Published:Updated:

`மீ டூ'வை மோசமாக எதிர்கொண்ட தமிழ்ச் சமூகத்திற்கு பிரியா ரமணி தீர்ப்பு சொல்லும் பதில் என்ன?

Journalist Priya Ramani
Journalist Priya Ramani ( AP Photo/File )

தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய வாக்கியங்கள் சில, `மீடூ' பெண்களை விமர்சித்தவர்களுக்கு, அவதூறு பேசியவர்களுக்கான பதில்.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு, பின்னர் பாலியல் கொடுமைகளுக்கு எதிரான செயற்பாட்டாளர் ஆனவர் அமெரிக்காவைச் சேர்ந்த டரானா புர்கே. 2006-ல் அவர் சோஷியல் மீடியாவில் `மீ டூ' முழக்கத்தை ஆரம்பித்தார். டரானா போலவே மௌனம் உடைத்த பெண்கள், `மீ டூ'வில் இணைய ஆரம்பித்து தங்கள் குரல்களை உலகத்திடம் வெளிப்படுத்தினர். 2017-ல் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை அலைசா மிலானோ உள்ளிட்ட நடிகைகள் `மீ டூ' ஹேஷ்டேக்கின் கீழ் பகிர ஆரம்பித்த போது, `மீ டூ' அலை உலகை அசைத்தது, உலுக்கியது. உலகெங்கும் பெண்களின் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன, ஒருங்கிணைந்தன.

2018-ல் இந்தியாவில், பத்திரிகையாளரும், முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான எம்.ஜே.அக்பர், தன்னிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக பத்திரிகையாளர் பிரியா ரமணி எழுதியபோது, இங்கு பிரச்னை பெரிதாக வெடித்தது. 2018 அக்டோபரில், வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர் `மீ டூ' இயக்கத்தின் விளைவாகத் தன் பதவி விலகலை அறிவித்தார். இதில் மிக முக்கியமான நிகழ்வு, ஊடகத்துறையைச் சேர்ந்த 14 பெண்கள் பல்வேறு காலகட்டங்களில் எம்.ஜே.அக்பரால் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறலை, வன்முறையை வெளியே உரக்கச் சொன்னார்கள். பாலியல் கொடுமைக்கு எதிராக எழுந்த பெண்களின் அந்தத் தீரமும் தோழமையும் இதற்கு முன் பாத்திராத காட்சிகள்.

M.J. Akbar
M.J. Akbar
Photo: Twitter / mjakbar

`பிரியா ரமணி என் சமூக மரியாதையை, நன்மதிப்பை குலைக்கிறார்' என்று கூறி ஓரு குற்றவியல் அவதூறு வழக்கைப் பதிவு செய்தார் எம்.ஜே.அக்பர். அதற்கான தீர்ப்பு கடந்த 17-ம் தேதி வாசிக்கப்பட்டபோது, `மீ டூ' வரலாற்றில் அது ஒரு முக்கிய வெளிச்சமாக அமைந்தது.

தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய வாக்கியங்கள் சில, `மீடூ' பெண்களை விமர்சித்தவர்களுக்கு, அவதூறு பேசியவர்களுக்கான பதில்.

``இச்சமூகத்தில் மிக உயர்ந்த, கௌரவமான பொறுப்பில் இருப்பவர்கள் பாலியல் வன்முறையாளர்களாகவும் இருக்க முடியும்.1993-ம் வருடம் நடந்த சம்பவத்தை பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு பெண் வெளியே சொல்ல பல நியாயமான காரணங்கள் உண்டு. அது புரிந்துகொள்ளப்பட வேண்டும்" என்று தீர்ப்பில் குறிப்பிட்டு, எம்.ஜே. அக்பரின் அவதூறு வழக்கிலிருந்து பிரியா ரமணியை விடுவித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.

இது மிக முக்கியமான தீர்ப்பாகக் கருதப்பட்டாலும், பாதிக்கப்பட்ட நபராகிய தான், குற்றவாளியைப்போல் நடத்தப்பட்டதைக் குறிப்பிடுகிறார் பிரியா ரமணி.

இந்தத் தீர்ப்பை பணியிடத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான இயக்கம், `மீ டூ' செயல்பாடுகள், அதன் மீதான எதிர்வினைகள் ஆகியவற்றின் வரலாற்றுப் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும்.

