தஞ்சாவூரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட மாணவி விடுதியிலிருந்து பெற்றோர் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி ஜனவரி 19-ம் தேதி உயிரிழந்தார். முன்னதாக, விடுதியில் உள்ள அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று வார்டன் பலவந்தப்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் பூச்சிமருந்தைக் குடித்ததாகவும் அந்தச் சிறுமி மரண வாக்குமூலம் அளித்தது அனைவரையும் பதறவைத்தது.
இந்நிலையில், மாணவி பேசிய மற்றொரு வீடியோ அவர் மரணத்துக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், இரண்டு வருடங்களுக்கு முன் விடுதி வார்டன் தன்னை மதம் மாற வற்புறுத்தியதாக சிறுமி தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, விடுதி வார்டன் சகாயமேரி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாறக்கூறி வருவதாகவும், அதற்கு சம்மதிக்காததால் விடுதி அறைகள் அனைத்தையும் மாணவியை சுத்தம்செய்ய வைத்து துன்புறுத்தியதாகவும், இதனால் மாணவி மனஉளைச்சலுக்கு ஆளாகி பூச்சி மருந்தைக் குடித்ததாகவும் அவர் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா, ``முதற்கட்ட விசாரணையில் மதமாற்ற குற்றச்சாட்டு எதுவும் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார். பா.ஜ.கவினர், ``மாணவியின் மரணத்துக்குப் பின் வெளியிடப்பட்ட வீடியோவிலேயே எல்லாம் இருக்கிறது" என்று போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. மதமாற்றம் குறித்து சிறுமி பேசிய வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி நீதிபதி கேள்வி எழுப்ப, அந்த வீடியோவை எடுத்த மொபைல் போன் கிடைக்க முயன்று கொண்டிருப்பதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இன்றைக்கு அந்த மொபைல் போன் உரிமையாளர் காவல்துறையினரிடம் அதை ஒப்படைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஓர் உயிரிழப்பு நடக்கும்போது, அதில் மதம் சம்பந்தப்படும்போது, அதை அணுகுவதில் நிதானமும், அதிக கவனமும், உண்மைத்தன்மையும், பன்முக விசாரணையும் மிகவும் அவசியம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், சார்பு என்பதை மறைக்கும் முகமூடிகளாக நிதானம், அதிக கவனம், உண்மைத்தன்மை, பன்முக விசாரணை போன்ற முகமூடிகளை அணிந்துகொள்வது சுட்டிக்காட்டப்பட வேண்டியது; கண்டனத்துக்கு உரியது.
ஒரு ஜனநாயக நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை புரிந்துணர்வுடனேயே பிரச்னைகள் அணுகப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். அது பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற தார்மிகப் பொறுப்பில் பின்பற்றப்பட வேண்டிய அறம். அதே நேரம், குற்றங்களிலிருந்து காக்கும் வேலியாக அதே சிறுபான்மை, பெரும்பான்மை அணுகுமுறை மாறிவிடக் கூடாது என்ற தெளிவும் முக்கியம்.

மாணவியின் உயிரிழப்பில், மதமாற்ற வற்புறுத்தல்களுக்குப் பங்கு இருக்கிறதா, இல்லையா என்பதை, தொடரவிருக்கும் காட்சிகளில், நீதிமன்ற வாதங்களில் பார்ப்போம். ஆனால், மதமாற்ற வற்புறுத்தல் சம்பந்தப்பட்ட மிஷனரி பள்ளி வளாகத்தில் நிகழ்ந்திருக்கிறது என்பதை மாணவியின் வீடியோ மூலம் அறிகிறோம்.
மாணவி உயிரிழப்பை தொடர்ந்து, அந்தப் பள்ளியின் மாணவிகள் பொட்டு, பூ, மற்ற மத அடையாளங்களை சூடிக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை என்ற வழக்கத்தை அந்த ஊர்க்காரர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு மட்டுமல்ல... பல்வேறு மதங்களைச் சேர்ந்த நிர்வாகங்களின் கீழ் இயங்கும் பல கல்வி நிலையங்களிலும் இதுதான் நிலைமை என்ற நிதர்சனத்தை நாம் அறிவோம். இப்போது, சக மாணவியின் இழப்பு தந்த அதிர்வு, அந்தக் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களையும் மௌனத்தை உடைத்து, தங்கள் பள்ளி, கல்லூரி வளாக மதப் பழக்கவழக்க நிர்பந்தங்களுக்கு எதிரான குரல்களைப் பேசவைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தங்கள் மதத்தின் நம்பிக்கைகளை, பழக்கவழக்கங்களை, கருத்துகளை மாணவர்களிடம் திணிப்பதில் எந்த மதங்களின் சார்பில் நடத்தப்படும், நிர்வகிக்கப்படும் பள்ளிகளும் விதிவிலக்கல்ல. `அசைவு உணவை பள்ளிக்குக் கொண்டுவரக் கூடாது' என்ற உயர்சாதி மனநிலையில் இயங்கும் பள்ளிகள் இங்கு ஏராளம். ஐஐடி (மெட்ராஸ்) மெஸ்ஸில் சைவ, அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்குத் தனித்தனி நுழைவுவாயில்கள், வாஷ் பேசின்கள், பாத்திரங்கள் என `ஒதுக்கப்பட்டதை' பார்த்தோம். சமீபத்தில் சர்ச்சையான சபரிமாலா வீடியோவில், இஸ்லாமிய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஒரு பள்ளியில், மாணவிகளுக்கு கட்டாய ஹிஜாப், ஆண் ஆசிரியர் தனி அறையில் இருந்து மாணவிகளுடன் நேரடித் தொடர்பற்று பாடம் நடத்துவது போன்ற அதிர்ச்சியளிக்கும் காட்சிகளைப் பார்த்தோம். சென்ற வாரம், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றிலேயே, ஹிஜாப் அணிந்துவந்ததால் வகுப்பறைக்கு மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட, அந்த எட்டு மாணவிகளும் அதற்கு எதிராகக் குரல் கொடுத்த செய்தி சர்ச்சை ஆனது.

இவ்வாறாக, கல்வி நிலையங்களில் மாணவர்களிடம் கட்டாயத் திணிப்பாக மேற்கொள்ளப்படும் மதரீதியிலான நடவடிக்கைகள் எல்லாமே கண்டனத்துக்குரியவை. எதிர்த்துக் குரல் கொடுக்கப்பட வேண்டியவை. அதில் நுழைக்கப்படும் `கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் தேவை' போன்ற ஆபத்து அரசியல் குரல்கள் பிரித்தெடுக்கப்பட வேண்டும். அதே நேரம், கல்வி நிலையங்களில் மதத் திணிப்புக்கு எதிரான எதிர்ப்புகளைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருப்பது அவசியம். மாறாக, அரசு, கட்சி, அரசியல் என்று இதில் சார்பெடுத்து எதிர்ப்புத் தெரிவிப்பதும், மௌனம் காப்பதும் நேர்மையான சமூகக் கடமை ஆகாது.
பா.ஜ.க இந்தப் பிரச்னையை முன்னெடுப்பதாலேயே பல செயற்பாட்டாளர்கள் இதில் வெற்றுப் பார்வையாளர்களாக இருப்பது, `இந்த அரசாங்கத்தில் எல்லாம் சரியாக நடக்கிறது' என்ற தி.மு.கவின் பிம்பத்தை கட்டிக்காக்க அரசு அதிகாரம் பாய்ச்சப்படுவது என, ஓர் அப்பாவிச் சிறுமியின் உயிரிழப்பில் எத்தனை ஆதாய, அரசியல் காட்சிகளைப் பார்க்கிறோம்?!
கல்வி நிலையங்களில் நடத்தப்படும் மதத் திணிப்புப் பிரச்னைகளுக்கு எதிரான குரல், சார்பு நீக்கி ஒற்றைக் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும். சாதி, மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் தனிமனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை, மனிதர்களாக ஒன்றிணைந்து நின்று எதிர்க்க வேண்டும். அங்கேயும் மதம், சாதி என பிரிந்து நின்று குரல் கொடுப்பது மதத்தையும் சாதியையும் வளர்த்தெடுக்குமே தவிர, மனிதத்தை ஒருபோதும் வளர்த்தெடுக்காது.
கத்தி மேல் நடக்கும் களம்தான்... சார்பற்ற நேர்மையுடன் கைகோத்து நடப்போம், கடப்போம்!
- அவள்