Published:Updated:

என் பெயர் கிம் ஃபுக் பாங் டி - வியட்நாம் போர்ச் சிறுமி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

வியட்நாம் போர்ச் சிறுமி
வியட்நாம் போர்ச் சிறுமி

அப்படியான தழும்பைத் தனது முதுகிலும் மனதிலும் ஆயுளுக்கும் தாங்கி நிற்கும் கிம் ஃபுக் பாங் டி ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஆவணப்படம் ஒன்றுக்காக மனம் திறந்திருக்கிறார்.

இரண்டு பக்கமும் துப்பாக்கி குண்டுகளின் சத்தம், வீசப்படும் குண்டுகள், பலியாகும் மனித உயிர்கள். சொற்களில் சொல்லி முடிப்பதுபோல போர் அத்தனை எளிதாக முடிந்துவிடுவதில்லை. போருக்கு இரையாகும் உயிர்களின் இறுதி நிமிடப் போராட்டங்கள், கண்ணீர்கள், கதறல்கள், தழும்புகள், போரின் தாக்கம் நிரந்தரமாய்த் தங்கிவிட்ட முகங்கள் என அதன் ஆயுள் மனிதனின் ஆயுள் ரேகையுடனான போர் ரேகையாக எஞ்சி விடுகிறது.

வியட்நாம் போர்ச் சிறுமி
வியட்நாம் போர்ச் சிறுமி
மூளுமா மூன்றாம் உலகப்போர்?

அப்படியான தழும்பைத் தனது முதுகிலும் மனதிலும் ஆயுளுக்கும் தாங்கி நிற்கும் கிம் ஃபுக் பாங் டி ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஆவணப்படம் ஒன்றுக்காக மனம் திறந்திருக்கிறார். 1970-களில் அமெரிக்கா வியட்நாமின் நிலங்களில் வீசிய நபாம் வகைக் குண்டுகளுக்குப் பலியான வியட்நாம் குழந்தைகளில் ஒருவர். வீசப்பட்ட குண்டினால் உடல் பற்றி எரிய சாலையில் நிர்வாணமாக ஓடிய அந்த ஒன்பது வயது குழந்தையின் புகைப்படம் அமெரிக்க வல்லரசின் போர்வெறிக்குச் சாட்சியம்.

முதுகின் சதைகளைச் சுருக்கிவிட்ட அந்தத் தழும்புகளை மறைக்க கழுத்துவரை மூடப்பட்ட சிவப்பு நிற உடை அணிந்து பேச அமர்கிறார் கிம். கிம் அணியும் உடை முழுக்கவும் அப்படித்தான். தனது இடது கைகளிலும் முதுகிலும் நிரந்தரமாகத் தங்கிவிட்ட அந்தத் தழும்புகளை மறைத்தபடி இருக்கும்.

வியட்நாம் போர்ச் சிறுமி
வியட்நாம் போர்ச் சிறுமி

"என் வலியை ஏன் புகைப்படம் எடுத்தார்கள்?"

"8 ஜூன் 1972. அன்றைய தினம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு விமானத்தை அத்தனை நெருக்கத்தில் பார்த்தேன். பெருஞ்சத்தத்துடன் அந்த விமானம் எங்கள் வானத்தின் மீது பறந்தது. விமானம் கடந்து சென்றதும். எதிர்பாராதவிதமாக எங்களைச் சுற்றி நெருப்பு சூழ்ந்துகொண்டது. என்னுடைய டிரஸ் முழுவதுமாக நெருப்பு பற்றிக்கொண்டது. என்னுடைய கரங்கள் நெருப்பால் எரிந்துவிட்டிருந்தன. என் கரங்களைப் பார்க்கிறேன். என்னைச் சுற்றி இருந்த அனைவரும் என்னை வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். போர், கண் இமைக்கும் நொடியில் என்னைத் அதற்கு பலிகடாவாக்கியிருந்தது."

"எருமை மாட்டுத் தோலுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வேன்!"

வியட்நாம் போர்ச் சிறுமி
வியட்நாம் போர்ச் சிறுமி
Vikatan

பேசியபடியே தனது இடது கை முட்டியை மூடியிருக்கும் துணியை விலக்கிவிடுகிறார். நெருப்பால் ரணப்பட்டச் சதை சீரற்ற வகையில் மூட்டு தெரியாதபடிக்கு மூடிக் கிடக்கிறது. மீண்டும் அவரே பேசத் தொடங்குகிறார். இந்த முறை குண்டுகள் வெடித்த பின்னணியில் அவரது நிர்வாணப் புகைப்படம் குறித்துப் பேச்சுத் திரும்புகிறது...

"எனக்கு அந்தப் புகைப்படம் பிடித்திருக்கவில்லை. நான் வலியில் இருந்தபோது, உடல் எரிந்து நிர்வாணப்பட்டுக் கிடந்தபோது அவர் ஏன் என்னைப் புகைப்படம் எடுத்தார். அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கவே வேண்டாம் என்பதுதான் இன்றுவரை என்னுடைய எண்ணம். நெருப்பால் வெந்து போன உடலைச் சீர் செய்ய இதுவரை 17 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுவிட்டன. ஒவ்வொரு நாளும் அந்தக் காயங்களாலும் காயங்களுக்குக் கொடுத்த சிகிச்சைகளாலும் நான் வலியை அனுபவிக்க நேர்ந்தது. வலியை மட்டுமே அனுபவித்தேன். ஒன்று சொன்னால் நம்பமாட்டீர்கள். நான் எனது தோலை எருமை மாட்டுத் தோலுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வேன். அவற்றைப் போலவே எனது சருமமும் தடித்துக் கிடந்தது. அதனால் வியர்வை என்பதையே என் சருமம் மறந்துவிட்டிருந்தது.

வியர்வைகள் துளிர்க்காத இடங்களில் அன்பு துளிர்த்தது. என்னைப் போன்று போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செயல்படத் தொடங்கினேன்.
கிம் ஃபுக் பாங் டி
வியட்நாம் போர்ச் சிறுமி
வியட்நாம் போர்ச் சிறுமி

வியர்வை உடலில் தேங்கிவிட்டது போலக் கோபம், வெறுப்பு, மனக்கசப்பு என அத்தனையும் தேங்கிவிட்டிருந்தது. நான் இறந்துவிட்டால் இனி இந்த வலி இருக்காது என முடிவு செய்து தற்கொலைக்கு முயன்றேன். தற்கொலை முடிவில் தோற்ற பிறகு எனக்கான மதநம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டேன். நம்பிக்கை எனக்கு வாழ்வின் மீதான பிடிப்பைக் கொடுத்தது. நான் யாரையெல்லாம் வெறுத்தேனோ அவர்கள் அத்தனை பேருக்காகவும் பிரார்த்தித்தேன். அவர்களை மன்னித்தேன். மன்னித்தது என்னைப் பெரும் சுமையிலிருந்து விடுதலை செய்தது.

வியர்வைகள் துளிர்க்காத இடங்களில் அன்பு துளிர்த்தது. என்னைப் போன்று போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செயல்படத் தொடங்கினேன். அவர்களுக்கு எனது தழும்பைக் காண்பிப்பேன். ``ஏன் அழுதீர்கள்?" ``ஏன் நிர்வாணமாக ஓடினீர்கள்?" என அந்தப் பிள்ளைகள் கேட்பார்கள். போரில் நான் சந்தித்த அனுபவங்களைப் பகிர்வேன். நான் அந்தக் குழந்தைகளிடையே பணிபுரிவது என்பது குறிக்கோளால் அல்லது கடமையால் அமையவில்லை. அன்பினால் நிரம்பப்பெற்ற சிந்தனையால் அமைந்தது" என்கிறார்.

``அம்மாவின் தழும்புகளில் முத்தமிட்டான்"

வியட்நாம் போர்ச் சிறுமி
வியட்நாம் போர்ச் சிறுமி
Vikatan

"திருமணமாகி முதல் குழந்தை பிறந்திருந்தான். நம் வாழ்வில் நிரந்தரமாகப் புதிய நபர் ஒருவர் அறிமுகமாகும்போது அவரிடம் நமது கடந்த காலங்களை எப்படித் தொடங்கி எப்படிப் பகிர்வது என்கிற சிந்தனை நமக்கு இருக்கும். என் மகனைப் பார்த்துக்கொள்வதில் என் கவனத்தைச் செலுத்தினேன். எனக்கு ஏன் தழும்புகள் இருக்கின்றன என்பதை அவனுக்குச் சொல்லிப் புரிய வைத்தேன். பாதிக்கப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட எனது புகைப்படத்தைக் காண்பித்தேன். எனது இடது கையைத் தூக்கித் தனது கரங்களில் வைத்துக்கொண்டு, 'அம்மா! வலிக்கிறதா?' என்றான். சட்டெனத் தழும்புகளில் முத்தமிட்டான். அந்த நொடி மட்டும் நான் பற்றி எரிந்த அந்த நிமிடத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்" என முடிக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு