Published:Updated:

அடிமைத்தனம்... ஆபத்து... ஆலைகள்!

ஆலைகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆலைகள்

தமிழகத்தில் 40,000-க்கும் மேற்பட்ட ஆலைகள் இருக்கின்றன. அவற்றில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றிவருகிறார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் போன்ற பகுதிகளில்தான் அதிக அளவு மில்கள் இயங்கிவருகின்றன.

அடிமைத்தனம்... ஆபத்து... ஆலைகள்!

தமிழகத்தில் 40,000-க்கும் மேற்பட்ட ஆலைகள் இருக்கின்றன. அவற்றில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றிவருகிறார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் போன்ற பகுதிகளில்தான் அதிக அளவு மில்கள் இயங்கிவருகின்றன.

Published:Updated:
ஆலைகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆலைகள்

ந்நிலையில், ‘Thomson Reuters’ செய்தி நிறுவனம் இந்த மில்களில் பணியாற்றும் 100 பெண்களிடம் ஆய்வு நடத்தியது. அதில் பணிச்சுமை, பாலியல் சீண்டல் என்று பல கொடுமைகள் அவர்களுக்கு வரிசை கட்டி நிற்க, அந்தப் பெண்களில் பலரும், மாதவிடாய் வலியைச் சமாளிக்க அந்தந்த மில்களால் வழங்கப்படும் பெயர் தெரியாத ஒரு மாத்திரையைச் சாப்பிடவைக்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வு நடத்தப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 50% பெண்களுக்கு இந்த மாத்திரைகளால் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளது துயரத்தின் உச்சம்.

அடிமைத்தனம்... ஆபத்து... ஆலைகள்!

சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையத்தின் செயல் இயக்குநர் நம்பி, “ஒரு காலத்தில் மில் வேலைகள் அரசாங்கப் பணிகளைவிட கௌரவமாகப் பார்க்கப்பட்டன. 1995-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த மில்களில் ஆண்களைப் பணியிலிருந்து நீக்கிவிட்டு, இளம் பெண்களைப் பணியமர்த்த ஆரம்பித்தனர். மில்களில் பணியாற்றுபவர்களில் 90% பெண்கள்தாம். இவர்களில் 60% - 70% பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள். இவர்களுக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் எல்லாம் வழங்கப்படுவதில்லை. அவர்களைத் தொழில் பழகுபவர்களாகத்தான் (apprentice) எடுக்கிறார்கள். தொழில் பழகுநருக்கு, ஒரு நாளைக்கு 421 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணையே வெளியிட்டுள்ளது. ஆனால், இவர்களுக்கு 200 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதே சந்தேகம்தான்.

அடிமைத்தனம்... ஆபத்து... ஆலைகள்!

அதிகமான சூடு, தூசி போன்ற அசாதாரணச் சூழல்களில் பத்து மணி நேரத்துக்கும் மேலாகப் பணியாற்றிவருகின்றனர் இப்பெண்கள். பெரும்பாலும், வெளியூர்ப் பெண்கள்தாம் பணியமர்த்தப்படுகிறார்கள். தங்குவதற்கு அந்தந்த மில்களே ஹாஸ்டல்களையும் ஏற்பாடு செய்துகொடுக்கின்றன. இடப்பற்றாக்குறை, தரமில்லாத உணவுகள் என்று அங்கும் கொடுமைகளே நீள்கின்றன. அனைத்துக்கும் மேல், மாதவிடாய் நாள்களில் இந்தப் பெண்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என்று, அந்நாள்களில் மில்களில் இவர்களுக்கு சூப்பர்வைசர்கள் மூலம் சில மாத்திரைகள் வழங்கப்படு கின்றன. விடுப்பு போட்டால் சம்பளம் கிடைக்காது என்பதால், பெண்களும் அந்த மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு ஓடாக உழைக்கின்றனர். இதனால் அவர்களுடைய உடல்நலம் மோச மடைந்துவருகிறது’’ என்றார் வேதனையுடன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவி திவ்யா, “பல பெண்களுக்கும் உடல் உபாதைகள் அதிகரிக்கத் தொடங்கிய பிறகுதான், மில்களில் பெண்களுக்கு மாத்திரைகள் கொடுக்கும் பழக்கம் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய்ச் சுழற்சியில் குறிப்பிட்ட சில நாள்களுக்கு மட்டுமே வெள்ளைப்படுதல் இருக்கும். ஆனால், மில்களில் பணியாற்றி மாத்திரை எடுக்கும் பெண்களுக்கு மாதம் முழுக்க வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கிறது. சில பெண்களுக்கு, ஒரே நாளில் மாதவிடாய் முடிந்துவிடுகிறது. சிலருக்கு மாதவிடாயே ஏற்படுவதில்லை. கணவன் - மனைவி தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் அளவுக்குப் பெண்களின் உடல்நலன் கெடுகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு இந்தப் பிரச்னைகளால், ‘நம் பிள்ளைக்குத் திருமணம் ஆக வேண்டுமே...’ ‘நம் பெண்ணுக்குக் குழந்தை பிறக்காதா?’ என்ற மன அழுத்தம் ஏற்படுகிறது. இது வெளியில் தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில், சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் அவர்கள் முன்வருவதில்லை’’ என்கிறார்.

அடிமைத்தனம்... ஆபத்து... ஆலைகள்!

தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில ஆலோசகர் ஜேம்ஸ் விக்டர், “தமிழகம் முழுவதும் ஐந்து லட்சம் பெண்கள் நேரடியாகவும், இரண்டு லட்சம் பெண்கள் மறைமுகமாகவும் மில்களில் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் இந்த மில் நிர்வாகங்கள், 30 வயதுக்கு மேல் உள்ள பெண்களைப் பணியில் வைத்துக்கொள்ளாது. அல்லது, அவர்களுக்குத் துப்புரவுப் பணி போன்றவற்றையே வழங்கும். 90% தொழிலாளர்கள் பெண்களாக இருப்பதால், இவர்களின் பிரச்னை பேசுபொருள் ஆவதே இல்லை. ‘ஃபேக்டரி இன்ஸ்பெக்டர்’ என்று முன்பு இருந்த துறையே தற்போது இல்லை. எந்த அதிகாரியும் மில்களில் ஆய்வு செய்வதில்லை. மில்லில் வேலைபார்க்கும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள்.

இந்தப் பிரச்னைகளையெல்லாம் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். மில்களில் நடைபெறும் தவறுகளையெல்லாம் தடுக்க ஒரு கமிட்டி அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், திண்டுக்கலில் 35 கம்பெனிகளில் கமிட்டி நேரடியாக ஆய்வு செய்துள்ளது. தமிழகம் முழுவதுமே இதுபோன்ற கமிட்டிகளை அமைக்க நாங்கள் முயன்று வருகிறோம்’’ என்கிறார்.

அடிமைத்தனம்... ஆபத்து... ஆலைகள்!

பெண்கள் மட்டுமல்ல, குழந்தைத் தொழி லாளர்களும் ஆலைகளில் சேர்க்கப்படுகின்றனர். குழந்தைத் தொழிலாளர்களை மட்டுமே பணிக்கு எடுக்கும் வேலையைச் செய்ய, ஒரு தனி டீமே இயங்கிவருகிறது. புரோக்கர்களும் இருக்கி றார்கள். சில மில்கள் இதற்கு ‘கண்மணி’ என்று கோடு வேர்டு வைத்துள்ளன. ‘கண்மணி’யை அழைத்து வந்தால், கவர்ச்சிகரமான பரிசு உண்டு என்று அறிவித்து ‘ஆட்களை எடுங்கள், ஆனந்தமாய் இருங்கள்’ என்று வெளிப்படையாகவே விளம்பரம் செய்து வருகிறார்கள்.

‘`பல மில்களில் பாலியல் கொலைகளும் நடந்து வருகின்றன. இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்டால், ‘அந்தப் பொண்ணு லவ் பண்ணிட்டு சுத்திட்டி ருந்துச்சு’ என்று சொல்லி வாயடைத்துவிடுவார்கள்’’ என்று இந்தப் பிரச்னையின் உள் விவரம் அறிந்தவர்கள் சொல்ல, மில் வேலைபார்க்கும் சில பெண்களிடம் பேசினோம்.

திவ்யா, ஜேம்ஸ் விக்டர், நம்பி
திவ்யா, ஜேம்ஸ் விக்டர், நம்பி

“எனக்கு 26 வயசு. மூணு வருஷமா மில்லுல வேலை பார்க்கிறேன். 250 ரூபாய் கூலி. டார்கெட் கொடுத்து எங்களை வேலைசெய்ய வைக்கிறதால ஓய்வே இருக்காது. இந்த வேலையில் சேர்ந்ததிலிருந்து அடிக்கடி உடம்புக்கு முடியாம வருது. எங்க கம்பெனியிலயும் டப்பாவுல மாத்திரை வெச்சிருப்பாங்க. அதுல கவர், பேர் எல்லாம் இருக்காது. மெடிக்கல்ல வாங்கிப்போடுற மாத்திரையைவிட இந்த மாத்திரையைச் சாப்பிட்டா உடனே தீர்வு கொடுக்கும். ஆனா, இப்போ எனக்கு மாதவிடாய்ல பிரச்னை ஏற்பட்டுடுச்சு. வீட்டுல வரன் பார்க்குறாங்க. உடம்பைக் கெடுத்துக்கிட்டோமோன்னு ரொம்ப பயமா இருக்கு.’’ - கோவை மாவட்ட மில் தொழிலாளி.

“வேலைபார்க்கும்போது பாத்ரூம் போகக்கூட ஆண் அதிகாரிகள்கிட்ட கேட்கணும்ங்கிறதால, பலரும் போகாமலே இருந்துடுவோம். உடம்பு சரியில்லைன்னு சொன்னாலும் லீவு கொடுக்காம இந்த மாத்திரையைத்தான் கொடுத்து, ‘இதைச் சாப்பிட்டு வேலையைப் பாரு’ன்னு சொல்வாங்க. நானும் அதைப் பல வருஷமா சாப்பிட்டிருக்கேன். எனக்குக் கல்யாணமாகி எட்டு வருஷமாச்சு. இன்னும் குழந்தையில்லைன்னு வீட்டுல ஒரே பிரச்னை. கருமுட்டை வெடிக்கிறதுல சிக்கல்னு டாக்டர் சொல்றாங்க. இப்போ வேலையை விட்டுட்டேன்.’’ - திண்டுக்கல் மாவட்டப் பெண்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ஒருவரிடம் இந்த மாத்திரை பற்றிக் கேட்டோம். “மில்லில் வேலைபார்க்கும் நிறைய பெண்கள் என்னிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள். அழுத்தம் நிறைந்த முகத்துடன், மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். குறிப்பாக, அந்த மாத்திரைகள் பற்றித் தெரியவந்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. புரூஃபன் போன்ற வலியைக் குறைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளாக (ஸ்டீராய்டு அல்லாத) இருக்கலாம். பல மில்கள், Primolut N என்ற மாத்திரையையும் கொடுக்கின்றன. இது மாதவிடாய் தள்ளிப்போகக் கொடுக்கப்படும் மாத்திரை. இது இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற மருந்துதான். ஆனால், அவற்றை எப்போதாவது எடுக்கும்போது பிரச்னை இல்லை. அதுவே, இவற்றை வாடிக்கையாக எடுக்க ஆரம்பிக்கும்போது, மார்பகப் புற்றுநோய், ரத்தக் குழாய்களில் அடைப்பு, ஹார்மோன் பாதிப்பு எனப் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாகவே, அதிக அழுத்தம் ஏற்படும்போது ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படும். அப்போது மாதவிடாயிலும் பிரச்னை வரும். இந்தப் பெண்கள் தங்கள் உடல்நலக் குறை பாட்டை உணர்ந்தாலும், அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கக்கூட நேரமின்றி இடைவிடாமல் உழைக்க விரட்டப்படுகிறார்கள். இவர்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும்’’ என்றார்.

சில மில் நிர்வாகத்தினரைத் தொடர்புகொண்டு மாத்திரை குறித்தும், பிற பிரச்னைகள் குறித்தும் கேட்டோம். “அவையெல்லாம் தவறான தகவல்கள். தற்போதைய சூழ்நிலையில் அனைத்து ஸ்பின்னிங் மில்களிலுமே ஆள்பற்றாக்குறை நிலவிவருகிறது. எனவே, அனைவரும் ஊழியர்களைத் தக்கவைக்கத்தான் பார்ப்போம். நீங்கள் சொல்வதுபோல் செய்தால், ஊழியர்கள் எப்படித் தொடர்ந்து வேலைக்கு வருவார்கள்? மேலும், தற்போது தொழில்நுட்பம் மிகவும் முன்னேறிவிட்டது. அனைவருமே வாட்ஸப், ஃபேஸ்புக் பயன்படுத்திவருகின்றனர். நாங்கள் அப்படிச் செய்தால், இந்நேரத்தில் அது காட்டுத்தீயாகப் பரவியிருக்கும். ஊதியம் முதல் அனைத்தையும் விதிமுறைகளுக்கு உட்பட்டே பின்பற்றிவருகிறோம். மருத்துவரின் மேற்பார்வையில்தான் நாங்கள் மருந்துகளைக் கொடுத்துவருகிறோம்” என்றனர்.

கூலிக்கு உழைப்புடன் சேர்த்து உடல் ஆரோக்கியத்தையும் தர வேண்டுமா பெண்கள்?