Published:Updated:

பணியிடத்தில் பாலியல் கொடுமை: விமானப்படை அதிகாரிக்கே இதுதான் நிலை; நீங்கள் தேசத்துக்குப் பாதுகாப்பா?

தாமதமான நடவடிக்கை என்பதன் மறைமுகப் பொருள், குற்றம் சுமத்தப்பட்டவரை பாதுகாப்பது அன்றி வேறில்லை. ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க முனையும் இவர்களை எப்படி நாட்டின் பாதுகாப்புப் படை அதிகாரிகள் என்று ஏற்றுக்கொள்வது? #VoiceOfAval

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`அவளின் குரலை' Podcast-டாகக் கேட்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். தொடர்ந்து அவள் விகடனைப் பின்தொடர சப்ஸ்கிரைப் செய்யவும்.

கோயம்புத்தூர், ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள இந்திய விமானப் படை நிர்வாகவியல் கல்லூரியில் (Indian Air Force Administrative College), ஃபிளைட் லெஃப்டினன்ட் ஒருவர், இந்திய விமானப்படை பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அது குறித்து உடனடியாக அந்தப் பெண் அதிகாரி, தன் மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனாலும் இரண்டு வாரங்களாக அவருக்கான நியாயம் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்திய விமானப்படை அதிகாரிகளின் விசாரணை தனக்கு திருப்திகரமாக இல்லை என்று பாதிக்கப்பட்ட அதிகாரி, கோயம்புத்தூர் காவல்துறையில் புகார் அளிக்க, குற்றம் சுமத்தப்பட்ட ஃபிளைட் லெஃப்டினன்ட் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். பின்னரே அது செய்தியாகி, நடந்த சம்பவம் குறித்து தெரிய வந்திருக்கிறது.

விமானப்படை பெண் அதிகாரி ஒருவருக்கே பாலியல் கொடுமை நேர்ந்திருப்பது, அது சக விமானப்படை அதிகாரி ஒருவராலேயே நிகழ்ந்திருப்பது, இந்திய விமானப்படை கல்லூரி வளாகத்திலேயே அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியிருப்பது, `விமானப்படை அதிகாரி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது' என்று குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரி தரப்பு நீதிபதியிடம் கூறியிருப்பது என... இந்த வழக்கில் வரிக்கு வரி அதிர்ச்சிகள், அவலங்கள், அநீதி.

விமானப்படை (மாதிரி படம்)
விமானப்படை (மாதிரி படம்)

என்ன நடந்தது?

இந்திய விமானப் படையின் நிர்வாகவியல் கல்லூரி, கோவை ரெட்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகள் 30 பேர், அங்கு கடந்த சில வாரங்களாகப் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரான, டெல்லியைச் சேர்ந்த 28 வயதுப் பெண் அதிகாரிதான் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட விமானப்படை பெண் அதிகாரி தன் புகாரில், ``கடந்த செப்டம்பர் 10-ம் தேதி, பயிற்சியின்போது எனக்குக் காலில் எதிர்பாராத விதமாகக் காயம் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்ட நான், என் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என் அறைக்குள் அத்துமீறி நுழைந்தார், இதே கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் சத்தீஸ்கரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி. அவர் என்னை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். இது குறித்து நான் கோவை, இந்திய விமானப் படை நிர்வாகவியல் கல்லூரியின் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் மீது, அந்தக் கல்லூரியில் இரண்டு வாரங்களாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் போகவே, கோயம்புத்தூர் கமிஷனரிடம் சென்றார் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி. தன் புகாரின் மீது இந்திய விமானப்படை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையில் தனக்கு திருப்தி இல்லை என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் சட்டப் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை)-ன் கீழ் விமானப்படை அதிகாரி மீது, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, நேற்று அவர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, `விமானப்படை அதிகாரி மீது விசாரணை நடத்த கோயம்புத்தூர் காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. டிஃபென்ஸ் கோர்ட்டில்தான் (Defense court) விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று, குற்றம் சுமத்தப்பட்ட விமான அதிகாரியின் வழக்கறிஞர் பிரமாண பத்திரம் (Affidavit) தாக்கல் செய்தார்.

பதில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை கால அவகாசம் கேட்க, நீதிபதி குற்றம் சுமத்தப்பட்ட விமானப்படை அதிகாரியை காவலில் வைக்க உத்தரவிட, இப்போது அவர் உடுமலைப்பேட்டை துணைச் சிறையில் உள்ளார்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Image by Engin Akyurt from Pixabay
ஒரு சிறுமியின் தைரியம் என்ன செய்யும்? - பத்மா சேஷாத்ரி பள்ளி சர்ச்சையும் அலசலும்! #VoiceOfAval

பொதுவாக, ஒரு சம்பவத்தில் குற்றம் சுமத்தப்படுபவர் மேல்மட்டத்தில் இருக்கும்போது அந்தக் குற்றம் வெளியில் வருவதில்லை என்பதை நாம் அறிவோம். ஆனால், இதில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர், பாதிக்கப்பட்டவர் என இருவருமே சம அந்தஸ்து உள்ள விமானப்படை அதிகாரிகள். என்றாலும், இரண்டு வாரங்களாக இந்தப் புகார் உயிரற்ற நிலையில் கிடந்ததற்குக் காரணம் என்ன? அத்துணை சமூக அழுத்தங்களையும் உடைத்து, அலுவல் ரீதியாக என்னதான் ஆண்களுடன் பெண்கள் சமமாக எழுந்து வந்தாலும், பாலின ரீதியாக ஆணுக்குச் சில படிகள் கீழேயேதான் பெண்கள் வைக்கப்படுகிறார்கள். அதுதான், இந்திய விமானப்படை நிர்வாகவியல் கல்லூரி உயர் அலுவலர்கள் பெண் விமானியின் பாலியல் வன்கொடுமைப் புகாரை இரண்டு வாரங்களாகக் கிடப்பில் போடக் காரணம் என்றுதான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாமதமான நடவடிக்கை என்பதன் மறைமுகப் பொருள், குற்றம் சுமத்தப்பட்டவரை பாதுகாப்பது அன்றி வேறில்லை. ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க முனையும் இவர்களை எப்படி நாட்டின் பாதுகாப்புப்படை அதிகாரிகள் என்று ஏற்றுக்கொள்வது? இந்திய விமானப்படை நிர்வாகவியல் கல்லூரியின் உயர் அலுவலர்கள், கோயம்புத்தூர் காவல்துறையினரின் விசாரணைக்கு தங்களது முழு ஒத்துழைப்பை அளிப்பதாகவும், இந்த வழக்கை விசாரிக்க துறைசார் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், குற்றம் சுமத்தப்பட்ட விமானப்படை அதிகாரியைக் கைது செய்ய வேண்டாம் எனக் கோயம்புத்தூர் காவல்துறையிடம் விமானப்படை உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறியதாகவும் கூறப்படுகிறது. இதில் நம்பக்கூடியது எது என்பதை, அந்த அதிகாரிகளின் இரண்டு வார `விசாரணை'யே தீர்மானிப்பதாக இருக்கிறது.

விமானப்படை அதிகாரி மீது சுமத்தப்பட்டிருப்பது, தீவிரமான பாலியல் வன்கொடுமைக் குற்றம். கல்லூரி வளாகத்திலேயே தனக்கு நேர்ந்த இத்துணை பெரிய அநியாயத்துக்கு, ஒரு பெண் விமானப் படை அதிகாரியே தன் உயர் அதிகாரிகளால் கையறு நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார். எனில், சாமானியப் பெண்களின் பாலியல் கொடுமை புகார்கள் எல்லாம் எந்தளவுக்கு சட்டை செய்யப்படாமல் தூக்கி எறியப்படும் என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

விமானப்படை - மாதிரி படம்
விமானப்படை - மாதிரி படம்
காவல்துறையின் பாலியல் குற்றங்கள் தண்டனைக்கு உட்படாதவையா... 3 சம்பவங்கள் சொல்லும் சேதி! #VoiceOfAval

மேலும், ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் புகாராகப் பதிவுக்கு வந்த பின்னரும், `விமானப் படை அதிகாரி மீது விசாரணை நடத்த கோயம்புத்தூர் காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. டிஃபென்ஸ் கோர்ட்டில்தான் (Defense court) விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று நீதிபதியிடம் கூறக்கூடிய வகையில் உள்ள சட்ட நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டியதும் மிக அவசியமாகிறது. ஒரு சாமானியனின் குற்றத்தைவிட, கல்வி மூலம் பெற்ற அதிகாரத்தில் இருப்பவர்களது குற்றங்களை, குற்றத்தன்மை அதிகம் உள்ளவை என்றே கொள்ள வேண்டும். ஒரு சாமானியனைவிட கல்வியிலும், சரி, தவறு புரிந்துணர்விலும், சட்ட நடைமுறைகளிலும், அதிகாரத்திலும் பலம்பெற்ற ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்யும்போது, அது தெரிந்தே செய்யப்படும் குற்றமாகிறது. படிச்சவன் சூதும் பாவமும் பாலியல் குற்றமும் பண்ணினால் ஐயோவென்று போக வேண்டும். ஆனால், அதிகாரம் கூடக் கூட, `அவர்களை எல்லாம் அத்துணை சுலபமாக விசாரிக்க முடியாது' என்று விசாரணைக்கே இங்கு அரண் அமைத்துக் கொடுக்கும்போது, தண்டனையைப் பற்றி என்ன சொல்வது? அவர்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்று எப்படி நம்புவது?

பெண்களுக்கு 65 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட தேசியப் பாதுகாப்பு அகாடெமியில் இடமளிக்க சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். `நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவிகித பகிர்வு, அவர்களது உரிமை' என்றிருக்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா.

என்.வி.ரமணா
என்.வி.ரமணா
நீங்கள் கட்டிக்காத்தது `கண்ணியம்' அல்ல; மொத்தமும் வக்கிரம்! #VoiceOfAval

பெண்களின் பாலின சம உரிமை எதிர்காலம் குறித்து இப்படிச் சில நம்பிக்கை வார்த்தைகளைக் கேட்டுத் திரும்புவதற்குள், சாமானியப் பெண்கள் மட்டுமல்ல, பெண் ஐ.பி.எஸ் அதிகாரி முதல் பெண் விமானப்படை அதிகாரி வரை பாலியல் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி, தங்களது புகார் மீது நடவடிக்கை எடுக்க வைக்கவே அவர்கள் போராட வேண்டியிருக்கும் நிதர்சனம் முகத்தில் அறைகிறது.

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்க முனையும் அதிகாரம், ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே சாபம்.

- அவள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு