Published:Updated:

IRS அலுவலர் பூ.கொ.சரவணன் மேல் குவியும் #MeToo புகார்கள்... பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்வது என்ன?

கார்த்தி

''ஒவ்வொருவரிடமும் பேசும்போதுதான் அவர் தனிமனித வரம்புகளைப் புறக்கணித்தது தெரிந்தது. நான் எளிதில் இலக்காகக்கூடிய (vulnerable) நிலையில் இருந்தபோது அவர் தன் எல்லைகளை (physical boundaries) மீறினார். ''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போதுதான் அதிகரித்திருக்கின்றனவா என நாம் யாரும் அறுதியிட்டுக்கூற முடியாது. ஆனால், ஒரு பெண் முன் வந்து தனக்கு நடந்த அத்துமீறல்களை வெளியே சொன்னால், இந்த உலகம் குறைந்தபட்சம் காதுகொடுத்துக் கேட்கும் என்கிற சூழல் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாய் உருவாகி வருகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்கள் ஏன் முன்னரே, தவறு நடந்த போதே இதுகுறித்து எல்லாம் பேசவில்லை என்கிற பிற்போக்குவாத மனநிலை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதற்கான சூழ்நிலையை ஒரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பமோ, நட்பு உலகமோ, சமூகமோ உருவாக்கிக்கொடுக்கவில்லை என்பதுதான் கள யதார்த்தம்.

கடந்த இரு வாரங்களில் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் ஐஆர்எஸ் அலுவலரான பூ.கொ.சரவணன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பல சாட்டிங் ஸ்கிரீன்ஷாட்டுகள் (இங்கு பதிவு செய்யும் தன்மையில் அவை இல்லை என்பதால் தவிர்த்திருக்கிறோம்), ஃபேஸ்புக், ட்விட்டர் பதிவுகள் என அவை நீள்கின்றன. பாதிக்கப்பட்ட சில பெண்கள், இதுகுறித்து பேச முன் வந்தனர். அவர்கள் பகிர்ந்து கொண்டதை இங்கே தொகுத்திருக்கிறோம்.

Trigger Warning

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

அத்துமீறல் - 1

“பூ.கொ. சரவணனைப் பொறுத்த வரைக்கும், physical, emotional, intimate information இப்படி எதற்குமே வரைமுறைகள் கிடையாது. அவர் எந்த வரையறைகளையும் மதிக்கின்ற ஆள் கிடையாது. என்னைப் பார்த்த கொஞ்ச நேரத்திலயே, 'நீங்க singleஆ இல்லை committedஆ' எனக் கேட்டார். கொஞ்சம் கொஞ்சமாக நட்பாக்குவது எல்லாம் அவரிடம் சாத்தியம் இல்லை. எடுத்த எடுப்பிலேயே பல ஆண்டுகள் பழகியதுபோல பேசுவதுதான் அவருடைய வழக்கம். அந்த closenessஐ அவர் திணிக்க முற்படுவதுதான் நிஜம்.

உன் காதலர் என்ன செய்கிறார், கடைசியாக எந்த இடத்திற்குச் சென்றீர்கள் என இந்த மாதிரியான அந்தரங்கமான விஷயங்களை அலுவல்ரீதியான ஓரிடத்தில் கேட்பார்கள் என்று நாம் நினைத்திருக்கவே மாட்டோம். அதுபோன்ற ஒரு சூழலுக்கு நாம் நம்மைத் தயார் செய்திருக்க மாட்டோம். எனவே கேட்டவுடன் நம்மால் மறுக்கவும் முடியாது. நேரில் பார்க்கும்போது அவர் physical boundary பற்றி என்றுமே கவலைப்பட்டது கிடையாது. ஒருவரிடமிருந்து நாம் கொஞ்சம் தள்ளி நிற்கிறோம் என்றால் அது அவருக்கே தெரியும்தானே? அதை என்றுமே அவர் மதித்தது கிடையாது. 'கை பிடிக்காதீங்க, தோள் மேல கை போடாதீங்க, hug பண்ணாதீங்க' என்று கூறினாலும், நாம் அதைச் சொல்லாததுபோல, அடுத்த முறையும் அவர் அதையேதான் செய்வார்.

He makes you question your own reality. ஒருவேளை நாம்தான் இதை எல்லாம் சொல்லவில்லையோ என்று நமக்குத் தோன்றும். வெளிப்படையாகவே அந்தரங்கமாக இருக்கும் கவிதைகளை நமக்கு அனுப்பிப் படிக்கச் சொல்லுவார். நாம் நன்றாக இருக்கிறது என்று கூறி முடித்துக்கொள்ளலாம் என்று பார்த்தாலும், அடுத்து இதில் எந்த வரி நன்றாக இருக்கிறது என்று கேட்பார். 'இவ்வளவுதானா, ஒரு kiss கொடுக்க மாட்டியா, ஒரு hug கொடுக்க மாட்டியா, ஒரு kiss emoji அனுப்புவதில் என்ன குறைந்துவிடப்போகிறாய்?' என்று அடுத்து கேட்பார். இது தனியராக இருக்கும் பெண்கள் என்றில்லை, யாரையோ காதலிப்பவர்களோ, இல்லை அலுவல்ரீதியாகத் தெரிந்தவர்களோ, பிரேக் அப் ஆனவர்களோ யாராக இருந்தாலும், அந்த உறவின் narrative-ஐ அவர்தான் முடிவு செய்வார். எல்லை மீற வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக மீறுவார்.

பெண்களுக்கு தொல்லை தருவது
பெண்களுக்கு தொல்லை தருவது

வயது வித்தியாசமோ, எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதோ என எதுவுமே அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. சிறிதளவேனும் அறிமுகமே இல்லை என்றாலும், எதோ நெடுநாள் பழகியதைப்போல நம் பிறந்தநாளுக்கு அவர் status வைத்து கவிதையும் எழுதுவார். புத்தகம் கொடுப்பது எல்லாம் மிகவும் இயல்பான ஒன்றுதானே என்று அவர் கூறி வருகிறார். ஆனால், எந்த நேரத்தில், எந்த இடத்தில் யாருக்கு இந்தப் புத்தகத்தைத் தருகிறோம் என்று ஒன்று உண்டு. முழுக்க முழுக்க அலுவல் ரீதியான தொடர்பில் இருக்கும் ஒரு பெண்ணிடம் எதற்காகக் காதல் கவிதைகளைக் கொடுத்து, அந்தக் கவிதையைப் படி, இந்தக் கவிதையைப் படி என்று கூற வேண்டும்?

தொலைவிலிருந்து பார்த்தால் இதெல்லாம் தனித்தனியான நிகழ்வுகளாகத் தெரிந்தாலும், அவரின் ஒவ்வொரு அசைவும் மிகவும் கணக்கிடப்பட்டே நிகழ்த்தப்படுகிறது. முதல் சந்திப்பில் நாம் இயல்பாகப் பேசிக்கொள்ளும் விஷயங்களைத் தாண்டி, எடுத்த எடுப்பிலேயே, 'உங்கள் ஆண் நண்பர் என்ன செய்கிறார்? அவருடைய ஜாதி என்ன? நீங்கள் இருவரும் ஜாதி தாண்டி காதலிக்கின்றீர்கள் என்றால் நீங்கள் புரட்சியாளரா?' என்று கேட்பார். அதேநேரம், என்னுடைய ஆண் நண்பரைப்பற்றி என்னிடமே தவறாகப் பேசி, இதனால்தான் நீ என்னோடு commit ஆகவேண்டும் என்றெல்லாம் கூறுவார். ஓர் அரசியல்ரீதியான உரையாடலைக்கூட தனிப்பட்ட காரணங்கள் குறித்துக் கேட்பதற்காக மடைமாற்றிவிடுவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் ஐஆர்எஸ் அலுவலரானப் பிறகுதான் அவர் இன்னும் நிறைய பேருக்குத் தெரிய ஆரம்பித்தார். நிறைய இடங்களில் பேச அவரை அழைத்தார்கள். மேடை மேல் ஏறி நின்று பெண்ணியம் பேசுவார். பெண்களைப் புனிதப்படுத்தாதீர்கள், சக மனிதர்களாக மதியுங்கள் என்று ஊருக்கு மட்டுமே உபதேசம் மட்டுமே செய்வார். ஆனால், அவரின் ஆண் நண்பர்களிடம் பேசுவது எல்லாம், 'அந்தப் பொண்ண கரெக்ட் பண்ணுடா' என்றுதான் பேசுவார். அதுமட்டும் இல்லாமல், நண்பர்கள் குறித்த தனிப்பட்ட விஷயங்களை எல்லாம் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வார். 'உன்னிடம் மட்டும்தான் நான் இப்படி இருக்கிறேன்' என்று அவர் நிறைய பேரிடம் அப்படிக் கூறியது, நண்பர்களிடம் பேசியபோதுதான் தெரிந்தது. இது தனக்கு மட்டும்தான் நடந்திருக்கிறது என்று நிறைய பேர் நினைத்திருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரிடமும் பேசும்போதுதான் அவர் தனிமனித வரம்புகளைப் புறக்கணித்தது தெரிந்தது. நான் எளிதில் இலக்காகக்கூடிய (vulnerable) நிலையில் இருந்தபோது அவர் தன் எல்லைகளை (physical boundaries) மீறினார்.

இப்போதும்கூட அவர், தான் எல்லைகளை (physical boundaries) எப்போதும் மீறியதில்லை எனவும், எல்லாமே ஒப்புதலுடன் (consent) நடந்ததாகவும் கூறி வருகிறார். Boundaries மீறப்பட்டதா என்று பாதிக்கப்பட்ட பெண்கள்தானே கூற வேண்டும்? இல்லையென்றால் ஏன் இவ்வளவு பெண்கள் பேச முன்வர வேண்டும்? இவர் கடந்த காலங்களில் என்னவெல்லாம் செய்திருக்கிறார்? இவற்றை எல்லாம் வைத்தே அவர் எல்லை மீறினாரா இல்லையா என்பது நமக்குத் தெரியவரும்.
மன அழுத்தம்
மன அழுத்தம்
representational image

இப்போதும்கூட, நான் எல்லை மீறியதற்காக ஆதாரங்களை எனக்குக் காட்டுங்கள் என்று அவர் அவ்வளவு தைரியமாகக் கேட்க காரணம், அவருக்கு இருக்கும் அதிகாரம். அவருக்காக எல்லாம் செய்ய எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அப்படி எந்தவித பின்புலமும் இல்லையே? ஒருவேளை வீட்டிற்குத் தெரிந்தால் என்னவாகும் என்று பயப்படும் பெண்கள்தானே இங்கு அதிகம்பேர் இருக்கிறார்கள்?

தான் எல்லை மீறினால் மன்னிக்கப்படவே மாட்டோம் என்று நன்றாகவே உணர்ந்த இடங்களில் அவர் ஜாக்கிரதையாகவே இருந்திருக்கிறார். சந்திக்கும்போது அவர் புரொஃபஷனலாக hug செய்வது போல இருந்தாலும், நாம் அசௌகரியமாக உணர்வோம். Professional hug பற்றி பிறகு ஏன் சில நாள்கள் கழித்துப் பேச வேண்டும். அந்த hug தன்னை அவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருந்தது என்று ஏன் பேச வேண்டும்?''

