Published:Updated:

பெண்களை இறுதிச்சடங்கு செய்ய சமூகம் அனுமதிக்காதது ஏன்? - பின்னணி இதுதான்!

நடிகர் விவேக் திரைப்படங்களில் நிறைய முற்போக்கு கருத்துகளைப் பேசியவர். அவர் வீட்டுக்குள்ளேயும் சமத்துவமுள்ள மனிதராக இருந்துள்ளார் என்பதை அவரது இறுதிச் சடங்கை அவரின் மகள் செய்ததன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகர் விவேக் மரணமடைந்து பத்து நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், அவரது இறுதிச் சடங்கு குறித்த பேச்சு, தமிழகத்தில் இன்னும் தொடர்கிறது. `பெண்’ என்ற ஒற்றைக் காரணத்துக்காகத் தங்கள் பெற்றோருக்கு இறுதிச் சடங்கைச் செய்ய முடியாமல் போன பெண்கள், விவேக்கின் உடலுக்கு அவரின் மகள் இறுதிச் சடங்கு செய்தது குறித்து நெகிழ்வோடும், தங்கள் பெற்றோருக்கு தங்களால் அப்படிச் செய்ய முடியாமல் போன ஆதங்கத்தோடும் பேசிக்கொள்கின்றனர்.

நடிகர் விவேக்
நடிகர் விவேக்

அங்கொன்றும் இங்கொன்றுமாக பல தடைகளைக் கடந்து, தங்கள் பெற்றோருக்கான இறுதிச் சடங்கை சில பெண்கள் செய்திருந்தாலும் எல்லாப் பெண்களுக்கும் அது சாத்தியப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. குறைந்தபட்சம், ஆண் பிள்ளைகள் இல்லாத பெண் பிள்ளைகள் மட்டுமே உள்ள அனைத்து வீடுகளிலும் இது சாத்தியமா என்றுகேட்டால் கிடையாது. வீட்டுக்கு ஒரே மகளாக இருக்கும் ஒரு பெண் தன் பெற்றோரின் இறுதிச் சடங்கைச் செய்ய முடியாமல் போவது, அதனை யாரோ உறவுக்கார ஆண் ஒருவர் செய்வது என்பது எவ்வளவு பெரிய துயரம்? ஆனால், இந்தச் சமூகம் அதை சர்வ சாதாரணமாகக் கடந்து செல்கிறது. எல்லா நிலைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக வந்துவிட்ட போதிலும், இறுதிச் சடங்கு என்பது இன்னமும் ஆணாதிக்கத்தின் பிடியிலேயே சிக்கியிருப்பதன் பின்னணி என்ன?

உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் திராவிடர் கழகத்தின் பிரசார செயலாளருமான அருள்மொழியிடம் பேசினோம், ``மக்களின் சாஸ்திரபூர்வமான வாழ்க்கை பழக்கவழக்கங்களுக்கு அவரவர் மதச் சட்டங்களே பொருந்தும் என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்து மதத்துக்கென தீர்மானிக்கப்பட்ட சட்டம் எதுவும் கிடையாது. இந்து மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்கள் பெரும்பாலும் ஸ்மிருதிகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டவைதான். ஸ்மிருதிகளில் நாரத ஸ்மிருதி, யம ஸ்மிருதி, யாக்ஞவால்கிய ஸ்மிருதி, மனு ஸ்மிருதி உள்ளிட்ட ஏராளமானவை இருக்கின்றன. அதில் மனு ஸ்மிருதிதான் மன்னர்கள் காலத்தில் பெரும்பாலும் பின்பற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்போது கடைப்பிடிக்கப்படும் பெரும்பாலான சாஸ்திர சம்பிரதாயங்கள் மனு ஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டவைதான். இறுதிச் சடங்கு சம்பிரதாயங்களிலும் அதன் தாக்கமே இருக்கிறது.

அருள்மொழி
அருள்மொழி

`பெண்கள் இறுதிச் சடங்கு செய்யக் கூடாது’ என்று மனு ஸ்மிருதியில் நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனால், மறைமுகமாக அதனைத்தான் மனு ஸ்மிருதி வலியுறுத்துகிறது. `தந்தைக்கு மகன் இறுதிச் சடங்கு செய்வதன் மூலம் தந்தையை புத் (நரகத்தின் பெயர்) என்ற நரகத்துக்குப் போகாமல் தடுப்பான்’ என்றும் `ஒருவருக்கு மகன் பிறந்தால்தான் அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்’ என்றும் மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவேதான் மகனைப் புத்திரன் என்று அழைக்கின்றனர்.

`ஒருவருக்கு மகன் இல்லையெனில் அவரின் சகோதர்களுக்கு மகன் இருந்தால் அவர்கள் இறுதிச் சடங்கு செய்யலாம்’ என்றும் `உடன் பிறந்தோரில் ஒருவனுக்கு மட்டும் புத்திரன் இருந்தால் அவன் அனைவருக்கும் மகன்’ என்றும் மனு ஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, `ஒருவனுக்குப் பல மனைவிகள் இருந்தால் அவர்களில் ஒருத்திக்கு மட்டும் மகன் வாய்த்தால் அனைத்து மனைவியருக்கும் சந்ததி வாய்த்ததாகச் சொல்ல வேண்டும்’, `பெண் குழந்தைகள் மட்டுமே பெற்றெடுக்கும் மனைவியைக் கணவன் விலக்கி வைக்கலாம். அவளுக்கு ஜீவனாம்சம்கூட கொடுக்கத் தேவையில்லை’ என்றும் மனு ஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் பின்னணியில்தான் இறுதிச் சடங்கு செய்வதும், பிண்டம் வைத்துக் காரியம் செய்வதும் ஆண்களுக்கான உரிமையாகவும் பெண்கள் செய்யக்கூடாத செயலாகவும் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இதை வைத்துதான் நாளடைவில், `இறுதிச் சடங்கு செய்பவர்தான் சொத்துக்கு வாரிசு’ என்ற நடைமுறை வந்தது. அதனால்தான், ஆண்கள் மட்டுமே வாரிசாகக் கருதப்பட்டனர். பெண்கள் என்னதான் பெற்றோர்கள்மீது அதீத அன்போடும் பாசத்தோடும் இருந்தாலும்கூட பெண்கள் இறுதிச் சடங்கு செய்யக் கூடாது. பெண்களைத் தெருமுனை வரையிலும் அழைத்து வந்து விழுந்து கும்பிட வைத்து பின்பு வீட்டுக்கு அனுப்பிவிடுவதன் பின்னணியில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றன” என்று விவரித்தார்.

பெண்
பெண்

தொடர்ந்து பேசிய அவர், ``காலங்கள் எவ்வளவு மாறினாலும் ஆணாதிக்கமும், ஜாதி மதக்கூறுகளும் இணைந்து இந்த நிலைமையை மாறாமல் கட்டிக் காப்பாற்றின. பெண்களும் அந்த நம்பிக்கையில் மூழ்கி மயானத்துக்குச் செல்லக் கூடாது என்பதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்துகொண்டிருந்தனர். சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்துக்குப் பிறகுதான் ஆங்காங்கே அந்தக் கட்டுப்பாடுகள் மீறப்பட்டன. பெரியார் சிந்தனையாளர்கள் குடும்பங்களிலிருந்து பெண்கள் இறுதிச் சடங்கு செய்யும் விஷயங்களை முன்னெடுக்க ஆரம்பித்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு, கோவையில் பெண்களே பாடை சுமந்துகொண்டு சென்று இறுதிச்சடங்கு செய்த நிகழ்வெல்லாம் நடந்தது. அதன் பிறகு பல இடங்களில் பெண்கள் இறுதிச்சடங்கு செய்யும் நிகழ்வுகள் நடந்தன. இன்று பல இடங்களில் மயானங்களிலேயே பெண்கள் வேலை செய்கிறார்கள். இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கான தைரியத்தைக் கொடுத்தது பெரியார் சிந்தனைதான்.

