Published:Updated:

உரிமைப் போராட்டம், பாலியல் துன்புறுத்தல்... மீனா ஹாரிஸ் ட்வீட்டால் உலக கவனம் ஈர்த்த நோதிப் கவுர்!

Nodeep Kaur
Nodeep Kaur

நோதிப் கவுர் குடும்பத்தினர், போலீஸ் கஸ்டடியில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக புகார் அளித்துள்ளார்கள்.

பஞ்சாபை சேர்ந்த 23 வயது தலித் செயற்பாட்டாளர் நோதிப் கவுர் கைது செய்யப்பட்டார். 25 நாள்களுக்கும் மேலாக அவருக்கு பெயில் மறுக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் கஸ்டடியில் அவருக்கு பாலியல் கொடுமை நடந்திருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள் நோதிப் கவுரின் குடும்பத்தினர்.

என்ன நடந்தது, யார் இந்த நோதிப் கவுர்?

நோதிப் கவுர், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பாடுபடும் 'மஸ்தூர் அதிகார்' சங்கம் மூலம் அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஜனவரி 12 அன்று, விவசாயப் போராட்டத்தில் கலந்துகொண்ட நோதிப் கவுரை போலீஸ் கைது செய்தது.

Nodeep Kaur
Nodeep Kaur

நோதிப், 2020 டிசம்பர் வரை சோன்பட்டில் உள்ள குண்ட்லி தொழில்துறை பகுதியில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார். உள்ளூர் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது மற்றும் முதலாளிகளால் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து, KIA(Kundli Industrial Association)-ல் அவர் புகார் அளித்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை, உள்ளூர் நிறுவன முதலாளிகள் மறுத்தனர்.

அதை தொடர்ந்து, இது குறித்த பிரசாரத்தையும் முதலாளித்துவத்துக்கு எதிராகத் தொடங்கினார் நோதிப் கவுர். 'மஜ்தூர் அதிகார்' சங்கம், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.

'ஹரியானா அரசாங்கத்தின் உத்தரவுப்படி, தொழிற்பேட்டையில் தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 9,300 ரூபாய் கொடுக்கவேண்டும். ஆனால் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 6,000 முதல் ரூபாய் 7,000 மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் பெண் ஊழியர்களுக்கு இதைவிடக் குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது' என்று சொன்ன நோதிப் கவுர், விவசாயிகளும் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தார்.

அதை தொடர்ந்துதான் ஜனவரி 12-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். கவுரியின் குடும்பத்தினர், போலீஸ் கஸ்டடியில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக புகார் அளித்துள்ளார்கள். ஆனால் சோனேபட் போலீசார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர்.

சுமார் ஒரு மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலாளர் உரிமை செயல்பாட்டாளர் நோதிப் கவுருக்கு பிப்ரவரி 3-ம் தேதி சோனி பட்டியில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர், அவரை விடுவிப்பதற்காக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை அணுகி வருவதாகக் கூறுகின்றனர்.

Nodeep Kaur
Nodeep Kaur

இதுதொடர்பாக நோதிப் கவுரின் சகோதரி கூறுகையில், 'ஜனவரி 12-ம் தேதி நோதிப் வன்முறையில் ஈடுபட்டார் என்று சொல்லியே அவரை கைது செய்துள்ளனர். அந்தக் குற்றச்சாட்டே முதலில் தவறானது. காவல்துறையினர்தான் தொழிலாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டதோடு இல்லாமல் தொழிலாளர்களின் மீது 307(கொலை முயற்சி) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் நோதிப் மீது, மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தாங்கள் வேலை பார்த்த தொழிற்சாலையில் முறையான சம்பளம் கேட்பது எப்படி மிரட்டுவதாகும்? மேலும், அவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த குற்றச்சாட்டை நாங்கள் நீதிமன்றத்தில் எழுப்பினோம். தற்போது மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். ஆனால் ஏற்கெனவே தாமதமாகிவிட்டது. வரும் அறிக்கை எவ்வளவு துல்லியமாக இருக்கும் என்பது சந்தேகம்தான்' என்று கூறியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக போலீஸார், 'நோதிப்பை கைது செய்து, சட்டப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு சிறைக்குக் கொண்டு சென்றோம். அங்கு அவருடன் இரண்டு பெண் காவலர்கள் இருந்தனர்' என்று கூறியிருக்கிறார்கள்.

நோதிப்பின் வழக்கறிஞர், நோதிப் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அவரது அந்தரங்க உறுப்புகள் காயப்பட்டு உள்ளதாக அறிக்கை உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கைது, அடக்குமுறை என்று தொடர்ந்த போதும் கவனம் பெறாத நோதிப் கவுரின் பிரச்னை, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹரிஸின் ட்வீட்டால் சர்வதேச கவனம் பெற்றது. மீனா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பாக் பதிவிட்டு நோதிப் கவுருக்கு நியாயம் கேட்க, நோதிப் கவுர் கைதின் மீது பலரின் கவனமும் பெற்றிருக்கிறது. இப்போது நாடாளுமன்றத்திலும் நோதிப் கவுர் கைதுக்கு நியாயம் கேட்கும் குரல்கள் ஒலித்து வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு