பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பிரளயமாய் வெடித்த பெண்குரல்!

பிரளயமாய் வெடித்த பெண்குரல்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிரளயமாய் வெடித்த பெண்குரல்!

மாநிலங்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட இரண்டொரு நாள்களிலேயே தெற்கு டெல்லியின் மாத்ரி மந்திர் பகுதியில் அறப்போராட்டம் தொடங்கியிருந்தது.

சி.ஏ.ஏ ஸே ஆசாதி,

என்.ஆர்.சி ஸே ஆசாதி

ஹம் சப்கே மாங்கே ஆசாதி...

மும்பையில் உள்ள அகஸ்ட் கிரந்தி மைதானத்தில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்த கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேடையிலிருந்து ஒலித்தது நடிகை ஸ்வரா பாஸ்கரின் குரல். இருபதாயிரம் பேரும் அவரோடு இணைந்து ‘ஆசாதி’ என முழங்குகிறார்கள். “நாட்டில் நிலவும் அத்தனை குழப்பங்களையும் சரி செய்யப் புதிய இந்தியாதான் தீர்வு என்றார்கள்.

பிரளயமாய் வெடித்த பெண்குரல்!

ஆனால், இங்கே கூடியிருப்பவர்களின் ஒற்றுமை பழைய இந்தியா இன்னமும் மிச்சமிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இது காந்தியின் இந்தியா, இது பகத்சிங்கின் இந்தியா, இது அஷ்ஃபக்குல்லா கானின் இந்தியா, இது ராம்பிரசாத் பிஸ்மில்லின் இந்தியா. தற்போது இந்த தேசத்தில் புதிய ஜின்னா உருவாகியிருக்கிறார். அவரிடமிருந்து காந்தியையும் நமது அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கவே இந்தப் போராட்டம்” என்று கொடிமின்னல் கீறிச் செல்வதுபோலத் திருத்தமாகப் பேசுகிறார் ஸ்வரா.

கல்லூரிகளில், நகரங்களில், சிறுசிறு கிராமங்களில் இன்று ஒலித்துக்கொண்டிருக்கும் ‘ஆசாதி’ என்கிற சொல்லை பாகிஸ்தானிலிருந்து நம்மிடம் கொண்டுவந்து சேர்த்தவர் பெண் எழுத்தாளர் கமலா பஸின். 1983-ல் அப்போதைய பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜியா உல் ஹக்குக்கு எதிராக முதன்முதலில் திரண்டது அங்கிருந்த பெண்ணிய அமைப்புகள்தான். அவர்கள் எழுப்பிய ‘ஆசாதி’ கோஷத்தைத்தான் நம்மிடம் கொண்டுவந்து சேர்த்தார் கமலா.

பிரளயமாய் வெடித்த பெண்குரல்!

ஜியாவுக்கு எதிராக மகளிர் அமைப்புகள் ஒருங்கிணைந்ததுபோல, தலைநகரம் தொடங்கி தெற்கே கேரளா, தமிழகம் வரை கரங்களை உயர்த்தி ‘ஆசாதி’ என முழக்கமிட்டபடி இந்தியப் பெண்கள் இந்தப் போராட்டங்களை வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கிறார்கள். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதும் உடனடியாக அவர்களுக்கு ஆதரவாக அமர்ந்து போராடத் தொடங்கியது தென்கிழக்கு டெல்லியின் ஷாஹீன்பாக் பகுதிப் பெண்கள். சாலைகளில் அமர்ந்திருந்த அந்தப் பெண்களில், பிறந்து இருபது நாளேயான குழந்தையும் அடக்கம். இந்திக்கு எதிராக “மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு” என விடாப்பிடியாகப் போராடிக்கொண்டிருந்த தமிழகமும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பதற்காகவே ‘ஆசாதி’ எனக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. “இந்தி கத்துக்க மாட்டோம்னு சொன்னவங்கதான் இன்னிக்கு ‘ஆசாதி’ன்னு இந்தியில போராட்டம் செய்றோம். உங்களை எதிர்க்க இந்தி என்ன, சைனீஸ்கூடக் கத்துப்போம்” என்று அண்மையில் சென்னையில் நடந்த போராட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழக மாணவி வளர்மதி கூறவும், ஒட்டுமொத்தக் கூட்டமும் பேரொலி எழுப்பி ஆமோதிக்கிறது.

