Election bannerElection banner
Published:Updated:

`க்ரியா’ தமிழ் அகராதியில் திருநர் சொற்கள்... மாற்றுப்பாலினத்தவர் பெருமிதம்!

‘க்ரியா’-வின் தற்காலத் தமிழ் அகராதி | Cre-A Tamil Dictionary
‘க்ரியா’-வின் தற்காலத் தமிழ் அகராதி | Cre-A Tamil Dictionary

திருநங்கை/திருநர் சமூகத்தினர் பயன்படுத்தும் சொற்கள் அமைந்திருப்பதுதான் இந்தப் பதிப்பின் சிறப்பாகவும், முக்கியச் சேர்க்கையாகவும் இருக்கிறது!

சமூக மாற்றங்கள் அனைத்தும் மொழியிலிருந்தே தொடங்குகின்றன. எந்த ஒன்றின் சமூக அடையாளமும் அது என்ன பெயரில் வழங்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் சமூக இயக்கத்தின் அடிப்படை மொழி!

ஒரு சமூகம் எத்தனை தான் மொழி, பண்பாட்டு ரீதியில் மேம்பட்டிருந்தாலும், அது போதாமைகளைக் கொண்டிருப்பது இயல்பு. ஆனால், அது காலப் போக்கில் களையப்பட வேண்டியது. அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக, மாற்றுப் பாலினத்தவர் சார்ந்த தமிழின் சொல்லாடல்களைக் குறிப்பிட முடியும்.

மாற்றுப் பாலினத்தவர்களை இழிவுபடுத்தும், சமூகத்திலிருந்து அவர்களை விலக்கிவைக்கும் வகையிலான சொற்களும், சொல்லாடல்களும் மிகச் சமீபத்திய காலம்வரை தமிழில் மிக இயல்பாகப் புழங்கிவந்தன. இந்தத் தவறான சொல்லாடல்களின் விளைவால், அவர்களுக்கும், பொது இடங்களில் அவர்களை எதிர்கொள்ள நேரும் சாதாரண மக்களுக்கும் ஏற்படுவது பெரும்பாலும் மோசமான அனுபவங்களே. இந்த அவலத்தைக் களையும் வகையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மாற்றுப் பாலினத்தவர்களுக்கான சுயமரியாதை, அவர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி அதிகாரப்பூர்வமாக 'திருநங்கை' என்கிற சொல்லாடலை வழக்கத்துக்குக் கொண்டுவந்தார்.

``திருநங்கைகள் இனி மூன்றாம் பாலினம்!’’- அரசு விளக்கமும் திருநங்கைகள் எதிர்ப்பும்

திருநங்கையர்களின் சமூகப் பாதுகாப்பு கருதியும், அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையிலும் 2008 ஏப்ரல் 15 அன்று தமிழக அரசு திருநங்கையர்களுக்குத் தனி நலவாரியம் அமைத்தது. இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட தினத்தைத் திருநங்கையர் தினமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட 2011 மார்ச் 1 அன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இது மாற்றுப் பாலினத்தவர் வாழ்வில் பரவலான மாற்றத்தைக் கொண்டுவந்த நிலையில், சமூகத்தில் பல மட்டங்களில் அவர்கள் இயல்பாக இணைந்து பணியாற்ற வழிவகுத்தது; தேர்தல்களிலும் வெற்றிபெற்று அனைத்து மக்களுக்குமான பிரதிநிதியாக அவர்கள் மேலெழுந்திருக்கும் சூழல் இன்று உருவாகியிருக்கிறது. சமீபத்திய நிகழ்வாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஆப்பரேட்டர், சேவை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 13 திருநர்கள் நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

‘க்ரியா’-வின் தற்காலத் தமிழ் அகராதி | Cre-A Tamil Dictionary
‘க்ரியா’-வின் தற்காலத் தமிழ் அகராதி | Cre-A Tamil Dictionary

