Published:Updated:

`பாலியல் துன்புறுத்தல் இருபால் மாணவர்களுக்குமே இருக்கு!' - பள்ளிகளில் உரையாடும் காவல் துறையினர்

தனக்கு நிகழ்ந்த பாலியல் பிரச்னைகள் குறித்துப் பிறரிடம் சொல்வதில் குழந்தைகளுக்கு அச்சம், தயக்கம் உள்ளிட்ட ஏராளமான உளவியல் சிக்கல்கள் இருக்கின்றன.

மாலா
மாலா

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற நிகழ்வுகளைத் தடுக்க வழிசெய்கிறது போக்ஸோ சட்டம். இந்தச் சட்டத்தின் நோக்கம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள். பாராட்டுக்குரிய இந்தச் செயல்பாடு குறித்துப் பேசுகிறார், அந்தக் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மாலா. 

Mala
Mala

``போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு இப்போதுதான் அதிகரித்துவருகிறது. அதன்படி, எங்கள் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். காவல் மற்றும் மாணவர்கள் - ஆசிரியர்களின் பணிகள் பாதிக்காத வகையில், மாதம்தோறும் சராசரியாக மூன்று அல்லது நான்கு பள்ளிகளுக்குச் செல்வோம். காவல் ஆய்வாளர், நான் மற்றும் சில பெண் காவலர்கள் விழிப்புணர்வு கொடுக்கச் செல்வோம்.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இருபால் மாணவர்களுக்கும் நடக்கிறது. தனக்கு நிகழ்ந்த பாலியல் பிரச்னைகள் குறித்துப் பிறரிடம் சொல்வதில் குழந்தைகளுக்கு அச்சம், தயக்கம் உள்ளிட்ட ஏராளமான உளவியல் சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடும். குறிப்பாக, பதின்பருவ மாற்றங்களால் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலநேரங்களில் தவறான பாதைக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இதனால், பெண் பிள்ளைகள்தாம் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  

மாலா
மாலா

இத்தகைய சூழல்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பெண் பிள்ளைகளிடம் தனியாகப் பேசுவோம். இவை முக்கியமான மற்றும் மாணவர்கள் புரிந்துகொள்ள சற்று சிரமமான விஷயங்கள் என்பதால், ஃப்ரெண்ட்லியாகவும் நகைச்சுவை உணர்வுடனும்தான் பேசுவோம்.

தனிநபர், குடும்பம், சமூகம், அரசு... பாலியல் குற்றங்கள் குறைக்கச் செய்யவேண்டியவை! -  உளவியல் பார்வை

1 - 5, 6 - 8, 9 - 12-ம் வகுப்பு வாரியாக மூன்று பிரிவுகளாக இருபால் மாணவர்களிடமும் பேசுவோம். 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு `குட் டச்', `பேட் டச்' உட்பட அவர்கள் புரிந்துகொள்ளும் பக்குவத்துக்கு ஏற்ப அடிப்படை விஷயங்களை மட்டுமே சொல்லிக்கொடுப்போம். இதேபோலவே 6 - 8 மற்றும் 9 - 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அவர்களின் வயது மற்றும் புரிந்துகொள்ளும் பக்குவத்துக்கு ஏற்ப விழிப்புணர்வு கொடுப்போம். 

school awareness
school awareness

பாலியல் ரீதியான விஷயங்களில் பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நிகழ்வுகள் குறித்தும், இதுபோன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டால் அதைப் பெற்றோர் உள்ளிட்ட முக்கியமான சிலரிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டியது குறித்தும் விளக்கிச் சொல்வோம்.

Mala
Mala

பெற்றோரிடம் சொல்லத் தயங்கும் சில மாணவர்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து எங்களிடம் சொல்வார்கள். அதன் மூலம் சில குற்றவாளிகளை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறோம். பள்ளிகள் மட்டுமன்றி, கல்லூரிகளுக்கும் அவ்வப்போது சென்று விழிப்புணர்வு கொடுக்கிறோம். இருளர் சமூக மாணவர்களின் கல்விக்காகவும் தனியாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் மாலா.