Published:Updated:

காவல்துறையின் பாலியல் குற்றங்கள் தண்டனைக்கு உட்படாதவையா... 3 சம்பவங்கள் சொல்லும் சேதி! #VoiceOfAval

இந்த சம்பவங்களின் மூலமும், காவல்துறை பகிரங்கமாக மக்களுக்குச் சொல்லும் செய்தி என்ன? அல்லது விடுக்கும் மிரட்டல் என்ன?

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளில் காவலர்களே ஈடுபடும்போது, பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்? அந்தக் குற்றத்தில் ஈடுபடும் காவலர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும்? சமீபத்தில் தமிழகத்தில் நடந்த மூன்று சம்பவங்கள் இதற்கான விடையை நமக்கு அளிக்கக்கூடும்.

சென்னை, வடபழனியில் பணிமுடித்து வீடு திரும்ப பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தார் 20 வயது இளம்பெண். மழை இரவில் தனியாக நின்றுகொண்டிருந்த அவருக்கு நீண்ட நேரமாக பஸ் கிடைக்கவில்லை. சாலையிலும் நடமாட்டம் குறைந்திருந்தது. அப்போது பைக்கில் வந்த ஒருவர், அந்தப் பெண்ணிடம் பைக்கை நிறுத்தி, தான் அவரை டிராப் செய்வதாகச் சொல்லி ஏறச் சொன்னார். இளம்பெண் மறுத்தார். அவர் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்ற முயன்றார்.

வடபழனி சம்பவத்தில் கைதான காவலர் ராஜூ
வடபழனி சம்பவத்தில் கைதான காவலர் ராஜூ

அதிர்ச்சியடைந்த இளம்பெண் அந்த ஆணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவர் அந்தப் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்தார். பெண் கூச்சலிட ஆரம்பிக்க, இதைப் பார்த்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பொதுமக்களும் பெண்களும், போதையில் இருந்த அந்த ஆணை தாக்கினர். அதில் அவர் ஜெர்க்கின் அகல, அப்போதுதான் அவர் போட்டிருந்த காக்கிச் சீருடை தெரியவந்தது. அவர் பணியிலிருந்த காவலர்(!) என்று தெரிந்ததும் மக்களின் ஆற்றாமை இன்னும் அதிகமானது. வடபழனி காவல் நிலைய போலீஸார் வந்து காவலரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

காவலரை பொதுமக்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. சம்பந்தப்பட்ட காவலர், எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் பனியாற்றும் தலைமைக் காவலர் ராஜு எனத் தெரியவந்தது. அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, ராஜு தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார். வீடியோ பதிவில் இருந்தவர்களை அடையாளம் கண்ட போலீஸார், சீருடையில் இருந்த காவலரை(!) தாக்கியதாக ஐந்து இளைஞர்களைக் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர்.

காவலர் ராஜூ
காவலர் ராஜூ

இந்தக் கைதும் விசாரணையும் உணர்த்துவது என்ன? கைதுக்கு ஆளானவர்கள் குற்றம்சாட்டப்பட வேண்டியவர்கள் எனில், அவர்கள் அந்தச் சூழலில் என்ன செய்திருக்க வேண்டும்? யாரோ ஓர் ஆண், சாலையில் ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததைப் பார்த்தபோது, கண்டும் காணாமல் சென்றிருக்க வேண்டுமா? போதையில் இருந்த அந்த நபர் மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தபோது, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டுமா அல்லது ஒருகட்டத்தில் அவர் காவலர் என்று தெரியவந்த பின்னர், `தெரியாமல் செய்துவிட்டோம்... சீருடை அணிந்திருக்கும் நீங்கள் என்ன அநியாயம் வேண்டுமானாலும் செய்யலாம்' என்று விலகியிருக்க வேண்டுமா? உண்மையில் சம்பவத்தின்போது அந்தப் பெண்ணுக்குக் காவலர்களாக இருந்தது யார்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்னர் நடந்த மற்றுமொரு காக்கி அடாவடி சம்பவம் அது. தென்காசி மாவட்டம் சில்லிகுளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், மணிமுத்தாறு பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வருகிறார். சங்கரன்கோயில் பேருந்து நிலையத்தில், பாசிமாலை வியாபாரம் செய்யும் நாடோடி இனப் பெண்ணுக்கு இவர் மது போதையில் பாலியல் தொல்லை கொடுத்தார். இதை அங்கிருந்த மக்கள் தடுத்து, அப்பெண்ணை அவரிடமிருந்து மீட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோவும் வைரல் ஆனது. இருந்தும், தென்காசி மாவட்ட காவல்துறை அந்தக் காவலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, இதை தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.

madurai high court
madurai high court

நீதிமன்றமே உத்தரவிட்டதால் வேறு வழியின்றி, ஐ.பி.சி 294(பி), 323 ஆகிய பிரிவுகளில் மட்டும் குற்றம்சாட்டப்பட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்தனர் காவல்துறையினர். `பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாச செயல் செய்வது, ஆபாசப் பாடலைப் பாடுவது, ஆபாச வார்த்தையை உச்சரிப்பது போன்றவற்றுக்கு 3 மாதங்கள் சிறைக்காவல், அபராதம் அல்லது இரண்டும்' என்று தண்டனையை வரையறுக்கும் சட்டப் பிரிவு இது.

