Published:Updated:

நித்தியானந்தா மீது புகார் கூறும் மா நித்தியானந்த சுதேவி யார்?

கடந்த இரண்டு மாதங்கள் முன்பு வரை கிரிஸ்டல் நகைகள் செய்வது தொடர்பான வீடியோக்களைப் பகிர்ந்து வந்த சாரா, தற்போது நித்தியானந்தா ஆசிரமத்தின் மீது புகார்களை முன்வைத்துள்ளார்.


Sarah Stephanie Landry
Sarah Stephanie Landry

நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர்கள் சித்ரவதை செய்யப்படுவதாகக் கனடாவைச் சேர்ந்த சாரா என்பவர் தனது யூடியூப் வலைதளத்தில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தது அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார், பள்ளியில் படிக்கும் வயதுடைய பிள்ளைகள் பலர் அவருடைய ஆசிரமத்தில் முழு நேரமாகத் தங்கியிருக்கின்றனர் என்று ஏற்கெனவே அவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டிருந்தன. இதற்கிடையே சாரா பேசியிருக்கும் வீடியோ, நித்தியானந்தா மீது ஏற்கெனவே வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. 

Sarah Stephanie
Sarah Stephanie
"எனது வாழ்க்கையை புதிதாகத் தொடங்கியிருக்கிறேன். இதில் நானே பின்பற்றாத சில விஷயங்கள் என்னுடைய சேனலில் இனி தேவையில்லை என்பதை உணர்ந்தேன். அதனால் பழைய வீடியோக்களை அழிக்கிறேன்” என நித்தியானந்தாவின் ஆசிரம வீடியோக்களை அழித்ததற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

புகாரின் நம்பகத்தன்மையை அறிவதற்காக யார் இந்த சாரா என்பதைத் தெரிந்துகொள்ள அவருடைய யூடியூப் சேனலை ஆய்வு செய்தோம். யூடியூப் சேனல்படி, 2013 தொடங்கி அவர் தனது காணொலிகளைப் பதிவிட்டுவருகிறார். நான்கு வருடங்களுக்கு முன்பு வரை மேற்கத்திய முறை ஜோதிடமான டாரோட் அட்டை கணிப்பதில் (Tarot card reading) ஆர்வமுடையவராக இருந்தவர் பின்னர், அதே காலகட்டதில்தான் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார். அங்கே தனது பெயரை மா நித்தியானந்த சுதேவி என மாற்றிக்கொண்டுள்ளார். நித்தியானந்தாவுக்கு நெருக்கமான சிஷ்யர்கள் வட்டத்தில் சாரா பணியாற்றியிருக்கிறார். இதுகுறித்த அத்தனை தரவுகளுமே அவருடைய யூடியூப் சேனலிலும் முகநூல் பக்கத்திலும் கிடைக்கப்பெறுகின்றன. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு மீண்டும் தனது சொந்த நாடான கனடாவுக்குத் திரும்பியிருக்கிறார் சாரா.

ஆசிரமப் பணிகளில் ஈடுபடுவது நம்பகத்தன்மை வாய்ந்ததாக (authentic) இல்லை.
Sarah Stephanie with Nithyananda
Sarah Stephanie with Nithyananda

தான் கனடா திரும்பிவிட்ட செய்தியையும் அதற்கான காரணத்தையும் தனது அதே வீடியோ வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

