பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

முகம் சிதைந்தாலும் மனம் தளராது!

முகம் சிதைந்தாலும் மனம் தளராது!
பிரீமியம் ஸ்டோரி
News
முகம் சிதைந்தாலும் மனம் தளராது!

“இந்தத் தாக்குதல் நடப்பதற்கு இரண்டு வாரங்கள் முன்பு, அவன் என்னைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினான்.

பாக் - ஆணாதிக்கத்தின் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதை. ‘சபாக்’ மால்தியைப்போல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனேகம். அப்படிப்பட்ட துயரம் தோய்ந்த கதைதான் நேபாளத்தைச் சேர்ந்த பிந்தாபஸினி கன்ஸாகரின் கதையும்.

முகம் சிதைந்தாலும் மனம் தளராது!

2013 ஏப்ரல் 22 எப்போதும்போல் வழக்கமான நாளாகத்தான் விடிந்தது, 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பிந்தாபஸினிக்கு. அன்று விடுமுறை நாள் என்பதால் தன் தந்தையின் பலசரக்குக் கடையைப் பார்த்துக்கொள்வதற்காகச் சென்றாள். அவள் சென்றவுடன் அவரின் தந்தை கடையை மகளிடம் ஒப்படைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து வருவதாகச் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் தனிமையில் இருந்த பிருந்தாவுக்கு நடந்ததே இந்தக் கொடூர நிகழ்வு. பிந்தாவை ஒருதலையாகக் காதலித்த திலிப் ராஜ் கேசரி என்ற இளைஞர், தன் காதலை ஏற்க மறுத்ததால் பிந்தா மீது ஆசிட்டை வீசிவிட்டார்.

“இந்தத் தாக்குதல் நடப்பதற்கு இரண்டு வாரங்கள் முன்பு, அவன் என்னைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினான். நான் மறுத்துவிட்டேன். பின்பு ஏப்ரல் 22ஆம் தேதி நான் எங்கள் கடையில் தனியாக இருந்தபோது, கடைக்கு வந்தான் அவன். தேன் பாட்டிலை வெளியில் எடுத்தான். அவன் எங்கள் கடையில் முன்பு வாங்கிச் சென்றதில் ஏதும் கோளாறு என்று திறந்து காண்பிக்கிறான் என நான் நினைக்கும்போது, நான் எதிர்பாராத கணத்தில் என் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டான். எனக்குத் தாள முடியாத எரிச்சல், வலி. என் பெற்றோர்கள் பல லிட்டர் தண்ணீரை என் முகத்தில் ஊற்றினார்கள். எந்தப் பயனும் இல்லை. கண்கள் பாதிக்கப்பட்டு விட்டன. முதலில் கண் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு முதலுதவி அளித்து, காத்மண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் எனக்கு மூன்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் செய்தனர். ஆனாலும் அவை பலனளிக்கவில்லை. அப்பொழுதுதான் எங்கள் உறவினர் ஒருவர் மூலம் மதுரை தேவதாஸ் மருத்துவமனை பற்றி அறிந்தோம். மருத்துவர் ஹேமா சதீஷ் என்னைக் கண்டதும் நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசியது எனக்கு ஆறுதலாக இருந்தது.

சிகிச்சையின் போது மூன்று வருடங்கள் தோலின் பாதுகாப்பு கருதி முகத்தில் பேண்டேஜ் போட்டிருந்தேன். அப்போது என்னைப் பார்த்து பயந்தவர்கள் பலர். எந்த முகம் அழகானது என்று ஆராதிக்கப் பட்டதோ, எந்த முகம் உருகி உருகிக் காதலிக்கப்பட்டதோ, எந்த முகம் வெறுப்பை உமிழ ஆசிட் வீச்சுக்குப் பலியானதோ அந்த முகம் இப்போது அச்சமூட்டக்கூடியதாக, அருவருக்கக் கூடியதாக மாறிப்போனது.

முகம் சிதைந்தாலும் மனம் தளராது!

