Published:Updated:

பள்ளிகளில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் சிறார்கள்; தடுப்பதில் பெற்றோர்களின் பங்கு என்ன?

Representational Image
Representational Image

ஆன்லைன் வகுப்புகளில்கூட பாலியல் தொல்லை கொடுக்க முடியும் என்றால், மாணவர்களை எப்படிப் பாதுகாப்பது?

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்கிற சம்பவங்களை அடிக்கடி கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த வரிசையில் கடந்த சில தினங்களாக பி.எஸ்.பி.பி பள்ளிக்கூடமும் இணைந்துகொண்டது. அந்தப் பள்ளிக்கூடத்தில் வணிகவியல் ஆசிரியராகப் பணிபுரிந்த ராஜகோபாலன், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புக்கு வந்ததாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ``ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதற்குத் தனிக்குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. ஆன்லைன் வகுப்புகளில் இப்படி ஒரு விஷயம் நடக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இனி வரும் காலங்களில் இது மாதிரியான தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம்" என்றிருக்கிறார்.

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு

இதற்கிடையே, பி.எஸ்.பி.பி மாணவர்கள் ஆசிரியர் ராஜகோபாலனின் பாலியல் தொல்லைகள் பற்றி சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்ததும், இன்னும் சில பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளைப் பற்றி பகிர ஆரம்பித்துவிட்டார்கள். ஆசிரியர்கள் கல்விக்கண் திறப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால், அவர்களில் சிலர் ராஜகோபாலன்போல இருந்தால் என்ன செய்வது? ஆன்லைன் வகுப்புகளில்கூட பாலியல் தொல்லை கொடுக்க முடியும் என்றால், மாணவர்களை எப்படிப் பாதுகாப்பது? ஆசிரியர் அ.வெண்ணிலா, வழக்கறிஞர் மாதுரி, ஸ்கூல் கவுன்சிலர் திவ்யபிரபா ஆகியோரிடம் பேசினோம்.

``அவர்களைப் பேச விடுங்கள்’’ - வெண்ணிலா

``பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு, அடுத்தடுத்து தவறு நடக்காமல் இருப்பதற்கான வழிகளைப் பற்றி யோசிக்கிறோம் என்பதுதான் அர்த்தம். வாழ்க்கையில் ஒரு முறை பாலியல் தொல்லையைச் சந்தித்துவிட்டால், அது அந்தக் குழந்தையின் வாழ்க்கை முழுக்க வலியாக மாறிவிடும்.

அ.வெண்ணிலா
அ.வெண்ணிலா

குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு நிகரான நடவடிக்கைதான் பாதுகாப்பும். இதற்குப் பெற்றோர்களும் பள்ளிக்கூட நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும். வீடுகளில் பெண் குழந்தைகள் பேசுவதற்கு இன்னமும் சில வரையறைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் வீட்டில் பகிர்ந்துகொள்ள முடியும் என்கிற நம்பிக்கையைப் பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள்தாம் ஏற்படுத்த வேண்டும். அவன்/அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று புகார் சொன்னால் `நீ என்ன செஞ்சே’ என்று பெற்றோரும் ஆசிரியர்களும் கேட்டுவிடுவார்களோ என்கிற அச்சவுணர்வு மாணவர்களிடம் இருப்பதைப் பார்க்கிறேன். இது மாற வேண்டும். அப்போதுதான் பாலியல் தொல்லைகளை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய முடியும்.’’

``ஐ.சி.சி.பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ - வழக்கறிஞர் மாதுரி

``பத்து பெண்களுக்கு மேல் வேலைபார்க்கும் இடத்தில் உள் புகார் கமிட்டி (இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி) இருக்க வேண்டும் என்பது, பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கும் பொருந்தும். இப்படியொரு கமிட்டி நம்முடைய பள்ளியில் இருக்கிறது;

- வழக்கறிஞர் மாதுரி
- வழக்கறிஞர் மாதுரி

பாலியல் தொல்லை ஏற்பட்டால் அந்த கமிட்டியில் புகார் செய்யலாம் என்பதுபற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்குப் பள்ளிக்கூட நிர்வாகம்தான் ஏற்படுத்த வேண்டும்.

ஆசிரியர் ராஜ்கோபாலன் மீது கிரிமினல் குற்றம் மற்றும் போக்சோ என ஒரே நேரத்தில் இரண்டு வகைகளில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.’’

``ஸ்கூல் கவுன்சலரிடம் தொடர்பில் இருக்க வேண்டும்!’’ - ஸ்கூல் கவுன்சிலர் திவ்யபிரபா

``நான் உளவியல் ஆலோசகரா வேலைபார்க்கிற பள்ளிக்கூடங்களில் `மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ய மாட்டேன்; மாணவர்களைக் கொடுமைப்படுத்த மாட்டேன்’ என்று `சைல்டு புரொடக்‌ஷன் பாலிசி’யில் ஆசிரியர்கள் உட்பட எல்லா ஊழியர்களும் கையெழுத்திட வேண்டும். அதில் என்னைப் போலப் பகுதி நேரமாக வேலை செய்கிற உளவியல் ஆலோசகர்களும் அடக்கம். தவிர, மாணவர்களை அணுகுவது தொடர்பான பயிற்சியும் எடுத்துக்கொள்ள வேண்டும். இது அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் இருக்க வேண்டும்.

அடுத்து, பள்ளிக்கூடங்களில் இருக்கிற உளவியல் ஆலோசகர்கள் மாணவர்களின் பிரச்னையைக் காதுகொடுத்துக் கேட்பவராகவும், இவரிடம் நம்முடைய பிரச்னையைச் சொல்லலாம் என்கிற அளவுக்கு நம்பிக்கையானவராகவும் இருக்க வேண்டும்.

ஸ்கூல் கவுன்சிலர் திவ்யபிரபா
ஸ்கூல் கவுன்சிலர் திவ்யபிரபா

இந்த ஆன்லைன் வகுப்பு காலத்தில், தங்களுக்குத் தேவையில்லாத மெசேஜ்களையோ வீடியோவையோ ஆசிரியர்கள் அனுப்பினால், மாணவர்கள் உடனே அதைப்பற்றிப் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். இதற்கான வெளியைப் பெற்றோர்கள்தாம் ஏற்படுத்தித் தர வேண்டும். வகுப்புகள் ஆன்லைனில் நடப்பதுபோல அந்தந்தப் பள்ளிக்கூடங்கள், தங்கள் பள்ளிக்கூடத்தின் உளவியல் ஆலோசகரை வாரமொரு முறை மாணவர்களிடம் பேச வைக்க வேண்டும். அவர்கள் மாணவர்களின் சார்பாக, அவர்களுடைய பிரச்னைகளை பள்ளி நிர்வாகத்திடம் பேசுகிற அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவராக இருக்க வேண்டும். இப்போதைக்கு இதுதான் தீர்வு.’’

ஆக, மாற்றங்கள் பெற்றோர்களிடமிருந்தும் தொடங்க வேண்டும்!
அடுத்த கட்டுரைக்கு