Published:Updated:

தமிழக காவல்துறையுடனான கூட்டு முயற்சி, பெண்கள் தற்காப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் `குயிலி'!

குயிலி
குயிலி

பெண்கள் தற்காப்பு கலை கற்கவும், அவர்களுக்கான சட்டப் பாதுகாப்புகள் பற்றித் தெரிந்துகொள்ளவும், 'குயிலி' என்ற பெண்கள் தற்காப்பு பயிற்சி முகாமை, தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து யூ - டர்ன் என்கிற இணையதளம் தொடங்கியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையாறில் உள்ள பேட்ரிசியன் கல்லூரியில் இந்த முகாமின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐ.ஏ.எஸ். கவிதா இராமு, ஏ.டி.எஸ்.பி. லாவண்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்கள். யூ டர்னின் ஐயன் கார்த்திகேயன் சில தற்காப்பு பயிற்சி முறைகளை அரங்கில் செய்துகாட்டினார்.

"ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக இணையதளங்களைப் பயன்படுத்தவே கூடாது என்றெல்லாம் இல்லை. காலங்கள் மாற, அதற்கேற்றாற்போல் நாமும் மாறுவது அவசியம்தான்."
ஏ.டி.எஸ்.பி. லாவண்யா

பெண்கள் இணைய உலகத்தை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்து ஏ.டி.எஸ்.பி. லாவண்யா பேசுகையில், "ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக இணையதளங்களைப் பயன்படுத்தவே கூடாது என்றெல்லாம் இல்லை.

காலங்கள் மாற, அதற்கேற்றாற்போல் நாமும் மாறுவது அவசியம்தான். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் நாம் நம் புகைப்படங்களைப் பகிரும்முன்பு, அதை யார் யார் பார்க்க வேண்டுமென நாம்தான் முடிவுசெய்ய வேண்டும். எந்தப் பதிவை உலகுக்குத் தெரியுமாறு போடுவது, எதை நண்பர்களுக்கு மட்டும் பகிர்வது என்பதை முடிவு செய்யக்கூடிய மனப்பக்குவம் வேண்டும். என்னுடைய அனுபவத்தில், நான் சந்தித்த பல வழக்குகளில், யாரென்றே தெரியாத நாம் நேரில் பார்த்துப் பழகாத நபர்களை mutual friends (நண்பர்களின் நண்பர்கள்) என்ற அடிப்படையில் அவர்களிடம் நெருக்கமாகிச் சிக்கலில் தவித்த பெண்கள்தான் அதிகம்.

மிக முக்கியமாக, வெளிப்படையாக நாம் பேசவேண்டிய விஷயம், பெண்கள் தங்களைத் தாங்களே நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து தனது காதலனுக்கு அனுப்புகிறார்கள். இது ஆகப்பெரும் தவறு. உங்களுடைய காதலன் நல்லவராகவே இருக்கலாம். ஆனால், போனில் நாம் நம்முடைய அந்தரங்க விஷயங்களை போட்டோவாகவோ, வீடியோவாகவோ எடுத்துவிட்டு அதை delete செய்தாலும், மீண்டும் அவற்றை அந்த மெமரி சிப்பிலிருந்து எடுக்க முடியும். இதுபோன்ற அழிக்கப்பட்ட அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்களை சர்வீஸ் சென்டரில் போனைக் கொடுக்கும்போது, அதை எடுத்து வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

குயிலி : யூ-டர்ன்
குயிலி : யூ-டர்ன்

பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் மூலம் நிர்வாணப் புகைப்படங்களுடன் இணைத்து, அவற்றை வைத்து பெண்களை மிரட்டுவது போன்ற கீழ்த்தர செயல்களைப் பலர் செய்துவருகின்றனர். பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தால், அவர்கள் துணிச்சலாக சைபர் கிரைம் காவல் துறையை அணுகவேண்டும். இதற்கு முழு பக்கபலமாகக் காவல் துறை நிற்கும்" என்றார்.

'குயிலி' பயிற்சி முகாமின் தொடக்கத்திற்கு முக்கியப் பங்காற்றிய சென்னை காவல் துறை துணை ஆணையர் அரவிந்தன் ஐ.பி.எஸ். பேசுகையில், "பெண்கள் நிறைய ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். எப்போதும் தற்காப்புக்கு ஆயுதம் வைத்திருப்பது சாத்தியமல்ல... அப்படிப்பட்ட சூழலில், ஆயுதமில்லாமல் தன்னைத் தாக்க வருபவர்களிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்பதை இந்தப் பயிற்சி முகாம் பயிற்றுவிக்கிறது. இது மட்டுமில்லாமல், பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு, முதலுதவி செய்யும் வழிமுறை, இணைய வழி துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவற்றையும் காணொளி வடிவில் உருவாக்கி அதனை யூ- டர்ன் இணையத்தின் யூ- டியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறோம். 'குயிலி' பெண்கள் தற்காப்பு பயிற்சி முகாமுக்குத் தமிழக காவல் துறை உடன் நிற்கும்" என்றார்.

குயிலி
குயிலி

'குயிலி' தற்காப்பு பயிற்சி முகாமைத் தொடங்கியுள்ள ஐயன் கார்த்திகேயன் இந்தப் பயிற்சி முகாமைப் பற்றி நம்மிடம் பேசியபோது, "பெண்களின் பாதுகாப்புக்கு தற்காப்பு கலை மட்டும் போதும் என்று சொல்லக்கூடிய சாதாரண பயிற்சி முகாமல்ல இது. அவர்களுக்கு முதலில் தங்கள் பாதுகாப்புக்கு இயற்றப்பட்டிருக்கிற சட்டங்கள் பற்றிய போதுமான விழிப்பு உணர்வு இல்லை. யாராவது தங்கள் பின்னாடியே சுற்றி வந்துகொண்டிருந்தால் அதாவது, 'stalking' எனக் காவல் துறையில் புகாரளித்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்க வாய்ப்பிருக்கிறது.

இது மட்டுமின்றி, ஒரு மருத்துவ அவசரத்தின்போது, முதலுதவி எப்படிச் செய்யவேண்டும் போன்றவற்றின் அடிப்படைப் பயிற்சிகளை அளிக்கிறோம். மேலும், தற்போது பெண்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இணைய உலகம். அதைப் பெண்கள் எப்படிப் பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும் என்பதையும் பயிற்சியாக அளிக்கிறோம். இவற்றுடன் சேர்த்து பெண்களுக்கான தற்காப்புக் கலையைக் கற்பிக்கும்போதே அது முழுமையடைகிறது.

"காவல் துறையுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் இதனைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதே எங்கள் இலக்கு!"
ஐயன் கார்த்திகேயன்

முதலில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள், கல்லூரிப் பெண்கள் ஆகியோருக்குப் பயிற்சியளித்து, அவர்கள் மூலம் அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று பயிற்சியளிக்கவுள்ளோம்." என்றார்.

அடுத்த கட்டுரைக்கு