"ஆசிரமப் பணிகளில் ஈடுபடுவது நம்பகத்தன்மை வாய்ந்ததாக (authentic) இல்லை. அதுபற்றி யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் நித்தியானந்தா சத்சங்கத்தில் பேசியதைக் கேட்டேன். அவர் பேசியது, நான் முடிவெடுக்க வேண்டியது பற்றிய தெளிவைக் கொடுத்தது. அதனால் மீண்டும் கனடா திரும்பிவிட்டேன். இங்குதான் இனி இருக்கப்போகிறேன்” எனத் தனது நீண்ட வீடியோ பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த அக்டோபர் 2018-ல் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதற்கடுத்த ஐந்து மாதங்களிலேயே நித்தியானந்தா மற்றும் அவரது கொள்கைகள் பற்றிய பரப்புரை தொடர்பான தனது அத்தனை காணொலிகளையும் அவர் அழித்திருக்கிறார். தான் அத்தனை வீடியோக்களை அழித்ததற்கான காரணத்தைக் குறிப்பிட்டும் தனியொரு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், "நான் புதிய வாழ்க்கை ஒன்றைத் தொடங்குகிறேன். அதற்காக உங்கள் நம்பிக்கையை நான் அவமதிப்பதாக அர்த்தம் இல்லை. எனக்கு இந்தப் புதிய வாழ்வு தேவையாக இருக்கிறது. நான் முன்பு போல காவி நிற சேலை உடுத்துவதில்லை. ஜீன்ஸ், பேன்ட்தான் அணிகிறேன். இத்தனை வருடமாக எங்கள் நாட்டில் இருக்கும் எத்தனையோ இடங்களை நான் பார்க்கத் தவறிவிட்டேன். அத்தனை இடங்களுக்கும் நான் பயணம் செய்யப்போகிறேன். என் அம்மாவுடன் நிறைய பேசத் தொடங்கியிருக்கிறேன். எனது வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்கியிருக்கிறேன். இதில் நானே பின்பற்றாத சில விஷயங்கள், என்னுடைய சேனலில் இனி தேவையில்லை என்பதை உணர்ந்தேன். அதனால் பழைய வீடியோக்களை அழிக்கிறேன்” என நித்தியானந்தாவின் ஆசிரம வீடியோக்களை அழித்ததற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையே சாரா ஸ்டெபானி என்கிற தன்னுடைய நிஜப்பெயருக்கு மாறிவிட்டதற்கான காரணத்தையும் அந்த வீடியோ தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த இரண்டு மாதங்கள் முன்பு வரை கிரிஸ்டல் நகைகள் செய்வது தொடர்பான வீடியோக்களைப் பகிர்ந்து வந்த சாரா, தற்போது நித்தியானந்தா ஆசிரமத்தின் மீது புகார்களை முன்வைத்துள்ளார். 

Sarah Stephanie with Nithyananda
Sarah Stephanie with Nithyananda

சாராவின் வீடியோக்களின் கீழ் அவரது இந்த மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. மேலும், அவரது இந்த மாற்றத்துக்கான காரணத்தையும் சிலர் வினவி வந்திருக்கிறார்கள். நித்தியானந்தா ஆசிரமத்தில் சாரா இயங்கி வந்த சமயம் முதல் அவரது காணொலிகளைப் பின்பற்றத் தொடங்கிய பலர், தற்போது சாராவின் புகார் காணொலியின் கீழ் அவதூறகளையும் வசவுகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

"என்னை அவமதிக்கும் வகையில் ஆசிரமவாசிகள் செயல்படக்கூடாது என எல்லோருக்கும் அறிவுரை கூறிய நித்தியானந்தா, பின்னணியில் என்மீது ஆட்களை ஏவி அவதூறுகளைப் பரப்பி வருகிறார். அவர்கள் என்னை வலைதளங்களில் பாலியல்ரீதியாகத் தாக்கி வருகிறார்கள்" எனத் தற்போது சாரா சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். 

Sarah Stephanie
Sarah Stephanie

சாரா ஏன் திடீரென கனடா திரும்ப வேண்டும்? கனடா திரும்பிய தொடக்கத்திலேயே நித்தியனந்தா மீது சாரா புகார் சொல்லாததன் காரணம் என்ன? ஆசிரமம் நம்பகத்தன்மை உடையதாக இல்லை என்று அப்போது அவர் குறிப்பிட்டதன் காரணம் இந்தப் புகாரின் அடிப்படையில்தானா... அப்போதே அவரைப் புகாரளிக்கவிடாமல் தடுத்தது எது... ஏதேனும் மிரட்டல் விடுக்கப்பட்டதா அல்லது அழுத்தம் கொடுக்கப்பட்டதா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

Vikatan

சாராவின் செயல்பாடுகளிலும் சர்ச்சை எழாமல் இல்லை. அதே நேரம் இது நித்தியானந்தா ஆசிரமம் மீது எழுப்பப்படும் முதல் புகாரும் அல்ல. குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான புகார் என்பதால் சாராவின் இந்தக் காணொலியின் வீரியம் உணர்ந்து சட்டமும் நீதிமன்றமும் இதைக் கையிலெடுக்குமா அல்லது அப்படியே கடந்த செல்லப்போகின்றனவா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.