Published:Updated:

குடும்ப வன்முறை, குடிப்பழக்கம், சூதாட்டத்துக்கு எதிராக 25 பெண்கள்! - வாரணாசியின் `பச்சை ஆர்மி’

பச்சை ஆர்மி
பச்சை ஆர்மி

இங்கு பெண்ணாக வாழ்வதே சவாலான விஷயமாகத்தான் இருக்கிறது. நாங்கள் நடக்கும்போது அடுத்த அடி எடுத்து வைப்பதில்கூட பிரச்னையை எதிர்கொள்கிறோம்.

தனது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு அடர் பச்சை நிறத்தில் புடவையை உடுத்திக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே புறப்படுகிறார் ஆஷா தேவி. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியை அடுத்துள்ள குஷியாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா தேவி. விவரம் அறியாத எவருக்கும் அது மற்ற புடவையைப் போலத்தான் தோன்றும். ஆனால், அதுதான் ஆஷா இடம்பெற்றிருக்கும் பெண்கள் ஆர்மியினுடைய சீருடை. அந்தச் சீருடைதான் அந்தப் பெண்களைப் பாதுகாக்கிறது. 25 பெண்கள் இடம்பெற்றிருக்கும் அந்த ஆர்மியினுடைய முக்கியப் பணி அந்தக் கிராமத்தைப் பாதுகாப்பதுதான்.

``பெண்கள் கபடியில் சாதிக்க உடல்வலிமை மட்டும் போதாது!'' - தமிழகத்தின் முதல் பெண் கபடி நடுவர் சந்தியா

“இங்கு பெண்ணாக வாழ்வதே சவாலான விஷயமாக இருக்கிறது. நாங்கள் நடக்கும்போது அடுத்த அடி எடுத்து வைப்பதில்கூட, பிரச்னையை எதிர்கொள்கிறோம். இதற்கிடையே எங்களைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் இந்தப் படை” என்கிறார் ஆஷா.

இந்தப் ’பச்சை ஆர்மி’ உருவாக்குவதற்கு முன்பு ஆஷாவும் மற்ற பெண்களைப் போலதான் இருந்தார். ஒவ்வோர் இரவும் வயிறுமுட்டக் குடித்துவிட்டு வந்து அடித்துத் துவைக்கும் கணவரிடமிருந்து உயிர்பிழைத்து வாழ்வதே சிரமமான காரியமாகத்தான் இருந்தது. அருகிலிருந்த கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சில பெண்கள் இவர்களிடம் வந்து பேசத்தொடங்கும்வரை, பெண்களுக்குள் பேசிக்கொள்கையில் ஒருவருக்கு ஒருவர் முகத்தை மறைத்தபடி இருக்க வேண்டும் என்கிற அடக்குமுறை இருந்தது.

பச்சை ஆர்மி
பச்சை ஆர்மி

கல்லூரிப் பெண்கள், இவர்களுக்குப் பெயர் எழுதவும், வங்கியில் கணக்குத் தொடங்கவும் கற்றுக்கொடுத்தார்கள். அதன் பிறகு, அவர்களது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. கணவனின் ஒவ்வொரு வன்முறையும் குஷியாரி காவல்நிலையத்தில் புகாராகப் பதிவாகத் தொடங்கியது. ஆஷாவோடு பல பெண்கள் இணைந்தார்கள்.

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான பெண்கள் வீட்டில் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

அந்தப் பெண்கள், அதற்கு அடுத்து செய்யத் தொடங்கிய அனைத்துமே சாகசம்தான். சூதாட்டத்துக்குப் பெயர்போன குஷியாரி கிராமத்தில் சூதாட்டக் கூடங்களையும், மதுபானக்கடைகளையும் அடித்தார்கள்.

"சில சமயம் என் கணவர், மகன் என இருவருமே என் சம்பாத்தியத்தை எடுத்துக்கொண்டு சூதாட்டத்துக்குச் சென்றுவிடுவார்கள். இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர்களின் படிப்புச் செலவுக்காக வைத்திருந்ததையெல்லாம் சூதாட்டத்துக்குப் பறிகொடுப்பது வேதனையாக இருந்தது. அதனால் தடியெடுத்து அடித்து உதைப்பது எங்களுக்குத் தவறாகத் தெரியவில்லை" என்கிறார் அந்த ஆர்மியைச் சேர்ந்த ஒரு பெண்.

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பச்சைப் புடவையை உடுத்திக்கொண்டு கையில் கம்புடன் கிராமங்களில் சாராயம் காய்ச்சப்படும் இடங்களிலும் சூதாடும் இடங்களிலும் ரோந்து வருவதுதான் இந்த ஆர்மியின் முக்கிய வேலை. எங்கேனும் குற்றம் நடப்பது தெரிந்தால் 25 பெண்களும் ஒட்டுமொத்தமாகச் சென்று அந்த இடத்தை துவம்சம் செய்துவிட்டு வருகிறார்கள்.

அதனால், கிராமத்து ஆண்களுமே பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது போல, ’பச்சை ஆர்மி’ யைக் கண்டு நடுங்குகிறார்கள். கிராமத்தின் அருகில் இருக்கும் தற்காப்பு பயிற்சி மையத்திலிருந்து பெண்களை அழைத்து தற்காப்புப் பயிற்சியையும் தற்போது பெற்றுவருகிறார்கள்.

இந்த ’பச்சை ஆர்மி’ குடும்ப வன்முறை, குடிப்பழக்கம் மற்றும் சூதாட்டத்துக்கு எதிராகப் போராடுகிறது.

இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 'இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், களநிலவரப்படி அந்த எண்ணிக்கை இன்னுமே அதிகமாகவே இருக்கிறது.

பச்சை ஆர்மி
பச்சை ஆர்மி

உச்சக்கட்டமாக 40 முதல் 50 வயது வரையிலான பெண்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் குடும்ப வன்முறை நியாயமானதே என்று வாதம் செய்கிறார்கள். இப்படியான சூழலில் இதுபோன்ற ’பச்சை ஆர்மி’க்கள் கொண்டாடி வரவேற்கப்பட வேண்டியதாக இருக்கின்றன.

நன்றி: abc.net

அடுத்த கட்டுரைக்கு