பலவிதமான கேலிப்பார்வைக்கும், ஏளனப் பேச்சுக்கும் ஆளானேன். ஆனாலும் நான் ஒருபோதும் மனம் தளரவில்லை. என்றுமே எதிர்மறைப் பேச்சுகளை என்னுள் எடுத்துச் செல்லவில்லை. எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறைச் சிந்தனையுடன் இருந்தேன். அதனால்தான் இத்தனை பிரச்னைகளுக்கு இடையிலும், அந்தக் கொடூரச் சம்பவத்தால் கைவிடப்பட்ட படிப்பை என்னால் தொடர முடிந்தது. தற்பொழுது நேபாளத்தில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்துவருகிறேன்” என்று சொல்லும் பிந்தா குரலில் உறுதியின் வலிமை.

“இந்தச் சமூகத்திற்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நாங்களும் உங்களைப்போல சாதாரண மனிதர்கள்தான். எங்களைப் பிரித்துப் பார்க்காதீர்கள். எங்களை கேலி செய்யாதீர்கள். எங்களையும் மற்றவர்களைப்போல் நிம்மதியாக வாழவிடுங்கள். பார்வையால் கொல்லாதீர்கள். இதுவே நீங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கான வெளிப்பாடு.

ஆண் சமூகத்திற்கு நான் கூறுவது, ஒரு பெண் அழகாக இருந்தால், அவள்மேல் ஓர் ஈர்ப்பு வருவது இயல்பே. அது காதல் கிடையாது. அப்படி அது காதலாக இருந்தாலும் அவளுக்கு விருப்பமில்லை என்றால் விட்டுவிட வேண்டும். ஏன் விருப்பம் இல்லை என்று கேட்பதற்குக்கூட உங்களுக்கு உரிமை இல்லை. பிடிக்கவில்லை யென்றால், பிடிக்கவில்லை” என்கிறார்.

“ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சிறு வயது முதலே பெண்களிடம் எப்படிக் கண்ணியமாகப் பழக வேண்டும் என்று அறிவுரை கூறி வளர்க்க வேண்டும்’’ என்று கூறும் பிந்தா தன்னைப்போல் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டி வருகிறார். “முகம் என்பது ஓர் அடையாளம்தான். முகம் சிதைக்கப்பட்டதாலேயே நம் கனவுகள் சிதைய வேண்டிய அவசியமில்லை. அது நாம் சாதிப்பதற்குத் தடை இல்லை” என்று கூறும் பிந்தா, தற்பொழுது மருத்துவ சிகிச்சை மூலம் 90% குணமடைந்துள்ளார்.

“எனக்குக் கண்ணில் நீர் வந்துகொண்டே இருக்கும். அந்தப் பிரச்னை இப்போது இல்லை. என் முகத்தில் உணர்வுகளே இல்லாமல் இருந்தது. இப்போது என்னால் சிரிக்க முடிகிறது’’ எனக் கூறிச் சிரிக்கிறார் பிந்தா.

ஹேமா சதீஷ்
ஹேமா சதீஷ்

அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஹேமா சதீஷ், “பிந்தா சிகிச்சைக்காக வந்த பொழுது அவர் முகத்தில் ஆழமான காயங்களுடன் மூக்கு உருக்குலைந்து, கண்கள் மூட முடியாமல், நெற்றி சுருங்க முடியாமல், முகமே இழுத்துப் பிடித்ததுபோல் இருந்தது. பின்பு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினோம்.கண்ணை மூட முடிந்தது. மூக்கைச் சரி செய்தோம். லேசர் ட்ரீட்மென்ட் செய்தோம். தற்போது 90 சதவிகிதம் குணமாகி, தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் பிந்தா” என்று கூறினார்.

பிந்தாவைத் தாக்கிய அந்த இளைஞர் ஆறு வருடங்களுக்குப் பிறகு 2019, நவம்பரில்தான் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

அநீதியால் துவண்டுபோகாமல் அதை எதிர்கொள்ளும் தைரியம்தான் பிந்தா. இதுதான் உலகப்பெண்களுக்கான செய்தி.