ஸ்மிருதிகளின் ஆதிக்கத்திலிருந்த இந்து பெண்களை விடுவித்தது அண்ணல் அம்பேத்கர். இந்து திருமணச் சட்டம், வாரிசுரிமைச் சட்டம், பெண்கள் சொத்துரிமைச் சட்டம் என அவர் இயற்றிய சட்டங்கள்தான் இன்று பெண்கள் அடைந்துள்ள சமத்துவத்துக்கான அடிப்படை. அதன் பலனை உயர்சாதி பெண்களும் அதிகளவில் அடைந்துள்ளனர் என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆனால், பழக்க வழக்கம் சாஸ்திர சம்பிரதாயம் போன்றவற்றின் மூலமாக இன்னும் பெண்கள் ஒடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.

`சில வருடங்களுக்கு முன்பு, தன் தந்தைக்கு நான்தான் இறுதிச் சடங்கு செய்வேன்’ என்று சென்ற ஒரு பெண்ணிடம், `இறுதிச்சடங்கு செய்யும்போது மேலாடையில்லாமல் இருக்க வேண்டும். அது ஆண்களால்தான் முடியும். பெண்ணால் செய்ய முடியாது’ என்று சொல்லி அந்தப் பெண்ணை இறுதிச் சடங்கு செய்யவிடாமல் தடுத்துள்ளனர். `அதற்கும் தயார் என்று சொல்லியும் இறுதிச்சடங்கு செய்ய விடவில்லை எனப் பல வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை ஒரு பெண் சில தினங்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் உருக்கமாகப் பதிவு செய்திருந்தார். `மனு ஸ்மிருதியை சிறந்ததென மண்டையில் ஏற்றிக்கொண்டவர்கள் எப்படிச் செயல்படுவார்கள்?’ என்பதற்கான வெளிப்பாடு இந்தச் சம்பவம். கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு பெண்கள் வர நினைத்தாலும் இப்படி ஏதாவது மோசமாகச் சொல்லி அடக்கி ஒடுக்கிவிடுகிறது இந்தச் சமூகம்.

பெரியார்
பெரியார்

இறுதிச்சடங்கு போன்ற மக்களின் பழக்க வழக்கங்களை ஒட்டிய பிரச்னையில் நீதிமன்றம் தலையிட வேண்டுமானால், அதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட வேண்டும். அப்படி வழக்கு தொடரப்படும் சூழலின்போது, `இறுதிச் சடங்கை பெண்கள் செய்யக் கூடாது’ என்பதற்கான ஆதாரங்களை எதிர் தரப்பினர் காட்ட வேண்டியிருக்கும். அப்படி ஏதாவது காண்பித்தாலும்கூட அது இன்றைய சமத்துவத்துக்கு எதிரானதாக இருந்தால், அதை மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியும். அதே சமயம் மக்களின் பழக்க வழக்கங்களில் நீதிமன்றத்தின் தலையீடு என்பது ஓரளவுக்குத்தான் இருக்க முடியும் என்பதையும், இதுபோன்ற பிரச்னைகளை ஒழிக்கப் பெரியார் போன்றோரின் பிரசாரமே சமூக மாற்றத்துக்கான வழி என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நடிகர் விவேக் திரைப்படங்களில் நிறைய முற்போக்கு கருத்துகளைப் பேசியவர். அவர் வீட்டுக்குள்ளேயும் சமத்துவமுள்ள மனிதராக இருந்துள்ளார் என்பதை அவரது இறுதிச் சடங்கை அவரின் மகள் செய்ததன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இறுதிச்சடங்குகள் குறித்து சமூகத்தில் நிலவும் மனத் தடைகளை உடைப்பதற்கு இந்த நிகழ்வு பெரிய உந்துசக்தியாக இருக்கும். சாஸ்திர சம்பிரதாயம் என்ற பெயரில் தங்களுக்குப் போடப்படும் தடைகளைப் பெண்கள் தகர்த்தெறிய வேண்டும்” என்றார் அருள்மொழி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு