உ.பி லவ் ஜிஹாத் வழக்கு: ஆதாரமில்லை என விடுதலை செய்யப்பட்ட கணவர்... உறுதியான மனைவியின் கருச்சிதைவு!

திருமணத்தைப் பதிவுசெய்ய கடந்த 4-ம் தேதி சார்பதிவாளர் அலுவலகம் செல்கையில் வலதுசாரி இயக்கத்தால் தடுக்கப்பட்டு ரஷீத் அலி மற்றும் அவரின் மனைவி, சகோதரர் ஆகியோர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
உத்தரப்பிரதேசத்தில் 'லவ்ஜிகாத்' சர்ச்சையில் சிக்கி, அரசு முகாமில் போடப்பட்ட ஊசியால் கருச்சிதைவு ஏற்பட்டதாக் கூறப்பட்ட பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மதமாற்ற தடைச் சட்டம் இயற்றப்பட்டு இந்தச் சட்டத்தின் கீழ் இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த மாதம் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழ் இதுவரையிலுமே 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பம்தான், ரஷீத் அலியுடையது. அவரின் மனைவிக்குதான் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மொரதாபாத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞரான ரஷீத் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஓர் இந்துப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் திருமணத்தைப் பதிவுசெய்ய கடந்த 4-ம் தேதி சார்பதிவாளர் அலுவலகம் செல்கையில் வலதுசாரி இயக்கத்தால் தடுக்கப்பட்டு ரஷீத் அலி மற்றும் அவரின் மனைவி, சகோதரர் ஆகியோர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ரஷீத் அலியையும் அவரது சகோதரரையும் கைது செய்த காவல்துறை மொரதாபாத் சிறையில் இருவரையும் அடைத்ததுடன் அவரின் மனைவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது.
15 நாள்கள் கடந்த நிலையில் ரஷீத்தின் மனைவி மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜராகி, தான் மேஜர், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறித் திருமணம் செய்துகொண்டதாகவும், யாரும் தன்னை வற்புறுத்தவில்லை என்றும் தெரிவித்த பிறகு, அவரை கணவரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அரசு காப்பகத்தில் தன்னிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டார்கள் என அந்தப் பெண் தெரிவித்திருந்தார். மேலும் தான் 7 வார கர்பமாக இருந்தாகவும், அங்கு தனக்கு ஊசி போட்ட பிறகு, கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் வயிறு வலி என்று கூறியபிறகும் காப்பகத்தினர் அலட்சியமாக இருந்ததாகவும் உடல்நிலை மிகவும் மோசமானதும்தான் தன்னை மருத்துவமனையில் சேர்த்தனர் என்றும் குற்றம்சாட்டி இருந்தார். காப்பகம் மற்றும் மருத்துவமனை தரப்பினர், இதற்கு விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில் அவருக்குத் தனியார் மருத்துவமனையில் அல்ட்ராசவுண்ட் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவு வந்துள்ளது. தனியார் மருத்துவமனையின் மருத்துவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்தத் தகவலைக் கூறியிள்ளார்.

மேலும் அவரது கர்பப்பையில் தொற்று ஏற்பட்டுள்ளது எனவும், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். மருத்துவப் பரிசோதனையில், வயிற்றில் கரு காணப்படுவதாகவும், ஆனால், இதயத்துடிப்பு இல்லை எனவும் முடிவுகள் வந்துள்ளன. அரசு காப்பகம் தங்களால்தான் கருச்சிதைவு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுத்துவருவதுடன் இதுகுறித்து கருத்து கூறாமல் அமைதிகாத்து வருகிறது.
இதற்கிடையே இந்துப் பெண்ணைக் கட்டாய மதமாற்றம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லாததால், ரஷீத் அலியையும் அவரின் சகோதரரையும் உத்தரப்பிரதேச நீதிமன்றம் விடுவித்துள்ளது. 13 நாள்கள் சிறையில் இருந்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டு, கைது செய்யப்பட்ட இளைஞர்கள், கண்ணீர் சிந்திய அவரின் அம்மா, அரசு காப்பகத்தில் கலைந்த பெண்ணின் கரு... இவற்றுக்கெல்லாம் பதில் சொல்வது யார்?