மாநிலங்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட இரண்டொரு நாள்களிலேயே தெற்கு டெல்லியின் மாத்ரி மந்திர் பகுதியில் அறப்போராட்டம் தொடங்கியிருந்தது. போராட்டத்தின் முன்னணியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அக்‌ஷரிஸ்தா அன்ஸாரி மற்றும் சந்தனா யாதவ் என்ற இரண்டு பெண்கள் இருந்தார்கள். பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியிலிருந்து நிர்வாக அலுவலகம் வரை அணிதிரண்டு பேரணி நடத்திய பெண்கள் கூட்டத்தை வழிநடத்திச் சென்றது ஆயிஷா ரென்னா, லடீடா பர்சானா, அக்‌ஷரிஸ்தா, சந்தனா, தஸ்நீம் ஆகிய ஐந்து பேர் கொண்ட குழுதான். டெல்லி காவல்துறை ஏற்படுத்திய கலவரத்தில் சக மாணவர் ஷாஹீன் தாக்கப்படாமல் சூழ்ந்து அரணாக நின்று பாதுகாத்தார்கள் அவர்கள். ‘அவரை அடிக்காதே’ என்று காவல்துறையைப் பார்த்துக் கரங்களை உயர்த்திய ஆயிஷா, போராட்டங்களுக்கு முன்னுதாரணமானார்.

‘எனக்கு அச்சமில்லை. நான் அல்லாஹ் ஒருவனுக்கே அஞ்சுபவள். பெண்கள் தெருவுக்கு வந்து போராடக்கூடாது என்கிறார்கள். பெண்கள் குரல் உயர்த்திப் பேசக்கூடாது என்கிறார்கள். ஆனால் பெண்களே, அப்படியிருக்காதீர்கள். அச்சம் கொள்ளாதீர்கள். இது இருத்தலுக்கான போராட்டம். உரிமைக்கான போராட்டம். குரல் உயர்த்திப் போராடுங்கள்” என்கிறார் 22 வயது ஆயிஷா. ஆயிஷா பற்ற வைத்த நெருப்பு புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலும் தழல்விட்டு எரிகிறது.

பிரளயமாய் வெடித்த பெண்குரல்!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு ஆதரவாக, பட்டமளிப்பு விழாவில் தான் பெறவிருந்த தங்கப் பதக்கத்தை மறுத்துள்ளார் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவி ரபீஹா. “உங்களுக்கு எங்கள் ஆவணங்களைக் காண்பிக்க முடியாது. இன்குலாப் ஜிந்தாபாத்” என்று மேடையேறி ஆக்ரோஷமாகக் கூறுகிறார் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவி தேப்ஸ்மிதா. பிறகு மேடையிலிருந்தவர்களிடம் அனுமதி பெற்று, குடியுரிமைத் திருத்தச் சட்ட நகலைக் கிழித்து எறிந்திருக்கிறார் அவர்.

‘ நான் வரலாறு படித்துக்கொண்டிருக்கிறேன் என்று என் அப்பா நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் நான் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியாது’ என்று எழுதப்பட்ட அட்டையை ஒருகையில் ஏந்தியபடி தங்களைத் துப்பாக்கியுடன் தாக்க வந்த போலீஸிடம் ரோஜாப்பூ நீட்டிய 21 வயது ஸ்ரேயா, டெல்லி பல்கலைக்கழக மாணவி. ஒட்டுமொத்த டெல்லியிலும் இணையம் முடக்கப்பட்ட சூழலில் ஸ்ரேயாவைப் போன்ற மாணவர்கள் துப்பாக்கிகளின் முன் ரோஜாப்பூக்களை நீட்டி அதிகாரத்துக்கு முன்பு அன்பை முன்வைத்தார்கள்.

பிரளயமாய் வெடித்த பெண்குரல்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் அத்தனை குரல்களிலும் தனித்து ஒலித்தது பத்து வயதுச் சிறுமி நேயாவின் குரல். ‘Long live unity, long live. long live’ என நேயா முழக்கமிட, சூழ்ந்திருந்த அத்தனை பேரும் அவளுடன் இணைந்து குரல் கொடுத்தார்கள். தற்போது சிறுமி நேயா உட்பட போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில் 600 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை.

பெண்கள் முன்னெடுக்கும் எந்தப் போராட்டமும் வரலாற்றில் இடம்பெறுவது மட்டுமல்லாது, வரலாற்றையே இடம் பெயர்த்திருக்கிறது.