இந்தப் பின்னணியில், சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை, மரியாதையை மேலும் உறுதிசெய்யும் விதமாக ‘க்ரியா’-வின் தற்காலத் தமிழ் அகராதி முக்கிய முன்னெடுப்பு ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. 1992-ல் முதன்முதலாக க்ரியா-வின் தற்காலத் தமிழ் அகராதி வெளியானபோதே பரவலாகப் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. அதே அகராதி, விரிவாக்கித் திருத்தப்பட்டு மூன்றாம் பதிப்பாக 2020 நவம்பர் 13 அன்று வெளியானது. இந்தப் பதிப்பின் சிறப்பாகவும், முக்கியச் சேர்க்கையாகவும் இருப்பது திருநங்கை/திருநர் சமூகத்தினர் பயன்படுத்தும் சொற்கள் அமைந்திருப்பதுதான். சட்ட ஆவணங்களிலிருந்தும், திருநங்கை/திருநர் சமூக எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்தும் சொற்களைத் தேர்வு செய்து சேர்த்திருக்கிறார்கள்.

“தற்காலத் தமிழ்ச் சமூகத்தை ஆண், பெண் என்ற இரண்டு பாலில் அடக்க முடியாது. பால் வரையறையின் எல்லைக்கோடு தற்காலத்தில் வன்மையாக இல்லை. அண்மைக் காலம்வரை தமிழின் மைய நீரோட்டத்தில் காணப்படாத விளிம்புநிலை மக்களில் ஒரு பிரிவினரான திருநர் சமூகத்தின் வாழ்க்கை அனுபவங்கள் தற்போது ஊடகங்களிலும், புத்தகங்களிலும் பொது அரங்குகளிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகத் திருநர் சமூகத்தின் தமிழ் வழக்கு முதன்முறையாக ஒரு தமிழ் அகராதியில் இடம்பெறுகிறது” என்று அகராதியின் முன்னுரை கூறுகிறது.

மொழி ஆர்வலர்கள், வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த முயற்சி, திருநர் சமூகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாக சென்னையில் தற்போது நடைபெற்றுவரும் 44-ஆவது புத்தகக் காட்சியில் க்ரியா-வின் அரங்குக்கு 'தோழி', 'சகோதரன்' உள்ளிட்ட திருநர் அமைப்புகளிலிருந்து திருநர்கள் சிலர் வருகைதந்து தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். “நாங்கள் கடந்துவந்த பாதை கடினமானது; இன்றைக்கு இந்த அகராதியில் எங்கள் சொற்கள் சேர்க்கப்பட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையளிக்கிறது. எங்கள் காலத்துக்குப் பிறகும் இது இருக்கும் என்று நினைக்கும் போது சிலிர்ப்பு மேலிடுகிறது” என்று உணர்ச்சி மேலிட, தோழி திருநர் அமைப்பின் திட்ட மேலாளர் சபிதா பேசினார்.

திருநர் சொற்கள் | Cre-A Tamil Dictionary
திருநர் சொற்கள் | Cre-A Tamil Dictionary

பதிப்பாளர், க்ரியா அகராதியின் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். திருநர் சொற்கள் சேர்ப்பில் ராமகிருஷ்ணனுடன் இணைந்து பணியாற்றிய, திருநர் செயற்பாட்டாளர் சுதா பேசுகையில், “பல கோணங்களிலிருந்து ஒரு சொல்லை அவர் அணுகுவார். ஒரு சொல் எந்த வகையிலும், யார் மனதையும் புண்படுத்திவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் சொற்களைத் தேர்வு செய்வார். எங்கள் சொற்களைச் சேர்ப்பதற்காக அவர் மிகுந்த பிரயத்தனப்பட்டார். அந்தவகையில் எங்கள் சமூகத்தின் சொற்கள் அனைத்தும் இந்த அகராதியில் பதிவாகியிருக்கின்றன” என்றார்.

இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியின் தனித்த நிகழ்வுகளில் ஒன்றாக இது அமைந்தது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு