Published:Updated:

ஒரு சிறுமியின் தைரியம் என்ன செய்யும்? - பத்மா சேஷாத்ரி பள்ளி சர்ச்சையும் அலசலும்! #VoiceOfAval

ஒரு சிறுமியின் தைரியம் என்ன செய்யும்? வகுப்பறையில் நடந்த ஒரு சிறார் வதைக்கான நியாயம் கேட்டு, இத்தனை குரல்களை எழும்பச் செய்திருக்கிறது!

`அவளின் குரலை' Podcast-டாகக் கேட்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். தொடர்ந்து அவள் விகடனைப் பின்தொடர சப்ஸ்கிரைப் செய்யவும்.

சென்னை, கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது அப்பள்ளியின் மாணவிகளும், முன்னாள் மாணவிகளும் முன்வைத்த சிறார் வதை குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவரை பணியிடைநீக்கம் செய்திருக்கிறது பள்ளி நிர்வாகம். தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை, சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி, இரண்டே நாள்களில் மத்திய கல்வித்துறை அமைச்சர் புகாரை செல்ல வைத்திருக்கும் அந்தப் பதின்ம வயதுப் பெண் பிள்ளைகளுக்கு... சல்யூட்.

பத்மா சேஷாத்ரி பள்ளியின் 60 ஆண்டுகால பாரம்பர்யம் நெடிது. இதுவரை அந்தப் பள்ளி உருவாக்கிய திறனாளர்கள் பல்துறைகளிலும் வெற்றியாளர்களாகப் பயணிப்பதையும் அறிவோம். ஆனால், இன்னொரு பக்கம், அங்கு நிலவிய மேட்டுக்குடி சூழல், சாதிய மனப்பான்மையும் கண்கூடு.

Woman (Representational Image)
Woman (Representational Image)

மிகுந்த போட்டிகளுக்கு இடையே அந்தப் பள்ளியில் படிக்க இடம் கிடைக்கப்பெறும் மாணவர்கள், ஒன்று சாதிய நிலையில் மேல்படிகளில் இருக்க வேண்டும். அல்லது பொருளாதார ரீதியாகப் பலமானவர்களாக இருக்க வேண்டும். அதாவது, `நன்றாகப் படிக்க வசதி, வாய்ப்புகள் உள்ள மாணவர்களை, நாங்கள் மிக நன்றாகப் படிக்க வைப்போம். இல்லாதவர்கள் வெளியே செல்லுங்கள்' என்ற இயங்குமுறை. பத்மா சேஷாத்ரி பள்ளியின் இடைநின்ற மாணவரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிமி கேர்வாலுடனான தன் பேட்டியில், `உங்கள் பையனை கோடம்பாக்கம் பிளாட்ஃபார்ம் அழைத்துச் செல்லுங்கள், காசு போடுவார்கள். பள்ளிக்கு அழைத்து வராதீர்கள்' என்று அப்பள்ளி ஆசிரியர்கள் தன் அம்மாவிடம் கூறியதாகப் பகிர்ந்திருக்கும் காணொளி இப்போது வைரலாகி வருகிறது. இப்படி, பள்ளி குறித்த இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்துகொண்டே இருந்தாலும், ஒரு பள்ளியின் நிர்வாக முடிவை பொதுச்சமூகம் கேள்விகேட்கும் வரையறைகள் எல்லைக்கு உட்பட்டது.

ஆனால் இன்றோ, அந்தப் பள்ளியின் மாணவர்கள், தங்கள் ஆசிரியர் மீதே கொடுத்துள்ள பாலியல் புகார்கள், அப்பள்ளி பற்றிய பிம்ப மதிப்பீடுகளைத் தகர்த்துள்ளன. அப்பள்ளி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குறிப்பாக, `பல தடவை இந்த ஆசிரியர் பற்றி குறிப்பிட்டும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்கின்றனர் மாணவிகள் சிலர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், `இதற்கு மேல் இதைப் பற்றிப் பேச எதுவுமில்லை' என்ற தொனியில், பள்ளியின் சார்பில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகச் சுருக்கமாக ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

``நம் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மீது குறிப்பிடப்படும் புகார் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். நம் மாணவர்களின் உடல், மன உணர்வுகளைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. இதுபோல் இதற்கு முன் ஒரு குற்றச்சாட்டு பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்ததில்லை. என்றாலும், இந்தப் புகார்களை தாமாக முன்வந்து பள்ளி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்கும்" என்று கூறுகிறது அந்த அறிக்கை.

