`இல்லத்தரசிகள் உழைப்பின் உண்மையான மதிப்பு என்ன?' விவாதத்திற்கு வித்திட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு

ஆண் ஏதோவொரு நிறுவனத்தில் குறிப்பிட்ட ஊதியத்துக்குப் பார்க்கும் வேலையைவிடப் பல மடங்கு அதிகமாக வீட்டில் பெண் வேலை பார்த்தாலும் அது ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
சேலம் மாவட்டம் பெரியவீராணம் பகுதியைச் சேர்ந்தவர் 39 வயது புவனேஸ்வரி. கடந்த 2017-ம் ஆண்டு இவர் ஒரு விபத்தில் சிக்கினார். பெரியவீராணம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த புவனேஸ்வரி மீது தறிகெட்டு வந்த தனியார் பேருந்து ஒன்று மோதியது. அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும் புவனேஸ்வரியின் முதுகுத்தண்டு பாதிப்படைந்தது. அதை சரிசெய்ய முடியவில்லை. அவரால் இனிமேல் இயல்பாக நடமாட முடியாது, 60 சதவிகித ஊனம் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இதையடுத்து, உரிய நிவாரணம் கேட்டு சேலம் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த தீர்ப்பாயம் புவனேஸ்வரிக்கு இல்லத்தரசி என்ற அடிப்படையில் மாதம் 4,500 ரூபாய் வீதம் நிர்ணயம் செய்து இழப்பீடாக 8,46,000 ரூபாய் வழங்குமாறு 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
``இந்த இழப்பீட்டுத்தொகை போதாது. அதிகரித்து வழங்க வேண்டும்” என சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் புவனேஸ்வரி.
`ஆற்றில் போட்டாலும் அளந்துபோடு’ என்பார்கள். இங்கே எல்லாவற்றுக்கும் ஓர் அளவுகோல் இருக்கிறது. ஒரு மதிப்பீடு இருக்கிறது. ஆனால், இல்லத்தரசிகளின் உழைப்புக்கு இந்த நாள்வரை எந்த அளவுகோலும் இல்லை, மதிப்பீடும் இல்லை. வேலைக்குச் செல்லும் ஆணைவிட வீட்டிலிருக்கும் பெண் எப்போதும் குறைத்தே மதிப்பிடப்படுகிறாள். அந்த ஆண் ஏதோவொரு நிறுவனத்தில் குறிப்பிட்ட ஊதியத்துக்குப் பார்க்கும் வேலையைவிடப் பல மடங்கு அதிகமாக வீட்டில் பெண் வேலை பார்த்தாலும் அது ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. `நீங்க மட்டும்தான் வேலைக்குப் போறீங்களா... வீட்ல ஒருத்தி நான் மாடா உழைக்கிறேனே அது உங்க கண்ணுக்கு தெரியலையா?’ என கண்ணீர் வடிக்காத இல்லத்தரசிகளைப் பார்ப்பது அரிது. கண்டுகொள்ளாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்த இல்லத்தரசிகளின் உழைப்பில் வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஒன்று.

ஆம்... புவனேஸ்வரியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ``விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்மணியால் இனிமேல் வேறொருவர் துணையின்றி வாழ இயலாது. குடும்பத்துக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் இல்லத்தரசிகளின் பணியை மற்ற தொழிலாளர்கள், பணியாளர்களின் உழைப்புடன் எப்படி ஒப்பிட முடியும்? இந்த உண்மையைத் தீர்ப்பாயம் கவனிக்கத் தவறியதுடன் தவறான கணக்கீட்டு அணுகுமுறையில் இல்லத்தரசிக்கு சம்பளம் நிர்ணயம் செய்துள்ளது. எனவே தீர்ப்பாயத்தின் உத்தரவு மாற்றம் செய்யப்படுகிறது. தீர்ப்பாயம் நிர்ணயித்த தொகையை இரண்டு மடங்காக்கி மனுதாரர் புவனேஸ்வரிக்கு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகையைச் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். புவனேஸ்வரி வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து ஆண்டுக்கு 7.5 சதவிகிதம் அந்தத் தொகைக்கான வட்டியும் சேர்த்து வழங்கப்பட வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
``உயர் நீதிமன்றம் நிர்ணயித்த தொகை போதுமானதா?" என்ற வாதத்தைக் கடந்து இல்லத்தரசிகளின் உழைப்பு குறித்த விவாதத்தை ஏற்படுத்திய வகையில் இந்தத் தீர்ப்பு முக்கியமானதாக மாறியிருக்கிறது. இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தியிடம் பேசினோம்.
``சேலம் புவனேஸ்வரி இனிமேல் வீட்டு வேலையும் பார்க்க முடியாது, வேறு வேலைக்கும் செல்ல முடியாது. தன்னைப் பார்த்துக்கொள்ளவும் இன்னோர் ஆள் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே மூன்று விஷயங்களைக் கணக்கிட்டு அவருக்கு இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளை இந்தச் சமூகம் மதிப்பீடு செய்ததே இல்லை. காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும்வரை பெண்கள் ஓயாமல் ஏதாவதொரு வேலை செய்துகொண்டேதான் இருக்கின்றனர். வீட்டிலிருந்தாலும் அவர்களுக்கு ஓய்வு நேரம் கிடைப்பது என்பதென்பது குதிரைக் கொம்புதான்.

இதே வீட்டு வேலைகளை, குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும் செய்வதற்கு ஆள் வைத்தால் 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் வீட்டிலிருக்கும் பெண்களே செய்தால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஓர் ஆண், தான் சம்பாதிக்கிறேன் என்ற காரணத்தைப் பிரதானமாக முன்வைத்துதான் வீட்டிலிருக்கும் பெண்ணை ஒடுக்குகிறான். அவனுக்கு அவனுடைய நிறுவனத்தில் ஒரு நாளைக்கு வழங்கப்படும் ஊதியம் அவன் அன்றைக்குப் பார்த்த வேலைக்கு மட்டுமானது கிடையாது. அவன் வீட்டுக்குச் சென்று மறுநாள் வேலைக்குத் தயார்படுத்திக்கொண்டு வருவதற்கும் சேர்த்துதான் ஒருநாள் ஊதியம் வழங்கப்படுகிறது. ஓர் ஆண் வேலைக்குத் தயாராவதற்கு உதவுவது பெரும்பாலும் அந்த வீட்டுப் பெண்தானே. ஆக அவன் பெறும் ஊதியத்திலும் அந்த வீட்டுப் பெண்ணுக்குப் பங்கிருக்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.
சரி ஆண்கள் ஏன் வீட்டு வேலைகளைச் செய்ய மறுக்கின்றனர்? ஹோட்டலில் சமையல்காரராகவோ, சப்ளையராகவோ வேலை பார்க்க முடியும் ஆண்களால் ஏன் தங்கள் வீட்டு சமையலறையில் வேலை செய்ய முடியவில்லை. காரணம் சம்பளம். இன்னோர் இடத்துக்குச் சென்று வேலைபார்த்தால் சம்பளம் கிடைக்கும். வீட்டில் செய்தால் சம்பளம் கிடையாது என்பதுதான். ஆண்,பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான வீடுகளில்கூட பெண்கள்தான் வீட்டுவேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. வீட்டு வேலைகளும் மதிப்பிடப்பட வேண்டும். ஆண்களும் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். அதுதான் சரியானது” என்றார்.