`விஷாகா வழிகாட்டல்களின் (Vishaka Guidelines)' அடிப்படையில், பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் 2013-ல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தைப் புரிந்துகொள்ள, 1992-ல் நடந்த பன்வாரி தேவி வழக்கை புரிந்துகொள்ள வேண்டும். பன்வாரி என்பவர், ராஜஸ்தான் மாநில அரசின் பெண்களுக்கான திட்டத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, நடக்கவிருந்த ஒரு குழந்தைத் திருமணத்தை அவர் தடுத்தார். அதனால் ஆத்திரமுற்ற `ஆதிக்க சாதி‘ ஆண்கள் அவரை, குழு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினர். முறையான விசாரணை இல்லாத அந்த வழக்கின் நீதிக்காகப் பன்வாரி தேவியோடு சேர்ந்து பெண்கள் இயக்கங்கள் கடுமையாகப் போராடின. அதன் விளைவாகத்தான் உச்ச நீதிமன்றம், பணியிடத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான விஷாகா பரிந்துரைகளை வெளியிட்டது. இந்த விஷாகா பரிந்துரைகள்தான், மிகப் பல போராட்டங்களுக்குப் பின், பணியிடத்தில் பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டமாக 2013-ல் உருப்பெற்றது.

Court (Representational Image)
Court (Representational Image)

இச்சட்டம், 10 பெண் பணியாளர்கள் இருந்தாலே ஒரு இன்டர்னல் கம்ப்ளெயின்ட்ஸ் கமிட்டி அமைக்கப் பட வேண்டும் எனக் கூறுகிறது. இச்சட்டம் பாலியல் வன்கொடுமை மட்டுமல்லாமல் சைகை, பாலியல் அர்த்தமுடைய சொல்லாடல்கள், பின் தொடர்தல், அத்துமீறல், தொலைபேசி தொந்தரவு, ஆபாச படங்களைக் காட்டுதல் என பாலியல் தொந்தரவின் மொத்தச் சிக்கல்களையும் பட்டியலிட்டுப் பேசுகிறது.

அமைப்புசாரா துறையில் பணியாற்றும் பெண்களுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் `லோக்கல் கம்ப்ளெயின்ட்ஸ் கமிட்டி' அமைக்கப்பட வேண்டும் என்றும் இச்சட்டம் குறிப்பிடுகிறது.

மிக முக்கியமாக பணியிடத்தில் அதிகாரப் படிநிலையைப் பயன்படுத்தி பாலியல் அத்துமீறல் செய்வதை இச்சட்டம் தண்டனைக்குரியதாகப் பார்க்கிறது. இன்னொரு பக்கம், இச்சட்டம் பொய்யாகப் பயன்படுத்தப்பட்டால் குற்றம் சாட்டிய பெண்ணுக்கு தண்டனை உண்டு என்கிறது.

இச்சட்டத்தின் விளைவாக பெரு நிறுவனங்களில் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால், ஒரு வழக்கில்கூட யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. தமிழக அரசு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலாக, அமைப்புசாரா துறையில் வேலை செய்யும் பெண்களுக்கான `லோக்கல் கம்ப்ளெயின்ட்ஸ் கமிட்டி' அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தது. இது எதுவும் களத்தில் காணப்படவில்லை என்பதுதான் உண்மை.

#MeToo
#MeToo
Vikatan

பணியிடச் சூழல் இப்படி இருக்க, இன்னொரு பக்கம் பல்கலைக்கழகங்களில் நடக்கும் பாலியல் வன்முறை பேசுபொருளானது. குறிப்பாக, ஆராய்ச்சி மாணவிகள் இப்பிரச்னையைத் தொடர்ந்து பேசி வந்தாலும் எந்தத் தீர்வுக்கும் அருகில் கூடப் போக முடியவில்லை.

பேருக்கு இயங்கும் இன்டர்னல் கம்ப்ளெயின்ட்ஸ் கமிட்டியால் அதிகாரத்தின் நிழலைக்கூடத் தொட முடியாது என்பதுதான் நிதர்சனம். ஆணாதிக்க மனம், கட்டமைப்பு, பொதுத் தளத்தில் இயங்கும் பெண்ணின் உடல் பொருள் ஆவியை பொதுச் சொத்தென நினைக்கும் பல நூற்றாண்டுக்கால அநீதி இவற்றையெல்லாம் எதிர்க்க, இச்சட்டச் செயல்பாடுகள் மட்டும் போதாது.

2017-ல் ரயா சர்க்கார் என்ற கலிஃபோர்னிய சட்ட மாணவி, பாலியல் வன்முறைக்கு எதிரான தன் நாட்டின் சட்டங்களோ, கமிட்டிகளோ எந்தப் பயனும் அளிக்க இயலாத நிலையில், கல்வி நிறுவனங்களில் பாலியல் வன்முறைகள்/அத்துமீறல்கள் செய்தோரின் பட்டியலை, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து திரட்டி விவரங்களுடன் தன் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டார். அது ஏற்படுத்திய அதிர்வுகளை எழுத்தில் சொல்ல முடியாது. இதன் விளைவாகப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் பேசத் தொடங்கினர். அது ஒரு சங்கிலித் தொடரான நிகழ்வு. ஆனால், விளைவுகள் மோசமாக இருந்தன. தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறை குறித்து வெளியே பேசிய பெண்கள் அனைவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, `நீங்கள் ஏன் அப்போதே பேசவில்லை?’

Law (Representational Image)
Law (Representational Image)
Photo by Bill Oxford on Unsplash
Vikatan

இந்தக் கேள்வியுடன் வருபவர்கள், அதிகாரப் படிநிலையை பாலியல் அத்துமீறலுக்குப் பயன்படுத்த முடியும் என்ற உண்மையின் மேல் கேள்விகளையோ, விவாதங்களையோ ஏன் எழுப்புவதில்லை? சட்டரீதியான செயற்பாடுகள் பலனளிக்காதபோது, மாற்று என்ன என்று யோசித்து தங்கள் குரல்களை வெளிப்படுத்தும் பெண்களிடம், `ஏன் அப்போதே கூறவில்லை?' என்று உலகம் கேள்வியைத் திருப்புவது ஏன்?

இதே கேள்வியுடன்தான் தமிழ் அறிவுச்சூழலும், `மீ டூ' பிரச்னையை மிக மோசமாக எதிர்கொண்டது. குற்றச்சாட்டு சொன்ன பல பெண்களும் நடத்தை கொலைக்கு ஆளானார்கள். குற்றம்சாட்டப்பட்ட ஆண்கள் சார்ந்த கட்சிகள், கொள்கை ஒருமை உள்ளவர்கள் அவர்களுக்காகப் பேசினார்கள். குற்றம்சாட்டப்பட்ட ஆளுமைகளைக் காக்க ஒருவர், இருவர் அல்லர்... பலர் சமூக ஊடகங்களில் கொச்சையாக எழுதினார்கள். அது முழுக்க வலதுசாரி குணம். முற்போக்கு எனப் பிரகடனம் செய்த பல ஆண்கள் அன்று வெளிப்படுத்தியது ஆணாதிக்கச் சிந்தனையே. என்ன செய்ய, தத்துவார்த்த சிந்தனை அவைக்கு உதவாமல்தான் போனது.

மேலும் அவர்கள் பேசியது `கான்ஸ்பிரசி தியரி'யும். அதாவது, `ஆளுமை உள்ள ஆண்களை அடிக்க பெண் விவகாரம் பயன்படுத்தப்படுகிறது' என்ற அரதப் பழசான தியரி. அவர்கள் பயன்படுத்தியது கொச்சையான மொழி.

தாங்கள் எதிர்கொண்ட பாலியல் வன்முறைகளை வெளியே பேசிய பெண்கள், வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். கிரிமினலைப்போல் நடத்தப்படுகிறார்கள். நடத்தை கொலை, ஊடக இழிவு, சமூக ஊடக இழிவு, வழக்குகள், அலைக்கழிப்புகள், வேலை இழப்புகள், ஆய்வை முடிக்க முடியாத நிர்ப்பந்தம் என அவர்கள் சந்தித்த துயரங்கள் பல. இன்னொரு பக்கம், குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் மீதான குற்றங்களைத் தூசென கடந்து, தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான ஓர் ஆணாதிக்க சூழலில், பிரியா ரமணி மீது தொடரப்பட்ட வழக்கின் இந்தத் தீர்ப்பு லேசான ஆறுதலைத் தருகிறது. இது மற்ற வழக்குகளுக்கு ஒரு வழிகாட்டுதலைத் தர முடியும். பெண்கள் அமைப்புகள், பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் முதல் சாமான்ய மனுஷிகள்வரை இத்தீர்ப்பை வரவேற்று உள்ளார்கள்.

M.J. Akbar
M.J. Akbar
Photo: Twitter / mjakbar
`நிகழ்ந்த அநீதியை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்!' - பிரியா ரமணி தீர்ப்பு சொல்லும் மெசேஜ் என்ன?

என்றாலும், இது ஒரு தொடர் போராட்டம். நம் பெண்கள் அனைவரும், `நானும் ஒரு மனிதப் பிறவி. இங்கிருப்பவர்கள் என் மனிதர்கள். எந்தத் தடையும் இல்லாமல் இயல்பாக என் பணித்தளத்தில் இயங்க முடியும்' என்ற நிலைக்கு வரும்வரை, இப்போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், இது எளிதான போராட்டம் இல்லை. பாலியல் வன்முறைக்கு எதிரான சட்ட நடைமுறைகள் எளிதாக்கப்படாமல் இங்கு மாற்றம் இல்லை. அனைத்து துறை தொழிலாளர் சங்கங்களும், மாணவர் சங்கங்களும் தங்கள் வேலை திட்டத்தில், பணி இடத்தில் பாலியல் வன்முறை எதிர்ப்பை முன்வைப்பது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானது.

- கீதா நாராயணன்
அடுத்த கட்டுரைக்கு