Published:Updated:

கிரெட்டா பகிர்ந்த `டூல்கிட்'டில் என்னதான் பிரச்னை... டெல்லி காவல்துறை சொல்வது என்ன?

Greta Thunberg
Greta Thunberg

தேச துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A, 153A, 153 மற்றும் 120B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.

''மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்துக்குத் தொடர்ந்து ஆதரவு தருவேன்'' என்று சமீபத்தில் தெரிவித்தார் ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்.

டெல்லி போலீஸார் இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்ய, தொடர்ந்து தான் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லியுள்ளார் துன்பெர்க்.

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Farmers protest against new farm laws
Farmers protest against new farm laws

இது தொடர்பாக, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 18 வயது சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க், போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ட்வீட் செய்தார். இந்த நிலையில், டெல்லி போலீஸார் ஒரு வழக்கை பதிவு செய்தனர். இதில் துன்பர்க்கின் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், கிரெட்டா துன்பெர்க்கின் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லை என டெல்லி போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

முன்னதாக, துன்பெர்க் வெளியிட்ட ட்வீட்டில் இணைக்கப்பட்டிருந்தது ஒரு `டூல்கிட்'. ஆனால், சிறிது நேரத்துக்குப் பிறகு, அதை டெலீட் செய்து, 'இந்தியாவில் உள்ளவர்களால் அந்த டூல்கிட்டில் உள்ள விவரங்கள் அப்டேட் செய்யப்படுகின்றன' என்று தெரிவித்திருந்தார் கிரெட்டா.

இதை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டை சேர்ந்த பலரின் சதி பின்னணி இருப்பதாகக் கூறி, சமூக வலைதளங்களில் 'டூல்கிட்' தொடர்பான சில ஸ்க்ரீன்ஷாட்கள் பரவின.

என்ன அது 'டூல்கிட்'?

ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின் தொகுப்பே, 'டூல்கிட்'. அதுவே போராட்டத்துக்கான 'டூல்கிட்'களில், குறிப்பிட்ட போராட்டத்தை பற்றிய செய்திகள் மற்றும் போராடுவதற்கான முறைகள் பற்றி வழிகாட்டப்பட்டிருக்கும்.

'டூல்கிட்'டின் பயன்பாடு என்பது பல தசாப்தங்களாக இருந்து வந்தாலும், சமூக வலைதளங்கள் பரவலான பிறகு 'டூல்கிட்'களின் பகிர்வுகளும் அதிகமாகி முக்கியத்துவம் பெற்றன. அந்த வகையில், சுற்றுச்சூழலை காப்பதற்கான போராட்டங்கள் முதல் சமீபத்திய ஹாங் காங் போராட்டம்வரை, பல போராட்டங் களிலும் 'டூல்கிட்'கள் போராட நகர்வை ஒருங்கிணைப்பதில் பெரும் பங்கு வகித்தன.

தேசத்துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A, 153A, 153 மற்றும் 120B
ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

போராட்டக்காரர்கள் எங்கு, எத்தனை மணிக்குக் கூடவேண்டும், சோஷியல் மீடியாவில் என்ன ஹேஷ்டாக் பயன்படுத்த வேண்டும், காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் செல்ல நேர்ந்தால் அந்தச் சூழலை எப்படிக் கையாள வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய 'டூல்கிட்'கள் வாட்ஸ்ஆப், சமூக வலைதளங்கள் மற்றும் பெர்சனல் மெசேஜ்கள் மூலம் போராட்டத்தில் பங்கெடுப்பவர்களுக்கு பகிரப்படும்.

கிரெட்டா பகிர்ந்த விவசாயிகளின் போராட்டம் தொடர்பான 'டூல்கிட்'டில் 'உடனடி நடவடிக்கை', 'முதன்மை நடவடிக்கை', மற்றும் 'விவசாயிகளின் போராட்டத்துக்கு நீங்கள் எப்படி உதவலாம்' என்ற விரிவான தகவல்கள் இருந்தன.

'உடனடி நடவடிக்கை' பகுதியில், ட்விட்டரில் இது தொடர்பான எழுச்சியை எழுப்ப விரும்புபவர்களுக்கான சோஷியல் மீடியா போஸ்ட்கள் குறித்த வழிகாட்டல்கள், எந்த இடத்தில், எப்போது போராட்டத்துக்கு ஒன்றிணைய வேண்டும், அரசுக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் போன்ற தகவல்கள் இருந்தன. இந்த விவரங்களைத்தான், சதித் திட்டம் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் போலீஸ் சந்தேகத்தின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத்தான் துன்பர்க் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

இருப்பினும் துன்பெர்க்கின் பெயர் அதில் குறிப்பிடப்பட வில்லையாம். ஆனாலும், அது குறித்து துன்பெர்க் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்து ஆதரவு கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

மேலும், அந்த 'டூல்கிட்'ட்டில் இணைக்கப்பட்டிருந்த 5 லிங்க்குகள் பல்வேறு வலைதளங்களிலுக்கு எடுத்துச் சென்றன. அதில் ஒரு வலைதளத்தின் 'About' பிரிவில், 'நாங்கள் கனரா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள தன்னார்வலர்கள். பறிக்கப்படும் இந்திய விவசாயிகளின் சமூக நீதிக்காக இயங்கிவருகிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு லிங்க்கின் ஒரு பக்கத்தில், 'அம்பானி தொடர்புடைய வணிகப் பொருள்களை நான் வைத்திருக்கிறேனா?' என்ற கேள்வியும், முகேஷ் அம்பானி, கௌதம் அதானியும் பெயர்களும் உள்ளன.

அடுத்ததாக, தனது அடுத்த ட்வீட்டில் கிரெட்டா மீண்டும் ஒரு சிறிய 'டூல்கிட்'டை பகிர்ந்தார். 'இந்திய விவசாயிகளின் போராட்டக் காரணங்களை அறியாதவர்களுக்கு அதை அறிந்துகொள்வதற்கும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுப்பதற்கும் உதவும் குறிப்பேடு' என்ற விளக்கத்துடன் இருந்தது அந்த 'டூல்கிட்'. போராட்டத்துக்கான ஹேஷ்டேக்குகளையும் பகிர்ந்த அந்த குறிப்பேடில், அதானி, அம்பானி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கிரேட்டா தன்பெர்க்
கிரேட்டா தன்பெர்க்

விசாரணையில், கிரெட்டா பகிர்ந்திருந்த 'டூல்கிட்' 'பொயடிக் ஜஸ்டிஸ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பால் தயாரிக்கப் பட்டிருந்தது என்று காவல்துறை தெரிவித்தது. ஜனவரி 26 அன்று போராட்டத்தில் வெடித்த வன்முறை, கிரெட்டா முதலில் பகிர்ந்திருந்த 'டூல்கிட்'டின் 'உடனடி நடவடிக்கை' வழிமுறைகள்படியே நடந்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது. அதுதான் நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

- ஆனந்தி ஜெயராமன்
அடுத்த கட்டுரைக்கு