pocso act
pocso act

உண்மையில் நடந்திருப்பது, சிறார் வதை. போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட வேண்டிய, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய குற்றம். ஆன்லைன் வகுப்பில் இடுப்பில் துண்டு மட்டும் அணிந்தபடி வந்தது, பெர்சனல் சாட்டில் மாணவிகளுக்கு போர்ன் வீடியோக்கள் லிங்க் அனுப்பியது, `படத்துக்குச் செல்லலாமா?' என்று மெசேஜ் அனுப்பியது, வகுப்பறைகளில் பாலியல் ஜோக்ஸ் சொன்னது, மாணவிகளிடம் முறையற்ற தொடுதலில் ஈடுபட்டது என இவை அனைத்தும் பாலியல் குற்றங்கள். ஆனால், இவற்றையெல்லாம் `சில புகார்கள்' என்று பட்டும் படாமலும் கடக்கிறது அந்த அறிக்கை.

தன் பள்ளியின் மாணவிகளுக்கு நடந்த குற்றம் குறித்த துடிப்பைவிட, தங்கள் பள்ளியின் பெயர் பழுதுபடாமல் பார்த்துக்கொள்ளும் மனநிலையையே பள்ளியின் அறிக்கை காட்டுகிறது. மேலும், பள்ளியின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும், `பள்ளியின் மாண்பு காக்கப்பட வேண்டும்' என்ற அரற்றலே உள்ளதே தவிர, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர்களின் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை இல்லை. உண்மையில் இவைதான், இதுபோன்ற சிறார் வதைகளால் பாதிக்கப்பட்டு, குரல் எழுப்ப முடியாமல் முடங்கியுள்ள பிற மாணவிகளுக்கு தைரியத்தையும் ஆதரவையும் தரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த இரண்டு நாள்களாக எல்லா மீடியம்களிலும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வரும் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் தந்த பாலியல் தொல்லை செய்தி பற்றி, ஒருவழியாக இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது பள்ளி நிர்வாகம். பெற்றோர், மாணவர்களுக்கான சுற்றறிக்கையில் `இது குறித்து இதுவரை எந்தப் புகாரும் பெறப்படவில்லை' என்றிருந்த வரிகள், இந்த மீடியா ரிலீஸில் `எழுத்துபூர்வமாக எந்தப் புகாரும் பெறப்படவில்லை' என்று மாறியிருக்கிறது. இது, பள்ளியில் ஏற்கெனவே அந்த ஆசிரியர் குறித்த புகார்கள் எழுந்ததற்கான ஒப்புதலைச் சொல்கிறது. புகார் இப்போது காவல்துறை விசாரணையில் இருப்பதால், அதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் பள்ளிக்கு ஏற்பட்டிருக்கிறது.

மேலும், பிரின்சிபால் கீதா கோவிந்தராஜன் அந்த அறிக்கையில், `ஓர் ஆசிரியரின் நடவடிக்கை எந்த வகையிலும் பள்ளியின் மற்ற ஆசிரியர்களின் உயர்ந்த தொழில்நேர்த்தியை சிறுமைப்படுத்தாது' என்று தெரிவித்திருக்கிறார். இன்னும், இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள அமைக்கப்படும் குழு, பள்ளியின் 60 ஆண்டுக்கால பாரம்பரியம், இதுவரை ஒரு லட்சம் மாணவர்கள் அந்தப் பள்ளியில் கல்வி பெற்றிருப்பது எனப் பள்ளியின் பெருமைகள் அடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த அறிக்கையில், இந்தப் புகாரை தைரியமாக வெளிக்கொண்டுவந்த, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கான பாராட்டு வார்த்தையோ, `பள்ளி நிர்வாகம் உங்களுடன் நின்று இந்த விசாரணையை நடத்தும்' என்ற நம்பிக்கை வார்த்தையோ இடம்பெறவில்லை.

Woman (Representational Image)
Woman (Representational Image)

