Published:Updated:

``படிப்பை விட்டுடக்கூடாதுனு உறுதியா இருந்தேன்!'' சென்னை மெட்ரோவில் பணிபுரியும் திருநங்கை அக்னிஷா

சென்னை மெட்ரோவில் பணிபுரியும் திருநங்கை அக்னிஷா, தான் படித்து, வேலை கிடைத்த அனுபவங்களைப் பகிர்கிறார்.

திருநங்கை அக்னிஷா
திருநங்கை அக்னிஷா
திருநங்கைகளுக்கு ’கெளரவமான’ பணிவாய்ப்பு என்பது அரிதாகத்தான் இருக்கிறது. கடும்போராட்டங்களைச் சந்தித்தே, ’கெளரவமான’ பணிகளில் அவர்களால் அமரமுடிகிறது. சென்னை மெட்ரோ ரயில்நிறுவனத்தில் பணியாற்றுவோர் குறித்து, விகடன் ஆர்.டி.ஐ.குழு தகவல் திரட்டியபோது, இங்கு ஒரு திருநங்கை பணியமர்த்தப்பட்டுள்ளார் எனும் தகவல் மகிழ்ச்சியை அளித்தது. சைதாப்பேட்டை, சின்னமலை ரயில்நிலையத்தில் பயணச்சீட்டு வழங்குபவராக உள்ள அவரைச் சந்தித்தோம்.

"திருநெல்வேலி பக்கத்துல வள்ளியூர்தான் எங்க ஊரு. ரொம்ப அழகா இருக்கும்!" என வெள்ளந்தியான மொழியில் பேசத்தொடங்குகிறார் திருநங்கை அக்னிஷா. மெட்ரோ பணியாளர்களுக்கான சீருடையில், கழுத்தில் பல வண்ணங்கள் கொண்ட சின்ன ஷால் ஒன்றைச் சுற்றியிருந்தார். கணினி மயமான டிக்கெட் கவுண்டர்கள், குளிரூட்டப்பட்ட ரயில், நிமிடங்களில் செல்ல வேண்டிய இடத்திற்குச் சேர்ந்துவிடுதல் என, சென்னைக்குள் பயணத்தைத் துரிதமாக்கியுள்ளது இந்த மெட்ரோ ரயில்கள். சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கையில் கனிவோடு கேட்கும் குரலுக்குச் சொந்தக்காரர்தான் திருநங்கை அக்னிஷா. மெட்ரோ நிலையங்களில் பணிபுரியும் ஒரே திருநங்கை. "அக்கா, பரங்கிமலை நாலு" என பள்ளி மாணவர்கள் அக்கம் பக்கத்தில் இருக்கும் அக்காவிடம் பேசுவதை போல, உரிமையோடும் அன்போடும் பேசுகின்றனர். அவர்களுக்கு டிக்கெட் கொடுத்தவரிடம் பேச்சைத் தொடர்ந்தோம்.

திருநங்கை
திருநங்கை

"எங்க வீட்டுல அம்மா, அப்பா, நான், அண்ணன், ஒரு அக்கா. அப்பா போலீஸ்காரர். எல்லா வீடுகளையும்போலத்தான் எல்லோரும் எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பாங்க. சின்ன வயசிலேயே எனக்குள்ள பெண்தன்மை இருக்கிறதை உணர்ந்துகிட்டேன். ஆனா, ஒருத்தவங்க முன்னேறணும்னா படிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம்னு புரிஞ்சுது. அதனால என்னை எப்பவுமே வெளிகாட்டிக்கல. முழு மூச்சா படிச்சேன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிச்சேன்.

சில பேரு இந்தப் படிப்பைக்கூட ஆண்கள்தான் படிக்கணும்னு சொல்வாங்க. படிப்பு என்ன ஆண், பெண் வித்தியாசம் இருக்கோ தெரியல. படிப்பு முடிஞ்சதும் அதுக்கேத்த ஒரு வேலை கிடைச்சுது. அங்கே என்னை ஆணாகத்தான் நினைச்சாங்க. ஒரு கட்டத்துல கன்ஃபார்மாக்கும்போது, ட்ரான்ஸ் வுமனாக போடச் சொன்னேன். அவங்க தயங்கினாங்க. ஆனா, நான் கொஞ்சமும் தயங்காம வேலையை விட்டுட்டேன்.

திருநங்கை அக்னிஷா
திருநங்கை அக்னிஷா
என்னை நான் எப்படி உணர்கிறனோ அப்படியே ஏத்துக்கிறதுல இவங்களுக்கு என்ன பிரச்னை?
அக்னிஷா

பெண்ணா என்னை உணர்றேன்னு வீட்டுல சொன்னப்ப, அவங்களுக்கு அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு. அப்பா போலீஸ் என்பதால, இதைப் புரிஞ்சுக்கிட்டார், அதனால பெருசா ஏதும் சொல்ல. மத்தவங்கதான் இதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்தா சரியா போயிடும்னு சொன்னாங்க. பாவம். அவங்களுக்கு இந்த விஷயமே புரியல. அப்பறம் மெள்ள, மெள்ள புரிஞ்சிட்டாங்க. அப்பறம் சென்னையில் பி.வி.ஜி கம்பெனி மூலமா, இந்த வேலையில் இருக்கேன். என்கூட இன்னும் இரண்டு திருநங்கைகள் வேலைக்குச் சேர்ந்தாங்க. என்ன காரணம்னு தெரியல அவங்க இப்போ வர்றது இல்ல!" என்றவர், மெட்ரோ ரயிலிருந்து வந்த இருவர் வெளியே செல்ல சிரமப்பட்டதைப் பார்த்து, டிக்கெட்டை அருகில் இருக்கும் பாக்ஸில் போடச் சொல்லி வழிகாட்டினார்.

திருநங்கை அக்னிஷா
திருநங்கை அக்னிஷா
என் படிப்பு இதை விட அதிகமா சம்பளம் கிடைக்கிற வேலைக்குக்கூடப் போகலாம். ஆனா, இந்த வேலை மரியாதையா இருக்கு.
அக்னிஷா

"எப்படியோ நான் படிச்சு, வேலைக்குப் போற அளவுக்கு வந்துட்டேன். இன்னும் கொஞ்சம் மேல வந்ததும், திருநங்கைகளைப் படிக்க வெக்கிறதுக்கு என்னால முடிஞ்ச உதவிகளைப் பண்ணணும்னு ஆசை. எல்லோருக்கும் உதவ முடியாட்டியும் நாலஞ்சு பேரையாவது நல்லா படிக்க வைக்கணும்.

Vikatan RTI
Vikatan RTI
Vikatan

நான் நல்லா ஓவியம் வரைவேன். கல்கி சுப்ரமணியம்கூட சேர்ந்து கண்காட்சியில ஓவியங்களை எல்லாம் வெச்சிருந்தேன். இப்படி ஒவ்வொரு திருநங்கைக்குள்ளேயும் இருக்குற திறமையை வெளிப்படுத்தவும் உதவணும்.. இப்படி நிறைய ஆசை இருக்கு" என்கிறார் திருநங்கை அக்னிஷா. நல்ல கனவுகள் நனவாகட்டும்.