Published:Updated:

திரெளபதி முர்மு: ஆசிரியர், கவுன்சிலர், அமைச்சர், ஆளுநர் - ஜனாதிபதி வேட்பாளர் கடந்து வந்த பாதை!

திரெளபதி முர்மு

நாட்டின் பெண்களுக்கு திரௌபதி முர்மு ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்பதற்கு அவர் கடந்து வந்த வாழ்க்கையே சாட்சி. அவரின் பர்சனல் வாழ்க்கையும் அரசியல் எழுச்சியும் குறித்த சுவாரஸ்யத் தொகுப்பு இதோ...

திரெளபதி முர்மு: ஆசிரியர், கவுன்சிலர், அமைச்சர், ஆளுநர் - ஜனாதிபதி வேட்பாளர் கடந்து வந்த பாதை!

நாட்டின் பெண்களுக்கு திரௌபதி முர்மு ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்பதற்கு அவர் கடந்து வந்த வாழ்க்கையே சாட்சி. அவரின் பர்சனல் வாழ்க்கையும் அரசியல் எழுச்சியும் குறித்த சுவாரஸ்யத் தொகுப்பு இதோ...

Published:Updated:
திரெளபதி முர்மு
எரிமலையாய் வெடித்துக்கொண்டிருக்கும் அக்னிபாத் போராட்டங்களுக்கு மத்தியிலும் இந்தியாவையே உற்றுநோக்க வைத்து, பனிச்சிகரமாய் உருக வைத்திருக்கிறார் பா.ஜ.கவால் முன்நிறுத்தப்பட்டிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு.
"பழங்குடி பெண்ணான என்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. என்னால் நம்ப முடியவில்லை. எதிர்பார்க்கவுமில்லை. ஒடிசா எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எம்பிக்கள் ஆதரவு மண்ணின் மகளான எனக்குக் கிடைக்கும் என நம்புகிறேன்!"
திரெளபதி முர்மு ஆச்சர்யம் ப்ளஸ் தன்னம்பிக்கையுடன் பேசியது இதுதான்.

அதுவும், தனது பிறந்தநாளுக்கு (ஜூன் 20) அடுத்தநாளே இப்படியொரு அறிவிப்பு வந்தால் யார்தான் ஆச்சர்யப்படமாட்டார்கள்? ஜனாதிபதி வேட்பாளர் அவராக இருக்குமோ… இவராக இருக்குமோ என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துக்கொண்டிருந்த சூழலில் முர்முவின் பெயரை அறிவித்ததால் ‘யார் இந்த முர்மு?’ என்று ஒட்டுமொத்த இந்தியாவே தேடிக்கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர், ஒடிசா மாநிலத்திலிருந்து ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் போன்ற பல்வேறு பெருமைகளுக்கிடையே மாபெரும் ரெக்கார்டு பிரேக்காக சேர்ந்திருப்பது, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதல் பழங்குடியினப் பெண் என்பதுதான். ஒடிசாவின் இரண்டாவது ஜனாதிபதி வேட்பாளர், இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பிறந்த ஜனாதிபதி வேட்பாளர்… இப்படி நிறைய முதல்களை முடிவில்லாமல் முர்முவுக்கு அடுக்கிக்கொண்டே போகலாம்.

முன்னேறிய மாநிலங்களிலேயே இன்னும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முன்னேற்றப்படாமல்தான் இருக்கின்றது. அப்படியென்றால், பின்தங்கிய மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அப்படியொரு பின்தங்கியுள்ள மாநிலமான ஒடிசாவில், அதுவும் பழங்குடியின சமூகத்தில் பிறந்த முர்மு (தேர்ந்தெடுக்கப்பட்டால்) இந்தியாவின் 'முதல் குடிமகள்' என்ற பெருமையை பெற இருக்கிறார். இதற்காக, அவர் எத்தனை எத்தனை போராட்டங்களைச் சந்தித்திருப்பார் என்பதை யோசித்தாலே பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தங்கள் மண்ணின் மகள் திரௌபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைக் உற்சாகமுடன் ட்விட்டர் ட்ரெண்டிங் ஆக்கி கொண்டாடித் தீர்க்கிறார்கள் ஒடிசா மக்கள்.

"நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துகள். பிரதமர் மோடி என்னுடன் இதுகுறித்து பேசியபோது மகிழ்ச்சியடைந்தேன். ஒடிசா மக்களுக்கு இது உண்மையிலேயே பெருமையான தருணம். முர்மு நாட்டில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருப்பார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்!"
என்று பெருமையுடன் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.
அவர் கூறியதுபோல், நாட்டின் பெண்களுக்கு முர்மு ஒரு முன்மாதிரியாகத்தான் இருப்பார் என்பதற்கு அவர் கடந்து வந்த வாழ்க்கையே சாட்சி. இதோ திரௌபதி முர்முவின் பர்சனல் வாழ்க்கையும் அரசியல் எழுச்சியும்.

ஒடிசாவின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி பிறந்தார் திரெளபதி முர்மு. தேசிய புலிகள் காப்பகம் இருப்பதால் மயூர்பஞ்ச் மாவட்டத்துக்கு 'தி லேண்ட் ஆஃப் டைகர்' என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. முர்மு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதே மயூர்பஞ்ச் இனி 'தி லேண்ட ஆஃப் ஃபர்ஸ்ட் வுமன் ட்ரைபல் பிரசிடென்ட் ஆஃப் இந்தியா' என்று பெயர் பெற்று கூடுதல் வரலாற்று சிறப்புமிக்கதாய் மாறக்கூடும்.

திரெளபதி முர்மு, நரேந்திர மோடி
திரெளபதி முர்மு, நரேந்திர மோடி

திரெளபதி முர்முவுக்கு அரசியல் ஆர்வத்தைத் தூண்டியது அவரது தந்தை பிரஞ்சி நாராயண் டூடுதான். அவர்தான் அந்த ஊரின் கிராமத் தலைவர். அடிப்படை வசதிகளே கிடைக்காத கிராமத்தில் மகளுக்குக் கல்வி கிடைக்கவேண்டும் என்று முர்முவை பள்ளிக் கல்விக்குப்பிறகு, ராய்ரங்பூரில் கல்லூரிப் படிப்பையும் முடிக்கவைத்தார். இளங்கலை பட்டம் முடித்த கையுடன் 1979 முதல் 1983 வரை ஒடிசா மாநில அரசில் நீர்ப்பாசனம் மற்றும் மின்துறையில் இளநிலை உதவியாளராக பணியைத் துவங்கினார் முர்மு.

பின்னர், 1994-ம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இளநிலை உதவியாளர், ஆசிரியர் என்று பயணப்பட்டாலும் தனது இலக்கை அரசியல் மீதே வைத்திருந்தார் முர்மு.

1997-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்ததோடு ராய்ரங்பூர் கவுன்சிலராகவும் அரசியலில் தனது என்ட்ரியை பதிவு செய்தார். அதே ஆண்டு பா.ஜ.கவின் பழங்குடியினர் மோர்ச்சாவின் துணைத் தலைவராகவும் அரசியலில் அடுத்த அடியை எடுத்து வைத்தார். பா.ஜ.க-வின் முக்கியத் தலைவரான சுஷ்மா சுவராஜுக்கு அடுத்து, கட்சியில் இணைந்ததிலிருந்து அதிகாரத்திலேயே இருந்து வருபவர் என்றால் அது திரெளபதி முர்முதான்.

2000 – 2009 என இண்டு முறை ராய்ரங்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், பா.ஜ.க - பிஜு ஜனதா தளம் கூட்டணியில் இரண்டு முறை அமைச்சராகவும் ஆனார். போக்குவரத்து மற்றும் வணிகம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறைகளையும் சிறப்பாகக் கையாண்டு பெயர் எடுத்தார். 2006-ம் ஆண்டிலிருந்து 2009 வரை பழங்குடியின மாநிலப் பிரிவுத் தலைவராகவும் இருந்து வந்தார். சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதைப் பெற்ற முர்மு, இரண்டாவது முறையாகப் போட்டியிடும்போது தனது பிரமாணப் பத்திரத்தில், “தனக்கு வீடுகூட இல்லை. சிறிய வங்கி இருப்பு, கொஞ்சம் நிலம் மட்டுமே உள்ளது” என்று தெரிவித்து ஆச்சர்யப்படுத்தினார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றுக்கொண்டவருக்கு, பதவிக்காலம் முடிந்தும் கொரோனாவால் பதவியை நீட்டித்தது மத்திய அரசு. கடந்த ஆண்டு ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர், தற்போது ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார்.
திரெளபதி முர்மு
திரெளபதி முர்மு

அதேநேரத்தில், முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில் பா.ஜ.க-வுக்கு அரசியல் ஆதாயமும் இருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள். மயூர்பஞ்ச் மாவட்ட எல்லை ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ளது. அப்பகுதிகளில் முர்முவின் சந்தால் பிரிவு மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அம்மக்களிடம் ஓட்டு வேட்டையாட முயல்றது பா.ஜ.க என்கிறார்கள். அதோடு, வரவிருக்கும் 5 மாநில தேர்தலில் குஜராத், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் மாநிலங்களில் கணிசமாக வசிக்கும் பழங்குடியின மக்களின் ஓட்டுக்களை அள்ளவும் திட்டமிட்டிருக்கிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது. பா.ஜ.க-வுக்கு உண்மையிலேயே பழங்குடியினர் மீது அக்கறை இருந்தால் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் ஜார்க்கண்டில் கடந்த பா.ஜ.க ஆட்சியின்போது பழங்குடியினர் அல்லாத ரகுபார் தாஸை ஏன் முதல்வராக்கியது என்ற கேள்விக்கணைகளும் தொடுக்கப்படுகின்றன.

ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்தபோது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசின் குத்தகைச் சட்டங்களை மாற்றியமைக்கும் முயற்சி, அம்மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது. பழங்குடியின மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட முர்மு ஆளும் கட்சியுடன் மோதலில் ஈடுபட்டு அவர்கள் அனுப்பிய திருத்தங்களையும் திருப்பி அனுப்பி தான் சார்ந்த பழங்குடியின மக்களிடம் பாராட்டுக்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புவனேஸ்வரில் உள்ள யூனிட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தற்போது விழா கோலம் பூண்டிருக்கிறது. முர்மு இங்குதான் உயர்கல்வியை முடித்துள்ளார். அப்பள்ளி ஆசிரியை ஸ்மிதா மொகந்தி, “இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கான போட்டியில் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவியான திரெளபதி முர்மு இருப்பது பெருமைக்குரிய விஷயம். 2019-ம் ஆண்டு வைரவிழாவில் முர்முவுடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தாலும் எங்கள் பள்ளிக்கு வருகைத் தந்து, அப்படியொரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். விடுதியில் தங்கியிருந்த அனுபவத்தையும் வெளிப்படுத்தினார்” என்கிறார் பூரிப்புடன்.

திரெளபதி முர்மு
திரெளபதி முர்மு

ஜூன் 21-ம் தேதி இரவு, ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டபோது ராய்ரங்பூரில் இருந்தார் முர்மு. அப்படியொரு அறிவிப்பு வந்ததும், தான் தினமும் செல்லும் பூர்ணந்தேஸ்வரர் சிவன் கோயிலுக்கு அதிகாலை 3 மணிக்கே சென்று, துடைப்பத்தை எடுத்து பெருக்கி 4 மணிவரை சுத்தம் செய்து அங்குள்ள நந்தியின் காதுகளில் தனது வேண்டுதல்களைக் கிசுகிசுத்தார். அவர் எவ்வளவு சந்தோஷத்தில் இருந்தாலும் எத்தனையோ பெருமைகள் ஏற்றங்களைச் சந்தித்திருந்தாலும் முர்முவின் தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்ததுதான். இளம் வயதிலேயே தனது கணவர் ஷ்யாம் சரண் முர்முவை மாரடைப்புக்குப் பறிகொடுத்தார். இதைவிட வலிமிகுந்தது, கணவருக்குப் பிறகு உலகமாய் இருந்த இரண்டு மகன்களில் உடல்நலக்குறைவால் ஒருவரை 2009-ம் ஆண்டும், சாலை விபத்தில் ஒருவரை 2012-ம் ஆண்டும் பறிகொடுத்துள்ளார். முர்முவின் ஒரே மகள் இதிஸ்ரீ தற்போது வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.

இவ்வளவு சோகங்களையும் வலிகளையும் உள்ளடக்கியே பல்வேறு உயரங்களை எட்டியிருக்கிறார் முர்மு. அடுத்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஜனாதிபதி பதவியையும் எட்டிப்பிடிப்பாரா?
முர்முவுக்கு 2022 மிக முக்கியமான ஆண்டு. 64 வயதாகும் அவரது அரசியல் வாழ்க்கையில் இது வெள்ளி விழா ஆண்டு. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபிறகு அது இன்னமும் கூடுதல் சிறப்பைப் பெற்றுவிட்டது. வெற்றி வாய்ப்புகள் முர்முவுக்கே அதிகம் உள்ளதால், வாழ்த்துகள் இப்போதே குவிந்து கொண்டிருக்கின்றன.