இதே சட்டத்தில், 354A ஐ.பி.சி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். `பாலியல் நோக்கத்துடன் ஒரு பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் அவரைத் தொடர்புகொள்வது, உடல்ரீதியாகத் துன்புறுத்துவது, தாக்குவது போன்ற குற்றங்களுக்கு ஒன்று முதல் ஐந்து வருடங்கள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.'

இதில், எந்தப் பிரிவின் கீழ் அந்தக் காவலர் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்?

அதைவிடக் கொடுமையான இன்னொரு விஷயம், குற்றம்சாட்டப்பட்ட அந்தக் காவலரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர் தென்காசி காவல்துறையினர்.

இந்த இரண்டு சம்பவங்களின் மூலமும், காவல்துறை பகிரங்கமாக மக்களுக்குச் சொல்லும் செய்தி என்ன? அல்லது விடுக்கும் மிரட்டல் என்ன?

Tamilnadu Police
Tamilnadu Police
Photo: Vikatan
ஆதித்யநாத்களே... `லவ் ஜிகாத்’திடமிருந்து அல்ல; உங்களிடமிருந்துதான் எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்!

`பெண்களுக்குப் பொதுவிடத்தில், போதையில் காவல்துறையினர் பாலியல் தொல்லை கொடுப்பது குற்றம் அல்ல. நீதிமன்றமே எச்சரித்த பின்னரும்கூட, கண்துடைப்புக்காகவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். மேலும், சம்பந்தப்பட்ட பெண்களைக் காக்கும் நோக்கத்தில் போதையில் இருக்கும் போலீஸாரை தாக்கினால், தாக்குபவர்கள் விசாரணைக்காக கைதுசெய்யப்படுவார்கள். எனவே, பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாலும், போலீஸ் போலீஸ்தான். அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்' - உணர்த்தப்பட்டிருப்பது இதுதானே?

பொதுவெளிகளில் பாதிக்கப்படும் பெண்களுக்குப் பரிந்துகொண்டுவருபவர்களின் எண்ணிக்கை ஏற்கெனவே சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இத்தகைய சூழலில், பெண்ணுக்காகப் பரிந்துகொண்டு வந்த இதுபோன்ற சிலர் மீதும் நடவடிக்கைகள் பாய்ச்சுவதன் மூலமாகக் காவல்துறையினர் இந்தச் சமூகத்துக்கு விடுக்கும் செய்திதான் என்ன?

`இரண்டு தரப்பிலும் புகார் பெற்று விசாரணை மேற்கொள்வதுதான் சட்ட நடைமுறை' என்று சொல்லப்பட்டால், அப்படி இதற்கு முன்னர் இதுபோன்ற சம்பவங்களில் போலீஸாருக்கு பெற்றுத்தரப்பட்ட தண்டனை என்ன என்பதற்கான பதிலையே, இங்கு கேள்வியாக வைக்கிறோம்.

மூன்றாவது சம்பவம், அடுத்த அதிர்ச்சி. இரண்டு நாள்களுக்கு முன்னர் அப்பாவுடன் மெரினா கடற்கரைக்கு வந்த இளம்பெண் அவர். அப்பா பாப்கார்ன் வாங்கச் செல்ல, தனியாக நின்ற அவருக்கு ஓர் இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்தார். திரும்பிவந்த அப்பாவிடம் அந்தப் பெண் நடந்ததை சொல்லி அழ, அவர் அந்த இளைஞரை தட்டிக்கேட்டார். போதையில் இருந்த அந்த இளைஞர் அவரை அடிக்க, இதைப் பார்த்த பொதுமக்கள் உதவிக்கு வந்து, அந்த இளைஞரை அடித்தனர். மெரினா காவல்நிலையத்தில் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டபோது நடந்த விசாரணையில், அவர் மாநகர காவல்துறை ஆயுதப்படை காவலர் பாபு என்பது தெரியவந்தது. இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் `விசாரணை' நடத்திவருகின்றனர்.

உலக நாடுகளின் ராணுவங்களின் அதிகாரத்துக்குப் பாலியல் பலியான பெண்கள் முதல் வாச்சாத்தி வன்கொடுமைவரை, காவல்துறையினர் பாலியல் குற்றவாளிகளான கறுப்புச் சம்பவங்கள் நமக்குப் புதிதல்ல. அவர்கள் எல்லாம் தண்டனைக்குட்படாத குற்றவாளிகளாகவே காலத்தைக் கழித்துவிட்டதைப் பார்த்தோம். தென்காசி, வடபழனி, மெரினா காவல் நிலையங்களில் இப்போது பார்க்கிறோம்.

abuse
abuse

பாலியல் குற்றம் செய்பவர்கள் இத்துணை வெளிப்படையாக காக்கி அதிகாரத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றால், பெண்களின் கண்ணியமும் பாதுகாப்பும் அந்தளவுக்கு இங்கே கேள்வி கேட்பாரற்று கிடக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன?

- அவள் 

இந்தக் கட்டுரையை ஆடியோ வடிவில் Podcast-டாகக் கேட்க கீழே உள்ள பட்டனை க்ளிக் செய்யவும். #VoiceOfAval-ஐ உங்களுக்குப் பிடித்த Podcast Platform-ல் சப்ஸ்கிரைப் செய்யவும்.

இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்து வைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு