Published:Updated:

`கொரோனா வைரஸ் ஆய்வுகள் ஏன் பெண்களை மையப்படுத்தவில்லை?' - ஒரு பெண் மருத்துவரின் கேள்வி! #3MinsRead

தூய்மைப் பணியாளார்கள்
News
தூய்மைப் பணியாளார்கள்

கொரோனா வைரஸ் ஆண்களையும் பெண்களையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை. ஆனால், அதில்தான் நமக்குத் தீர்வும் அடங்கியிருக்கிறது என்கிறார் மருத்துவர் ஆலிசன் மெக்ரெகர்

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அரசின் தொழிலாளர்துறை ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தது. 2019-ம் ஆண்டில் மட்டும் 1,45,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்பட்டிருப்பதாக அதில் சொல்லப்பட்டது. அதன்படி அங்கே 95 சதவிகித மொத்தப் பணியிடங்களில் பெண் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

அமெரிக்கா ஊரடங்கு
அமெரிக்கா ஊரடங்கு
AP

அதே அமெரிக்காவில் கொரோனா பாதிப்பின் காரணமாகச் சிறிய பீட்சா கடை முதல் பெரு நிறுவனங்கள் வரை மூடப்பட்டபோது வேலையிழந்தவர்களில் 60 சதவிகிதம் பேர் பெண்களாகவே இருந்தார்கள். இது பெரும்பாலான தொழில்களை மொத்தமாக முடக்கும். இந்தியாவில் 4 கோடிப்பேர் புலம்பெயர்த் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தவிர இங்கே பாலின அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் இதுவரைக் கிடைக்கப்பெறவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால், பெண்களைப் பாதிக்கும் இந்த அதீத வேலையிழப்பு எண்ணிக்கை வேறொரு முக்கியக் கேள்வியையும் முன்வைக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பை நாம் ஏன் பாலின அடிப்படையில் அணுகவில்லை, தொற்று முதல் அது ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரச் சரிவு வரை நாம் ஆண்களின் பார்வையிலேயே அணுகுகிறோமா?

கொரோனா ஆண்களையும் பெண்களையும் ஒரே மாதிரியாகப் பாதிப்பதில்லை என்பதை நீங்கள் எந்தளவு புரிந்துவைத்துள்ளீர்கள்?
மருத்துவர் ஆலிசன் மெக்ரெகர்

"பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை, பரிசோதனை கிட்களில் நடக்கும் கொள்ளை என, அடிப்படைப் பிரச்னைகள் பல இருக்கும்போது இந்தப் பார்வை தேவையா என நீங்கள் கேட்கலாம். ஆனால், கொரோனா நோய்த்தொற்று முதல் அது ஏற்படுத்தும் பிற பாதிப்புகள் வரை பெண்களை மையப்படுத்தி அணுகும்போது இதன் தாக்கம் குறையலாம், ஒருவேளை இந்தச் சர்வதேசப் பரவலுக்கு எதிரான தீர்வுகூடக் கிடைக்கலாம்" என்கிறார் பிரவுன் பல்கலைக்கழகத்தின் அவசரகால சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் பேராசிரியர் டாக்டர் ஆலிசன் மெக்ரெகர். COVID-19 பரவலுக்கு எதிரான களப்பணியில் முன்னணியில் இருப்பவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவத்தில் குறிப்பாக, அவசரகால மருத்துவத்தில் பாலியல் குறித்த ஆய்வுகளை இவர் மேற்கொண்டு வருகிறார். உடற்கூறியல் அடிப்படையில் ஆண்களிலிருந்து பெண்கள் எப்படி மாறுபடுகிறார்கள். இது மருத்துவச் சிகிச்சை முதல் மருத்துவத் தேவைகள் வரை எது மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த ஆய்வுகளை இவர் மேற்கொண்டுவருகிறார்.

கொரோனா ஆண்களையும் பெண்களையும் ஒரே மாதிரியாகப் பாதிப்பதில்லை என்பதை நீங்கள் எந்தளவு புரிந்து வைத்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்புகிறார்.

மருத்துவர் ஆலிசன் மெக்ரெகர்
மருத்துவர் ஆலிசன் மெக்ரெகர்
மருத்துவர் ஆலிசன் மெக்ரெகர் பக்கம்

”கருப்பையும் மார்பகங்களும் மட்டும்தான் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கும் வேறுபாடு என்கிற அடிப்படைப் புரிந்துணர்வே தவறு. பெண்கள் டி.என்.ஏ தொடங்கி ஒவ்வொரு செல்களிலும் ஆண்களிலிருந்து மாறுபட்டவர்கள். வலிகளைக்கூட வெவ்வேறாக உணருபவர்கள். ஆனால், நமது நவீன மருத்துவமுறையும் அதில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளும் ஆண் உடற்கூறியலை மையப்படுத்தியே உருவானது. அதனால் மருத்துவப் பாடங்களில் வரும் எவ்வித மருத்துவமுறைகளுக்கும் பெண்கள் பொருந்திப்போக மாட்டார்கள்” என்கிறார் ஆலிசன்.

21.9 சதவிகிதம்
சார்ஸ் ,மெர்ஸ் போன்ற பிற கொரோனா வைரஸ் பாதிப்புகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் ஆண்களின் இறப்பு விகிதம்

கொரோனா பாதிப்பில் இறந்தவர்களில் 61 சதவிகிதம் பேர் ஆண்கள், அதிகம் புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களால்தான் தீவிர பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர் என்கிற மேலோட்டமான ஆய்வுமுடிவுகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. ஆனால், இறப்புக்கான உடற்கூறியல் அடிப்படையிலான ஆய்வுகளை அந்த ஆய்வுகள் பேசவில்லை.

ஆனால் சார்ஸ், மெர்ஸ் போன்ற பிற கொரோனா வைரஸ் பாதிப்புகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் ஆண்களின் இறப்பு விகிதம் 21.9 சதவிகிதம் என இருந்தது. இதற்கான குறிப்பிட்டக் காரணங்கள் எதையும் ஆய்வாளர்கள் முன்வைக்கவில்லை. அதையே அவர்கள் ஆண் மற்றும் பெண் எலிகளில் ஆய்வு செய்தபோது வைரஸ் ஆண் எலிகளின் உடலில் அதிவேகமாகப் பரவியது எனச் சொன்னார்கள்.

அதுவே பெண் எலிகளில் கருப்பையை அகற்றியபோது ஆண் எலிகள் போலவே பெண் எலிகளிலும் அதிவேகமாகப் பரவத்தொடங்கியதாகச் சொன்னார்கள். ஒருவேளை பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கொரோனாவுக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கலாம் என முடிவுசெய்தார்கள். ஆனால் அதுதான் காரணமா, அதையே இந்த COVID-19 வகைக் கொரோனாவுக்கும் பொருத்திப் பார்க்க முடியுமா? ஒருவேளை தற்போதைய தொற்று தொடர்பான பாலினம் சார்ந்த புள்ளிவிவரங்கள் கிடைத்தால், பெண்களுக்கு இயற்கையாகவே தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்தால் அதனடிப்படையில் தற்போதைய ஆய்வுகளின் தன்மையையே மாற்றலாம்.

COVID-19 / SARS/MERS
COVID-19 / SARS/MERS

உதாரணத்துக்கு, தற்போது கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் என்கிற மருந்து முதலில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டாலும் பெண்களில் எந்தமாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்கிற விவரங்கள் இல்லை. உடல் எடை அடிப்படையில்தான் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, ஆண், பெண் இருவேறு பாலினத்தின் உடல் எடைக்கு ஏற்ப எப்படி அந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற விவரம் இல்லை. ஆனால், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் 60 சதவிகிதப் பெண்கள் உடல் ரீதியாகப் பக்கவிளைவுகளைச் சந்திக்கிறார்கள் என்கின்றன சில ஆய்வு முடிவுகள்.

”மருந்துகளை சந்தைக்கு எடுத்துவருவதுதான் முக்கியமே ஒழிய இதுபோன்ற ஆழ்ந்த ஆய்வுகள் தேவையா என நீங்கள் கேட்கலாம். ஆனால், இதுதான் ஆய்வுக்கான சரியான சமயம். ஏனெனில், இதுபோன்ற தொற்றுகள் கொரோனாவோடு முடிந்துவிடுவதில்லை. இந்த ஆய்வுகளைத் தற்போது மேற்கொள்வதால் அடுத்து வரும் ஜூனாடிக் தொற்றுகளில் இருந்து நாம் பெருமளவிலான இறப்புகளைக் கூடத் தடுக்க முடியும்” என்கிறார் ஆலிசன்.