அத்துமீறல் - 2

“ஃபேஸ்புக்கில் எந்தவொரு அறிமுகமும் இல்லாமல் அவராகவே வந்து என்னிடம் பேச ஆரம்பித்தார். எனக்கு அதுவே கொஞ்சம் அசௌகர்யமாகத்தான் இருந்தது. ஐந்து வருடங்களுக்கு முன் அப்போது அவர் யூபிஎஸ்சி தேர்விற்குத் தயார் செய்து கொண்டிருக்கிறார் என்று மட்டும் தெரியும். முன்னறிவிப்பின்றி தொலைபேசி அழைப்பு வரும். அவர் யாரென்றே தெரியாதபோதும், எடுத்த எடுப்பிலேயே, என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அந்தரங்க வாழ்க்கை குறித்தும் தொடர்ந்து கேள்விகளைத் திருப்பித் திருப்பிக் கேட்டுக்கொண்டிருப்பார். எனக்கு அதுகுறித்த செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விருப்பம் இல்லை என்றாலும், தொடர்ச்சியாக அதுகுறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது. தான் மட்டும் யோக்கியன் போலவும், மற்ற ஆண்கள் அனைவரும் predators போலவும் அவருடைய பேசும் தொனி இருக்கும்.

Abuse
Abuse

என்னுடைய கடந்தகால வாழ்க்கையைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது என்றாலும், என் ஆண் நண்பரை gaslight (எமோஷனல் அப்யூஸ்) செய்வது, அந்த உறவில் நான் உடல்சார்ந்த தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டேன் என்று பேசுவது, தேவையே இல்லாமல் என்னுடைய மாதவிடாய் தேதிகள் குறித்து கேட்பது அவருடைய வழக்கமாக இருந்தது. சில விஷயங்கள் குறித்து பேசுவதற்கு என்னுடைய சம்மதம் இருக்க வேண்டும். ஆனால் அவர் எப்போதும் அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இவற்றை எல்லாம்விட, எப்போது பேசினாலும், சந்திக்க வேண்டும் என்பதை அவ்வளவு நச்சரிப்போடு சொல்லிக்கொண்டே இருப்பார். 'வீட்டிற்கு வா, நிறைய புக்ஸ் இருக்கு... எடுத்துக்கோ' என்பார்.

அவரை நேரில் சந்தித்த நண்பர்கள் அனைவரிடமும் hug கொடு என்று நச்சரிப்பது, பிறகு எந்நேரமும் அவர்கள் கொடுத்த hug பற்றியே அவர்களிடம் தேவையில்லாமல் பேசுவது என்று நடந்திருக்கிறது. ஃபேஸ்புக்கில் அவர் பதிவேற்றும் புகைப்படங்கள், அவருடைய சமூகத் தொடர்புகள் எல்லாம், நாம் ஒருவேளை கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணத்தையே உருவாக்கிவிடும். தான் எல்லா இடத்தில் இருப்பதுபோலவும், எல்லாரையும் தெரியும் என்பது போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொள்வார்.

மேலும், சமூக செயற்பாட்டாளர்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது, தொடர்ச்சியாக முற்போக்கான கருத்துகளை எல்லாம் முகநூலில் பதிவேற்றுவது என்று அவர் இருந்ததால், ஒருவேளை நம்மிடம் மட்டும்தான் இப்படி இருக்கிறார்போல என்று எண்ணிக்கொண்டேன். ஆனால், அந்த இமேஜையே அவர் ஒரு கேடயம்போல அனைவரிடமும் பயன்படுத்துகிறார் என்று எனக்குப் பின்புதான் புரிந்தது.

அவர் எப்போதும் ஒரு mentor role எடுத்துக்கொள்வது இருந்தது. அதுமட்டும் இல்லாமல் அவர் எப்போது பேசினாலும் அவர் பேசுவது சரி என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொண்டே இருப்பார். பதினெட்டு, பத்தொன்பது வயதில் அவர் பேசும் பெண்கள் சிறிது அப்பாவியாக இருப்பதால், gaslighting செய்வது இருந்தது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இவரால் பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆண் நண்பர்களிடம் தேவையில்லாத மிக ஆழமான அந்தரங்க விஷயங்களைத் தோண்டிக் கேட்டு தெரிந்துகொள்வார். அந்தத் தகவல்கள் அவருக்கு ஒரு கருவிபோல, பயன்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அதுமட்டும் இல்லாமல், ஆண் நண்பர்களிடம் அவர்களுடைய காதல் வாழ்க்கையைக் குறித்து gossip செய்வதும், பிறருடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பேசுவதும் நடந்தது. அவருக்கு சிலரிடம் sexting இருந்தது. சில விஷயங்களை மட்டுமே harassment என்று இந்தச் சமூகம் வரையறுத்து வைத்திருக்கிறது.

ஆனால், தேவையில்லாமல் என்னுடைய அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதும், எனக்குத் தெரியாமல் என்னுடைய தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்வதும்கூட harassmentதான் என்று நாங்கள் எப்படிச் சொல்லி புரியவைப்பது? இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர் திருந்தியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதான் மிகவும் மோசமான தகவல்களை நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். அதுமட்டும் இல்லாமல், வயதில் இளைய ஆண் நண்பர்களிடம் தேவை இல்லாமல், 'அந்தப் பொண்ண இப்படி கரெக்ட் பண்ணனும்' என்று ஒரு sexual mentor போல பேசுவார். ஒன்று அவருக்கு இதுவரை personal boundary என்றால் என்ன என்று தெரியாமல் இருந்திருக்கும். அல்லது தெரிந்தும் இதுவரை அவர் அதனை மதிக்காமல் இருந்திருக்க வேண்டும். நீ ரொம்ப ஓப்பனாக இருக்கிறாய் என்று அனைத்துப் பெண்களிடமும் கூறி, அதன் வழியாக எல்லைகளை மீறுவதும் அவருடைய வழக்கமாக இருக்கிறது.

மேலும், ஒவ்வொரு முறையும் தப்பு செய்தாலும், இதுவரை இப்படி நடந்ததில்லை என்று மன்னிப்பு கேட்பது அவருடைய வழக்கமாகவே இருக்கிறது. ஒருமுறை செய்தால்தானே மன்னிப்பு கேட்கவேண்டும்? இவர் ஒவ்வொரு முறையும் தவறு செய்தாலும் அதற்கு மன்னிப்பு கேட்பதால் என்ன பயன்? இப்போது அவர்குறித்த செய்திகள் வரத்தொடங்கிய பிறகு, ஒவ்வொரு பெண்ணாக அவர் தொடர்புகொண்டு, மன்னிப்பு கேட்கிறார். என்னைக் கேட்டால் அதுவும் ஒரு silencing strategy என்றுதான் நான் சொல்வேன்.

எல்லாத் தவறுகளும் செய்துவிட்டு, எப்படி வெறும் ஒரே ஒரு மன்னிப்பு மட்டும் சொல்ல முடியும்? ‘நீ அப்படி உணர்ந்திருந்தால் மன்னித்துக்கொள்’ என்பதுதான் அவருடைய மன்னிப்பாக இருக்கிறது. அப்படி என்றால் என்ன அர்த்தம்? அவர் எந்தத் தவறும் செய்யவில்லையா? என்னுடைய தோழி ஒருவரிடம், நாம் பேசிய மொத்த chatகளையும் அழித்துவிட்டு, அதற்கு ஆதாரமாக empty chatboxஐ screenshot எடுத்து அனுப்புமாறு மிரட்டியிருக்கிறார். இது நிறைய பெண்களுக்கு நடந்திருக்கலாம்.

Sexual Harassment
Sexual Harassment
சித்திரிப்பு படம்

அவர் செய்வதை ஒரு நூதன harassment என்று வேண்டுமானால் சொல்லலாம். அதே சமயம், அவர் நம்மிடம் கண்ணியமாகவும் நடந்துகொள்ள மாட்டார். அவருக்கு என்ன வேண்டுமோ அதை எல்லாம் செய்துவிட்டு, அதே சமயம் அதிலிருந்து தப்பிக்கவும் அவருக்குத் தெரியும். கறுப்பு வெள்ளை என்று இங்கு பிரிக்க முடியவில்லை. அவர் என்ன செய்தாலும், அவர் சொல்லாலும், செயலாலும், அவருக்கு இருக்கும் சமூகத் தொடர்புகளாலும், அந்த grey areaவிலேயே தங்கி தப்பித்துக்கொள்கிறார். தான் வெளிப்படையாக உறுத்தும் வகையில் எதுவும் செய்யவில்லை. அதனால் தான் தப்பித்துக்கொள்ள முடியும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.

நண்பர் ஒருவருக்கு தேவையில்லாத ஒரு புகைப்படத்தை (Unsolicited photos of private part) அனுப்பிவிட்டு, அடுத்த நொடியே அதை அழித்திருக்கிறார். இப்படி திடீரென்று நடக்கின்றது என்றால், அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே நமக்குச் சிறிது நேரம் பிடிக்கும். ஆனால், அதற்குள் அந்தப் படத்தை நீக்கிவிடுவார். அந்தக் குறிப்பிட்ட படம் நீக்கப்பட்ட screenshotதான் இப்போது என் நண்பர்களிடம் இருக்கிறது.

என்ன வேண்டுமானாலும் சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம் அல்லவா? அதனால்தான் அவருடைய மன்னிப்புக்கூட அதேமாதிரி இருக்கிறது. நான் அப்படியெல்லாம் செய்யவே இல்லை. ஆனால், நீ அப்படி உணர்ந்திருந்தால் நான் அதற்கும் சேர்த்து மன்னிப்பு கேட்கிறேன் பார் என்று ஏதோ நமக்காகப் பெருந்தன்மையோடு நடந்துகொள்வதைப்போல ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார். பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லோரும் குறைந்தபட்சம் அவர் செய்த தவறுகளுக்கு ஒரு பொது மன்னிப்பேனும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்."

அத்துமீறல் - 3

மன அழுத்தம்
மன அழுத்தம்

"முதல்முறை அவரை ஒரு தனியார் நிறுவன திட்டத்தில் சேர்வதற்கான வழிமுறைகளைக் கேட்பதற்காக தொடர்புகொண்டு பேசினேன். தேவையான தகவல்களைத் தாண்டி தேவை இல்லாத விஷயங்கள் என்னென்னவோ பேசினார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் 2017-ல் நான் ஒரு செய்தி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த புதிது. சந்திக்கலாமா என்று அவர் ஒருமுறை கேட்டதும், நானும் நேரில் பார்த்து நன்றி சொல்லவில்லையே என்று நினைத்து சரி என்றேன். நேரில் பார்த்த உடனேயே என் தோளில் கைபோட்டுக்கொண்டார். நான் உடனே கையை விலக்கிவிட்டு, எனக்கு comfortable ஆக இல்லை என்று சொன்னேன். உடனே, 'Have you ever been abused?' எனக் கேட்டார். நான் 'ஆம்' என்று சொன்னதும், 'அதனால்தான் உனக்கு அப்படி ஃபீல் ஆகியிருக்கு' என்றார். அந்த மீட்டிங் முழுவதுமே அவ்வப்போது தொட்டுக்கொண்டே இருந்தார். எனக்கு uncomfortable ஆக இருந்தது. பிறகு அவருடைய நண்பர்கள் வந்ததால் அந்த இடத்திலிருந்து வேகமாகக் கிளம்பிவிட்டேன். அதற்குப் பிறகு பெரிதாக நேரில் நாங்கள் சந்தித்துக்கொள்ளவில்லை."

பூ.கொ சரவணன் ஐ.ஆர்.எஸ்.
பூ.கொ சரவணன் ஐ.ஆர்.எஸ்.
இதுகுறித்து பூ.கொ.சரவணனிடம் பேச முயன்றோம். அவர் பதில் அளிக்க முன் வந்தால், பரிசீலனைக்குப் பின்னர், அவர் தரப்பை பதிவு செய்வோம்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் இருப்பின், அவர்களும் தாமாக முன்வந்து அவர்களின் விளக்கங்களைக் கொடுக்கலாம். அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் காக்கப்படும் (anonymity) என உறுதியளிக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு