Published:Updated:

`அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டேன்!' - தொடர்ந்து விவசாயிகளுக்காக குரல்கொடுக்கும் மீனா ஹாரிஸ் யார்?

மீனா ஹாரிஸ் ( Photo: Twitter / Meena Harris )

மீனா ஹாரிஸ், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகிறார்.

`அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டேன்!' - தொடர்ந்து விவசாயிகளுக்காக குரல்கொடுக்கும் மீனா ஹாரிஸ் யார்?

மீனா ஹாரிஸ், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகிறார்.

Published:Updated:
மீனா ஹாரிஸ் ( Photo: Twitter / Meena Harris )

மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பயந்து, இந்திய விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் தனது நிலைப்பாட்டை துளியும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்றும் தன்னை மிரட்டவோ மெளனமாக்கவோ முடியாது என்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகளான மீனா ஹாரிஸ் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில மாதங்களாகத் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். வேளாண் உற்பத்தி, கோதுமை மற்றும் உணவு தானியக் கொள்முதல், சேமிப்பு மற்றும் வர்த்தகத்தில் தனியார் துறையினரும் ஈடுபட வழிவகை செய்துள்ள இந்தப் புதிய சட்டங்களால் தாங்கள் பெருமளவில் பாதிப்படையக் கூடும் என்று அச்சம் தெரிவிக்கும் விவசாயிகள், அச்சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசைக் கோரி வருகின்றனர்.

Delhi farmer protest
Delhi farmer protest
AP Photo

இது தொடர்பாக விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்குமிடையே நடைபெற்ற 11 சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்த சமரச முடிவும் எட்டப்படாத நிலையில், கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் திடீரென கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் அடக்குமுறையைக் கையாண்டது அனைத்து செய்தி ஊடகங்களிலும் வெளியானது. பேரணியின் போது கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்று விவசாய சங்கங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து மத்திய அரசு, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ததோடு, போராட்டம் நடைபெற்று வரும் பகுதிகளில் குடிநீர் மற்றும் இணைய வசதிகளைத் துண்டித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனிடையே பிப்ரவரி 2-ம் தேதி உலக பிரபல பாப் பாடகியான ரிஹானா, கலவரத்தில் போராட்டக்குழுவினர் தாக்கப்படும் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ``நாம் ஏன் இதைப் பற்றிப் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். ரிஹானாவின் அந்த ட்வீட்டால் இந்திய விவசாயிகள் போராட்டம் சர்வதேச கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், லெபனானைச் சேர்ந்த மியா கலிஃபா, அமெரிக்க துணை அதிபரின் உறவினரான மீனா ஹாரிஸ் ஆகிய பெண் பிரபலங்கள், விவசாயிகள் போராட்டத்துக்காக ட்விட்டரில் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

mia khalifa, greta thunberg
mia khalifa, greta thunberg
twitter images

உலக பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பர்க், ``இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். லெபனானைச் சேர்ந்த போர்ன் நடிகை மியா கலீஃபா, புது டெல்லியில் நடப்பது மனித உரிமை மீறல் என்றும், இணையம் துண்டிக்கப்பட்டதற்கு எதிராகவும் கண்டனக் குரல் எழுப்பினார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகளான மீனா ஹாரிஸ், ``உலகின் மிகப் பழைமையான ஜனநாயகம் (அமெரிக்கா) ஒரு மாதத்துக்கு முன் பாதிக்கப்பட்டது போலவே மிகவும் பிரபலமான ஜனநாயக நாடும் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியாவில் இன்டர்நெட் முடக்கம் மற்றும் விவசாயிகள் போராட்டத்தின்போது துணை ராணுவப்படையைக் கொண்டு நடத்தப்பட்ட வன்முறைக்கு அனைவரும் சீற்றம் கொள்ள வேண்டும்” என்று தனது முதல் ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகெங்குமிருந்து இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக எழும் குரல்கள் பெண் குரல்களாக இருப்பதைக் கண்டதும், ட்விட்டரிலும் சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் கூடிக் குழுமி நின்று எப்போதும்போல, அப்பெண்களின் உடை குறித்தும், ஒழுக்கம் பற்றியும், ஜாதி, மதம், பிறப்பு பற்றியெல்லாம் தோண்டியெடுத்து விவாதிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆபாசப் பட நடிகையான மியா கலீஃபாவுக்கு வேளாண் சட்டங்களைப் பற்றி என்ன தெரியும் என்றும் அவரின் முன்னோர்கள் அவரை நினைத்துப் பெருமைப்படுவார்களா? என்றும் கேலி கிண்டல்களாலும் ஆபாச விமர்சனங்களாலும் அவரது ட்விட்டர் பக்கம் நிறைந்து வருகிறது. பாலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் இப்பெண்களின் ட்வீட்டுகளுக்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பதிந்து வருகின்றனர்.

கிரேட்டா தன்பர்க்கின் ட்வீட் தொடர்பாக டெல்லி காவல்துறை, தேசத் துரோகம், சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மீனா ஹாரிஸ், கிரேட்டா தன்பர்க் மற்றும் ரிஹானா ஆகியோரின் படங்களையும் உருவ பொம்மைகளையும் எரித்து டெல்லியில் யுனைட்டட் ஹிந்து அமைப்பினர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படத்தோடு செய்தியைப் பகிர்ந்திருக்கும் மீனா ஹாரிஸ், ``இந்திய விவசாயிகளின் மனித உரிமைகளுக்காக நான் குரல் கொடுத்தேன். அதற்கான எதிர்வினையைப் பாருங்கள்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

அதோடு, துணிச்சலாக, ``இந்தியா அல்லது அமெரிக்க அரசியலில் போர்க்குணம் கொண்ட தேசியவாதம் என்பது மிகவும் அபாயமான சக்தி கொண்டது. பாசிச சர்வாதிகாரிகள் எங்கும் செல்லவில்லை என்பதை மக்கள் உணர்ந்தால் மட்டுமே அதை நிறுத்த முடியும்” என்று பதிவிட்டிருப்பதோடு, ``நான் இப்போதும் விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு ஆதரவாகவே இருக்கிறேன். மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பயந்து நான் என் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டேன்” என்றும், ``என்னை மிரட்ட முடியாது. என்னை மெளனமாக்கவும் முடியாது” என்றும் தெரிவித்திருக்கிறார்.

burn portraits of Meena Harris, niece of U.S. Vice President Kamala Harris, and Greta Thunberg in New Delhi, India,
burn portraits of Meena Harris, niece of U.S. Vice President Kamala Harris, and Greta Thunberg in New Delhi, India,
AP Photo/Dinesh Joshi

தற்போது, போராட்ட களத்திலிருந்த பெண் போராளி நவ்தீப் கவுர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவரது விடுதலையை வலியுறுத்தியும் ட்வீட் செய்திருக்கிறார். அதில், ``ஒரு பயங்கரவாத கும்பலால் புகைப்படம் எரிக்கப்படுவதைக் காண்பது விநோதமாயிருக்கிறது. நாங்கள் இந்தியாவில் வாழ்ந்தால் அவர்கள் எங்களை என்ன செய்வார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் தங்கை, மாயா ஹாரிஸின் மகளான இந்த மீனாட்சி ஆஷ்லே ஹாரிஸ், அமெரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார். அமெரிக்க தேர்தலின் போது கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபட்ட இவர், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார். இவர், குழந்தைகள் எழுத்தாளர், பெண்கள் நல அமைப்பின் தலைவர், சமூக நல ஆர்வலர் எனப் பல முகங்கள் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- காயத்ரி சித்தார்த்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism