது கமலா துணை அதிபர் தேர்தலில் முன்னிறுத்தப்படு வதற்கும் அது உதவியிருக்கிறது.

பெண்கள், இந்தியர்கள், ஆப்ரோ அமெரிக்கர்கள், வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்கள் ( Foreign Immigrants) என அமெரிக்காவின் பல ஒடுக்கப்பட்ட, சிறுபான்மைக் குழுக்களின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தப்படுகிறார் கமலா. ஏனெனில், இத்தனை அடையாளங்களும் கொண்டவர் அவர்.

கமலாவின் தாய்வழித் தாத்தா இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். பின்னர் இந்தியாவின் குடிமைப்பணி அதிகாரியாக ஜாம்பியாவில் பணியாற்றியவர்.இவரின் மனைவியும் (கமலாவின் பாட்டி) சமூக மேம்பாட்டு இயக்கப் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். கமலாவின் தாய் தந்தை இருவரும் அமெரிக்காவில் அறுபதுகளில் வளர்ந்துவந்த சிவில் உரிமைப் பணிகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள்.

இந்தியா என்பதற்காகத்தான்  கொண்டாட வேண்டுமா?

தன்னுடைய குழந்தைப்பருவம், தாய், தந்தை, குடும்ப வாழ்க்கை, காதல், அரசு வழக்கறிஞராகத் தன்னுடைய பணி, அரசியல் பயணம் எனப் பலவற்றை, சமீபத்தில் வெளியான தன்னுடைய புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார் கமலா. புத்தகத்தின் பெயர் `The Truths We Hold: An American Journey.’

கமலா குழந்தையாக இருந்தபோதே சிவில் உரிமைகள் இயக்கப் போராட்டங்களுக்குச் செல்லும் கமலாவின் பெற்றோர், அவரையும் நடைவண்டியில் வைத்து உடன் அழைத்துச் செல்வார்களாம். “கடந்து செல்லும் கால்கள், உணர்ச்சி மிகுந்த முழக்கங்கள் எனப் போராட்டக் காட்சிகள் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன” எனப் புத்தகத்தில் தன் நினைவைப் பகிர்ந்திருக்கிறார் கமலா. ஒருமுறை குழந்தையான கமலா அழுதுகொண்டிருந்தாராம். அடம்பிடிக்கும் குழந்தையிடம் என்ன வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் தாய் சியாமளா கோபாலன். அதற்கு மழலை மொழியில் குழந்தை கமலா சொன்ன பதில் `freedom.’ சுதந்திரம் எனும் வார்த்தையின் அவசியம், அர்த்தம் அறியும் முன்னரே மனதில் பதிந்துபோன அந்தப் போராட்ட குணமே அரசியல் களத்தில் அவரை இவ்வளவு உயரங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

கமலா ஹாரிஸ், அப்போது ஒரு சட்ட மாணவி. நேரடி பணி அனுபவத்திற்காக (internship) ஒரு வழக்கறிஞருடன் பணியாற்றியிருக்கிறார். அப்போது அவரின் சீனியர் ஒரு போதைப்பொருள் கடத்தல் வழக்கைக் கையாண்டிருக்கிறார். வழக்கின்படி, திடீரென ரோந்து சென்று போலீஸார் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பலரைக் கைது செய்திருக்கிறார்கள். அதில், எந்தத் தவறும் செய்யாத, ஆனால் அங்கு சாதாரணமாக வந்திருந்த ஒரு அப்பாவிப் பெண்ணையும் கூட்டத்தோடு கைது செய்திருக்கிறார்கள். அவர் மீது தவறில்லை என அறிக்கைகளும் சொல்கின்றன. அன்று வெள்ளிக்கிழமை, ஒருவேளை நீதிபதி அந்த வழக்கை விசாரிக்கவில்லை எனில், திங்கள் வரை அந்தப் பெண் சிறையில் இருக்க நேரிடும். நீதிபதி அன்றைய வேலை முடிந்து எழுந்துவிட்டார். யாரென்று அறியாத, தான் சந்திக்காத அந்தப் பெண்ணிற்காகத் தவித்திருக்கிறார் கமலா. நீதிபதியின் உதவியாளர், நீதிமன்ற அலுவலர் என அனைவரிடமும் மன்றாடியிருக்கிறார். ஒரு ஐந்து நிமிடம் கூடுதலாக நீதிபதி நேரம் செலவிட்டால் அந்தப் பெண் விடுதலையடைய முடியும் எனக் கெஞ்சியிருக்கிறார். மனமிரங்கிய நீதிபதி மீண்டும் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து, ஐந்து நிமிடங்களில் அந்த வழக்கின் தரவுகளைச் சரிபார்த்து, சம்பந்தப்பட்ட பெண்ணை விடுதலை செய்திருக்கிறார்.

“அந்தப் பெண்ணிற்குக் குழந்தைகள் உண்டு. இரண்டு நாள்கள் சிறையில் இருப்பது என்றால், தன் வேலையை, குழந்தைகளை, சமூக அந்தஸ்தை, தன் வாழ்க்கையையே அந்தப் பெண் இழக்கக் கூடும். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என அந்தச் சம்பவத்தை விவரித்திருக்கிறார் கமலா ஹாரிஸ். தன் வாழ்க்கையின் திசையைத் தீர்மானித்த மிக முக்கியமான தருணம் அது என நெகிழ்ந்திருக்கிறார்.

தாயின் இந்திய வம்சாவளியை மதிக்கும் அதே நேரத்தில், தன்னை ஒரு ஆப்ரோ அமெரிக்கப் பெண்ணாகவும் அடையாளப்படுத்திக் கொள்கிறார் கமலா ஹாரிஸ். அமெரிக்க அரசியல் களத்திற்கு அது அவசியமும்கூட. குறிப்பாக, சமீபத்தில் ஜார்ஜ் ஃபிளாயிட் மரணம் இனவெறிக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியிருக்கிறது.

இந்தியா என்பதற்காகத்தான்  கொண்டாட வேண்டுமா?

இந்நிலையில், டெமோகிராடிக் கட்சி அமெரிக்காவின் 18 சதவிகித ஆப்ரோ அமெரிக்க வாக்காளர்கள், மூன்று சதவிகித இந்திய வம்சாவளி வாக்காளர்கள் ஆகியோரைக் குறிவைத்தே கமலா ஹாரிஸைக் களமிறக்கி யிருக்கிறது. பாலின வேற்றுமைக்கு எதிரான வலுவான குரலாகவும் டெமோகிராடிக் கட்சி மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இந்தத் தேர்தலில் அவர் வெற்றிபெற்றால், அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் பல ‘முதல்முறை’ சாதனைகளைப் படைப்பார் கமலா ஹாரிஸ். ‘தந்தை ஜமைக்கராக இருந்தபோதும், இந்தியாவிலேயே பிறக்காதபோதும் கமலா ஹாரிஸை இந்தியராகக் கொண்டாடும் சிலர் ஓர் இந்தியத் தந்தைக்கு இந்தியாவில் பிறந்த பிரியங்காவை மட்டும் அந்நியர் என வெறுப்பைக் காட்டுவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பப்படுகிறது. உண்மையிலேயே பரிசீலிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான கேள்வி. கமலா ஹாரிஸும் சரி, பிரியங்காவும் சரி, அவர்களின் இந்திய அடையாளம் மதிக்கப்பட்டே அவர்களின் சரி தவறுகள் மதிப்பிடப்பட வேண்டும்.

எல்லாம் ஒற்றை அடையாளங்களில் அடைக்கப்படும் இந்த நெருக்கடியான சூழலில் கமலா ஹாரிஸ் வெறுமனே இந்திய அடையாளம் மட்டுமல்ல, பன்மைத்துவத்தின் அடையாளமும்கூட.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • கமலாவின் ஃபேவரைட் உணவு பன்றி இறைச்சி. சமீபத்தில் இதைச் சாப்பிட்டதை ட்விட்டரிலும் பகிர்ந்திருக்கிறார். இந்திய உணவுகளில் வத்தக் குழம்பு, ரசம்.

  • பிளாக் பேந்தர், வொண்டர் வுமன், லோகன், டார்க் நைட் - இவையெல்லாம் கமலாவுக்குப் பிடித்த படங்கள்.

  • பாப் மார்லி, அரேதா ஃப்ராங்க்ளின்: கமலாவின் டாப் இசைக் கலைஞர்கள் இவர்கள்தாம். இந்திய இசைக்கலைஞர்களில் ரவி ஷங்கர்.

  • 43 வயதுக்கு மேல்தான் மனதுக்குப் பிடித்தவரைச் சந்தித்து கணவர் ஆக்கும் வாய்ப்பு கமலாவுக்குக் கிடைத்திருக்கிறது.

  • கமலா தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. கணவரின் முதல் திருமணம் மூலம் பிறந்த மகனும் மகளும் இவர்களுடனே இருக்கிறார்கள். குழந்தைகள் அம்மா கமலாவை “mom+kamala= Momala” என்றே அழைப்பார்களாம்.