``ஒரு தாயின் போராட்டம் இது!" - பினராயி விஜயனுக்கு எதிராகப் போட்டியிடும் வாளையார் சிறுமிகளின் தாய்

"ஒரு தாய் நீதி கேட்டு தலையை மொட்டையடித்துக்கொண்டு தெருவில் அலையும் அவலநிலை என்னுடன் முடியட்டும். நீதி கேட்டு முதலமைச்சரின் காலை பிடித்து அழுதிருக்கிறேன் நான்" என்கிறார் பினராயி விஜயனை எதிர்த்துப் போட்டியிடும் வாளையாறு சிறுமிகளின் தாய்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாறு அட்டப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் இரண்டு தலித் சகோதரிகள். அதில் 14 வயதான ஒரு சிறுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். அது தற்கொலை என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இறந்த சிறுமியின் தங்கையான 9 வயதுச் சிறுமி 2017 மார்ச் மாதம் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இரண்டு மாத இடைவெளியில் ஒரே வீட்டில் இரண்டு சகோதரிகளுக்கு நேர்ந்த துயரம் கேரளத்தையே உலுக்கியது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், இரண்டு சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் சிறுமிகளின் தாய்வழி உறவினரான மது என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறுமிகளின் தந்தையின் நண்பரான இடுக்கியைச் சேர்ந்த ஷிபு கைது செய்யப்பட்டார். போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 2019 அக்டோபரில், குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேரையும் கோர்ட் விடுவித்தது. கேரள அரசின் வழக்கறிஞர் சரியாக வாதாடாமல் போனதால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்பித்துவிட்டதாகக் கூறப்பட்டது.

வாளையாறு சிறுமிகளுக்கு நேர்ந்த கொடும் பாதகத்துக்கு நீதி வழங்குவதில் கேரள பினராயி விஜயன் அரசு மெத்தனமாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தன் மகள்களின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை எனக் கூறி இரண்டு பெண் குழந்தைகளின் தாய், தலையை மொட்டை அடித்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் நடப்பதால், பினராயி விஜயனுக்கு எதிராக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாளையாற்றில் இறந்த சிறுமிகளின் தாய் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) முடிவு செய்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் களம் இறங்கத் தயாராகிவருகிறார் சிறுமிகளின் தாய்.
இதுகுறித்து வாளையாறு சிறுமிகளின் தாய் கூறுகையில், "என் மகள்களுக்கு நீதி கேட்டு காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை நீதி யாத்திரை நடத்தினேன். இந்த யாத்திரை நடத்துவதைவிட முதல்வருக்கு எதிராகப் போட்டியிடுவதுதான் சிறந்தது என முடிவுசெய்து, தர்மடத்தில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவுசெய்தேன். நான் போட்டியிடுவதில் அரசியல் இல்லை. குழந்தைகளை இழந்த ஒரு தாயின் போராட்ட உணர்வு மட்டுமே உள்ளது. எனக்கு அளித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என முதலமைச்சரிடம் நேரடியாகக் கேள்வி கேட்க வேண்டும். அதற்காகக் காத்திருக்கிறேன்.

எனக்கு ஏற்பட்ட துயரத்தைப்போல இனி ஒரு குடும்பத்துக்கும் ஏற்படக் கூடாது. ஒரு தாய் நீதி கேட்டு தலையை மொட்டை யடித்துக்கொண்டு தெருவில் அலையும் அவலநிலை என்னுடன் முடியட்டும். நீதி கேட்டு முதலமைச்சரின் கால்களைப் பிடித்து நான் அழுதிருக்கிறேன். ஆனால், நீதி கிடைக்கவில்லை. என் மகள்களின் வழக்கை மாற்றிய போலீஸ் துறையை, பினராயி விஜயனின் அரசு காப்பாற்றியது. நான் தர்மடத்தில் போட்டியிடுவது வெற்றிபெற அல்ல. நீதி மறுக்கப்பட்டது ஏன் என்று முதல்வர் பினராயி விஜயனிடம் கேள்வி கேட்பதற்காகத் தான்" என்கிறார்.
பிள்ளைகளை இழந்த ஒரு தாயின் துயரமும் கோபமும் தேர்தல் களத்துக்கு வந்துள்ளது.