பிரபல இந்திய பத்திரிகையாளர் ராணா அயூப், தி வாஷிங்டன் போஸ்ட்டில் கட்டுரையாளராக இருப்பவர். முன்னதாக, `தெஹல்கா' புலனாய்வு மற்றும் அரசியல் இதழில் பணியாற்றியபோது, பா.ஜ.க, மோடி, அமித்ஷா என்று இவர் வைத்த குற்றச்சாட்டுகளும், புலனாய்வுக் கட்டுரைகளும் பரபரப்பானவை. இந்நிலையில், தொண்டு என்ற பெயரில் இவர் பொதுமக்களிடமிருந்து பெற்ற நிதியை பணமோசடி செய்ததாகவும், தன்னுடைய தனிப்பட்ட செலவுகளுக்காக அந்தப் பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றியதாகவும் அமலாக்க இயக்குநரகம் 1.77 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரின் சொத்துகளை முடக்கி அவரை விசாரணைக்கு உட்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், பத்திரிகையாளர் ராணா அயூப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெண் வெறுப்பையும், இணையத்தில் மதவெறி தாக்குதல்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டது. அவர் மீதான நீதித்துறை தாக்குதல்களையும் (judicial harassment) விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டது.
பிப்ரவரி 21 திங்கட்கிழமை, ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு, இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து எதிர் ட்வீட்டை பதிவிட்டது. அந்த ட்வீட்டில், `` `நீதித்துறை துன்புறுத்தல்' என அழைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் தேவையற்றவை. இந்தியா சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டு இருக்கிறது. யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என்பதில் தெளிவாக உள்ளது. இப்படி தவறான கதையை முன்வைப்பது ஐ.நாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஜெனீவாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் இந்த விவகாரம் வாய்மொழியாகத் தொடரப்படும் என்று புதுதில்லியில் உள்ள அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.