இந்நேரத்தில், இந்தப் பாலியல் தொல்லைகள் பற்றித் தைரியமாக முன்வந்து சொன்ன மாணவிகள், அவர்களுக்கு உறுதுணையாக இருந்து இந்தக் குற்றத்தை சமூகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற பத்மா சேஷாத்ரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் என இந்தப் பெண்களின் தைரியத்துக்கும் விவேகத்துக்கும், வேகத்துக்கும்... வாழ்த்துகளும் பலமான கைகுலுக்கல்களும். 20 ஆண்டுகளாக ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பற்றி இப்போது புகார் வெடித்திருக்கிறது என்றால், இத்தனை ஆண்டுகளில் இதே ஆசிரியரின் தொல்லைகள் எத்தனை மாணவிகளின் மௌனம், அச்சம், கண்ணீரின் மீது நிகழ்ந்திருக்கும் என்பது தெரியவில்லை. அந்தச் சங்கிலியை அறுக்கும் முதல் கல்லை எறிந்த அந்த முகமறியா சிறுமியும், அவரின் தைரியத்தைத் தாங்களும் பற்றிக்கொண்ட பிற சிறுமிகளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அந்தப் புகார்களை, சமூக வலைதளத்தையே கருவியாகவும், ஆவணமாகவும், போராட்டக் களமாகவும் பயன்படுத்தி, பள்ளியின் 1,000 முன்னாள் மாணவர்களை ஒரே நாளில் ஒருங்கிணைத்து, தங்கள் கையெழுத்துடன் அறிக்கை தயாரித்து பள்ளி நிர்வாகத்துக்கு அனுப்பி என, அந்தப் பெண்கள் அனைவரும்... Bravo!

இந்தப் பிரச்னையைக் கண்டித்தும், விசாரணை கேட்டும் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ராமதாஸ், ஜோதிமணி என்று அரசியல் தலைவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்கள். தயாநிதி மாறன், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங்க்கு, சி.பி.எஸ்.இ ஆணையம் இந்தப் பிரச்னையை விசாரிக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளார். பத்மா சேஷாத்ரி பள்ளியின் முன்னாள் மாணவிகளான பாடகி சின்மயி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகை லெஷ்மி ப்ரியா சந்திரமௌலி எனப் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். ஒரு சிறுமியின் தைரியம் என்ன செய்யும்? வகுப்பறையில் நடந்த ஒரு சிறார் வதைக்கான நியாயம் கேட்டு, இத்தனை குரல்களை எழும்பச் செய்திருக்கிறது! இந்தச் சம்பவம், அந்தத் தைரியத்தை அத்தனை பெண் பிள்ளைகளுக்கும் ஊட்டுவதாக அமையட்டும்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Image by Engin Akyurt from Pixabay
PSBB பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு... ட்விட்டரில் குவியும் மாணவர்களின் புகார் பட்டியல்!

இதற்கிடையில், குற்றம் சுமத்தப்பட்ட பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியரை கைது செய்திருக்கின்றனர் சென்னை போலீஸார். அவர் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையில், அவர் மாணவிகளுடனான தனது அனைத்து வாட்ஸ்அப் பதிவுகளையும் டெலீட் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், தன்னைப்போல இன்னும் சில ஆசிரியர்கள் பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆம்... சிறார் வதைக் குற்றத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளியோ, குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஆசிரியரோ ஆரம்பமோ, முடிவோ அல்ல. 2019-ம் ஆண்டு, சென்னை, கொளப்பாக்கம் அருகே உள்ள ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளியில், எல்.கே.ஜி குழந்தைகளை பள்ளிப் பேருந்தின் உதவியாளர் மற்றும் பள்ளியில் தங்க வரும் வெளிநாட்டினர் சிறார் வதை செய்ததாக, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் பள்ளி முன்பு போராடினர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பள்ளியின் செல்வாக்கால் அந்தக் குரல்களுக்கான நடவடிக்கைகள் அமுங்கிப்போயின.

சி.பி.எஸ்.இ பள்ளி, இன்டர்நேஷனல் பள்ளிகளிலேயே மாணவர்களின் பாதுகாப்பு இப்படி இருக்கும்போது, பெற்றோர்களின் கேள்வி கேட்கும் அதிகாரம் குறைக்கப்பட்டிருக்கும் பிற பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்க முடியும்?

School
School
Pixabay
சென்னை: `செல்போன், லேப்டாப்பில் அழிக்கப்பட்ட  மெஸேஜ்கள்' - பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர்

இந்தச் சூழலில் நாம் செய்யக்கூடியது, செய்ய வேண்டியது... பள்ளி மாணவர்களுக்கு சிறார் வதை குறித்து புகார் சொல்லும் விழிப்புணர்வையும் தைரியத்தையும் அளிப்போம். அப்படி புகார் அளிக்கும் மாணவர்களுக்கான பாதுகாப்பை, பிரைவசியை உறுதிசெய்வோம். ஆசிரியர் போர்வையில் உள்ள ஆடுகளை அதிகார அடுக்குகள் தாண்டி களையெடுப்போம்.

மேலும், உருவாக்கப்படும் பிம்பங்கள் நிலைக்காது நெடுங்காலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு