Published:Updated:

அமீர் தெரிந்தே அப்படி சொல்லியிருக்கமாட்டார்... ஆனாலும்? #VoiceOfAval

நமக்குள்ளே...
நமக்குள்ளே...

இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் புதிய முன்னெடுப்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய `800' என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு எழுந்து, அப்படத்திலிருந்து அவர் விலகினார். இதற்கிடையே, இப்பிரச்னை தொடர்பாக ட்விட்டர் பதிவு மூலம் விஜய் சேதுபதியின் பெண் குழந்தைக்கு, வக்கிரபுத்திக்காரர் ஒருவர் சிறார்வதை மிரட்ட விடுக்க, காவல்துறை அந்த நபரைத் தேடிக்கொண்டிருக்கிறது. தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் இன்று பேசியுள்ள அந்த நபர், `என்னை மன்னித்து விடுங்கள்' என்று கேட்டுள்ளார்.

முன்னதாக, ஐ.பி.எல் மேட்ச் ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தபோது, குஜராத்தை சேர்ந்த 16 வயது ப்ளஸ் டூ மாணவர், இதேபோல வக்கிரபுத்தியுடன் தோனியின் பெண் குழந்தைக்கு சிறார்வதை மிரட்டல் விடுத்து, கைதுசெய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

தெருச் சண்டை, பங்காளிச் சண்டை, நண்பர்களுக்கு இடையிலான சண்டை, தொழில்முறை சண்டை என எல்லா இடங்களிலும், எதிரிலிருக்கும் ஆணை அவமானப்படுத்த, அவன் வீட்டுப் பெண்களை இழிவார்த்தைகளில் திட்டுவது, சமூக மனநோய். அதுவே இப்போது சோஷியல் மீடியாவில் புதுப்புது வடிவங்களிலும் தொடர்கிறது.

பெண்கள் மீதான வன்முறை
பெண்கள் மீதான வன்முறை
Representational Image

பெண் என்பவள் ஆணின் சொத்து, குடும்பத்தின் மானம், எல்லா புனிதங்களுக்கும் பொறுப்பானவள் இப்படி பலவிதங்களிலும் காலகாலமாக சித்திரித்து வைத்துள்ளார்கள். அதன் விளைவுதான் ஓர் ஆணுடன் பிரச்னை ஏற்படும்போது, ‘உன் சொத்தை நாசம் செய்கிறேன், மானத்தை சிதைக்கிறேன், உன் வீட்டுப் புனிதத்தை தகர்க்கிறேன் பார்’ என்கிற வக்கிரபுத்தியுடன், அவன் அம்மாவை, மனைவியை, காதலியை, சகோதரியை, மகளை வக்கிரத்துடன் பேசுகிறார்கள். பெண்கள் குறித்த கெட்டவார்த்தைகளைப் பேசுபவர்கள் யாரோ முகமூடிக் குற்றவாளிகள் அல்லர். அலுவலகம், டீக்கடை, தெரு, ஏன்... ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளுமே இருக்கிறார்கள்.

ஒருவிதமான இந்த மனச்சீழ், தற்போது சமூக ஊடகங்களிலும் பரவி முற்றிவருவது பேரதிர்ச்சியான விஷயமே. இவர்களுக்கு, ஆணாதிக்கம், மனநோய், வக்கிரம் என்ற வார்த்தைகளையெல்லாம் தாண்டிய கொடூரமான சொல்லை தேடவேண்டிய நிலைக்கு இந்தச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது என்பதே உண்மை.

இதற்கிடையில், இயக்குநர் அமீர், விஜய் சேதுபதியின் குழந்தைக்கு சிறார்வதை மிரட்டல் விடுத்த நபரைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டார்.

இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர்

அதில், `பொதுவெளியில் பயணிக்கிற ஒவ்வொரு மனிதனின் செயலுக்காகவும் அவரது குடும்பத்தினரை அவமானப்படுத்துவதும் பொதுவெளியில் நச்சுக்கருத்துகளைப் பதிவிடுவதும் நல்ல சமூகத்தின் அடையாளம் கிடையாது’ என்று சாடியிருப்பவர், அடுத்து குறிப்பிட்டிருக்கும் வரி, முற்றிலும் முரண்.

``அப்படி செய்பவர்கள் நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை" என்றிருக்கிறார் அமீர். வக்கிரக்காரர் ஒருவரின் குற்றத்துக்காக, அவருடைய அம்மா `நல்ல’ அம்மா இல்லை என கணிக்கும் அமீர், `குடும்பத்தினரை அவமானப்படுத்துவது’ குறித்து அதே அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

இப்படித்தான், ஓர் ஆணை சாட அவன் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்தும் மனநிலையும் வார்த்தைகளும் ஆண்களின் மரபணுவில் தங்களையும் அறியாமல் பின்னிக்கிடக்கிறது.

அசிங்கம் என்பது அதுதான்... எதிரி வீட்டுப் பெண்கள் அல்லர்!

இந்தக் கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க...

அடுத்த கட்டுரைக்கு