
இந்த வருடம் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர், பாலக்காடு மாவட்டத் தைச் சேர்ந்த அட்டப்பாடி பழங்குடியின இருளர் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி நஞ்சம்மா.
பழங்குடியினத்துக்குப் பெருமை சேர்த்த ஜனாதிபதி, ‘செபி’யின் முதல் பெண் தலைவர் மட்டுமன்றி, பலதுறைகளைச் சேர்ந்த பல பெண்கள் 2022-ல் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார்கள்.

வினேஷ் போகட், இந்திய மல்யுத்த வீராங்கனை. மல்யுத்த புகழ் போகட் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இவரும். 53 கிலோ எடைப் பிரிவில், 2022-க்கான காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருப்பவர், சென்ற வருடம் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் மல் யுத்தத்தில் தங்கம் வென்றார். அந்த வகையில் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டி இரண்டிலும் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றை எழுதியிருக்கிறார் வினேஷ் போகட்.

ஒடிசாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி; பழங்குடியினத்திலிருந்து வந்த முதல் இந்திய ஜனாதிபதி என்று பல்வேறு ‘முதல்’களுக்கு சொந்தக்காரர் திரெளபதி முர்மு. ஆசிரியராகத் தன் கரியரை ஆரம்பித்தவர், கவுன்சிலராக அரசியலில் அடியெடுத்து வைத்து, முன்மாதிரி எம்.எல்.ஏ-வாக செயல்பட்டு, இன்று இந்தியாவின் முதல் குடிமகளாகி இருக்கிறார்.

ஜார்க்கண்ட் பழங்குடியினத்தில் பிறந்த ஜெசிந்தா கெர்கெட்டா... கவிஞர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். இவருடைய இந்திக் கவிதைகள் மொழி பெயர்க்கப்பட்டு இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா நாடுகளின் பல்கலைக்கழகங்களின் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கின்றன. இந்திய அளவிலும், உலக அளவிலும் பல்வேறு விருது களைப் பெற்றிருக்கிற இவருடைய கவிதைகள், ஜார்க்கண்ட் மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை உலகுக்கு உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

திருமணம் முடிந்துவிட்டாலே அக்கா, அண்ணி, அம்மா என புரொமோஷன் கொடுத்துவிடும் தென்னிந்தியத் திரையுலகில், திருமண முறிவுக்குப் பின்னரும் நாயகியாகவே வலம் வந்து கொண்டிருக் கிறார் நடிகை சமந்தா. கணவரைப் பிரிந்தது, அதிக ஜீவனாம்சம் கேட்டார் என்ற விமர்சனத்துக்கு உள்ளானது, ஐட்டம் பாட்டுக்கு ஆடி சர்ச்சையானது, உடல்நலம் பாதிக்கப்பட்டு உடைந்து அழுதது என அனைத்தையும் ‘எதுவும் கடந்து போகும்’ எனத் தன்னம்பிக்கையால் எதிர்கொண்டு வரும் எவர் கிரீன் நாயகியாக கவனம் ஈர்த்தார் சமந்தா.

இந்தியாவின் இளம் பணக்கார தொழிலதிபர் கனிகா டெக்ரிவால். பாரம்பர்ய மார்வாடிக் குடும்பத் தில் பிறந்த கனிகாவுக்கு, படிப்பு முடிந்ததும் திருமணம் என்று பெற்றோர் முடிவெடுக்க, சொந்த பிசினஸ் என்று முடிவெடுத்தார் கனிகா. 2013-ல் ஜெட்செட்கோ’ ‘JetsetGo’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினார். பிசினஸ் பிக்கப் ஆன நேரத்தில் கனிகா புற்று நோயால் பாதிக்கப் பட்டார். பல போராட்டங்களுக்குப் பிறகு, அதிலிருந்து மீண்டார். தற்போது இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் மிகவும் இளையவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கனிகா.

பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், பணியிடங்களில் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் போராடி வரும் கருணா நந்தி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். போபாலில் பிறந்த கருணா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பையும் முடித்திருக்கிறார். நிர்பயா வன்கொடுமைக்குப் பிறகு, பாலியல் வன்கொடுமை மசோதாவை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியிருக்கிற கருணா, 2022-க்கான உலகின் செல் வாக்குமிக்க நபர்களுக்கான டைம் இதழின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார்.
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக, தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ந.கலைச்செல்வி, ஆகஸ்ட் மாதத்தில் நியமிக்கப்பட்டார். இந்தியா முழுக்க இருக்கிற 38 ஆராய்ச்சி மையங்களுக்கும் தலைமை தாங்கும் முதல் பெண் இவர்தான். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தையடுத்த, விக்கிரம சிங்க புரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, பள்ளிப்படிப்பை தமிழ்வழியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர், பாலக்காடு மாவட்டத் தைச் சேர்ந்த அட்டப்பாடி பழங்குடியின இருளர் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி நஞ்சம்மா. ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற மலையாளப் படத்தில் ‘களக்காத்தா சந்தணமேரா’ என்ற பாடலைப் பாடியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. மண்ணும், கால்நடைகளும் மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த நஞ்சம்மாவின் குரலுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது 2022-ல்தான்.

பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான ‘செபி’ (SEBI) யின் தலைவராக, முதன்முதலாக ஒரு பெண் நியமிக்கப்பட்டது இந்த வருடம்தான். அவர், மாதபி புரி புச். நிதித்துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொதுத்துறை அல்லது துறை சார்ந்தவர்களை நியமனம் செய்யும் வழக்கமான நடைமுறையிலிருந்து விலகி தனியார் துறையைச் சேர்ந்த ஒருவரை செபிக்கு தலைவராக நியமனம் செய்திருப்பதும் இதுவே முதல்முறை.

சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி . இவரின் ‘ரெட் சமாதி’ (Ret Samadhi) என்ற நாவலின், ஆங்கில மொழிபெயர்ப்பான ‘டூம் ஆஃப் சாண்ட்’க்கு (Tomb of Sand) இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பரிசை வென்ற முதல் இந்தி புத்தகம் இதுதான்.