Published:Updated:

தலித் வன்கொடுமை சம்பவங்களில் சாதியைக் குறிப்பிடுவது ஏன் அவசியமாகிறது?

`ஏன் தலித் என்று சாதியை வைத்துப் பிரித்துப் பேசுகிறீர்கள்?' என்று, இன்று கம்ப்யூட்டருக்குள் மறைந்துகொண்டு தலித்துகள் மீதான வன்முறையைப் பற்றி பலர் கேள்வி கேட்கும்போது, அவர்கள் அனுபவிக்கும் ஆதிக்க சாதி சலுகையும் சேர்ந்தே கேள்விக்குள்ளாகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த 19 வயது தலித் பெண்ணுக்காக நீதி கேட்டு குரல் எழுப்பும்போது, இன்னொரு பக்கத்திலிருந்து, ``ஏன் அவரது சாதியைக் குறிப்பிடுகிறீர்கள்? இது பெண்களுக்கு எதிரான வன்முறை" என்று பொதுமைப்படச் சொல்லச் சொல்கிறார்கள், சமூக வலைதள மனித உரிமை போராளிகள்.

ஏன் அந்த 19 வயது இளம்பெண்ணின் சாதியைக் குறிப்பிட வேண்டியது முக்கியமாகிறது? ஏன் அதை பெண்களுக்கு எதிரான வன்முறையாகப் பொதுமைப்படுத்த முடியாது? ஏன் நிர்பயாகளும் நந்தினிகளும் ஒன்று கிடையாது?

உ.பி பெண்
உ.பி பெண்

உங்களுக்கு மதுராவைத் தெரியுமா? பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மதுரா, 1972-ம் ஆண்டு இரண்டு காவல்துறையினரால் காவல்நிலையத்திலேயே வன்கொடுமை செய்யப்பட்டாள். அதுவும், மதுராவை விசாரணைக்கென்று இருக்கச் சொல்லிவிட்டு, அவளின் சகோதரனை காவல் நிலையத்தைவிட்டு வெளியேற்றி கதவைப் பூட்டினார்கள். இந்த வழக்கில் 1979-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பளித்த இந்திய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியது தெரியுமா?

``அந்தப் பெண் இதற்கு முன்பே பாலியல் உறவு கொண்டிருந்ததால், இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் காவலர்கள் பாலியல் உறவு கொண்டிருக்க முடியும்" என்று கூறி குற்றவாளிகளை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம். நீதிபதி கோஷல் கொடுத்த இன்னும் பல விளக்கங்களை எழுதவே கைகள் நடுங்குகின்றன. ஆனால், இவ்வளவு கொச்சையான தீர்ப்பு கொடுத்த சில நாள்களுக்கு முன்பு அதே உச்ச நீதிமன்றம், ``பெண்களை காவல்நிலையத்திற்கு அழைக்கக்கூடாது" என்று கடுமையாக எச்சரித்திருந்தது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நீதி கேட்கும் பயணம், இப்படியான நீதிமன்ற வன்முறைகளில்தான் முடிகிறது.

இதுபோன்ற ஒரு நாட்டில், பாதிக்கப்பட்ட தலித் பெண்ணுக்குக் குரல் கொடுக்காமல், ``தலித் என்று ஏன் குறிப்பிடுகிறீர்கள்?" என்ற கேள்வியை மட்டும் கேட்க வந்துவிடுகிறார்கள் பலர். 2019-ம் ஆண்டு கணக்குப் படி இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 10 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் (இது பதிவு செய்யப்பட்ட வன்முறைகளின் எண்ணிக்கை மட்டுமே). அதுவும், இதில் மூன்றில் ஒரு பங்கு வழக்குகள் உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. என்றாலும், தலித்துகளுக்கு எதிரான வன்முறை அவர்களது கூட்டு மனசாட்சியை எப்போதும் உலுக்காது.

நிர்பயா பாலியல் வன்முறை செய்யப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபோது நீதி கேட்டுப் போராடியவர்கள், 19 வயது தலித் பெண்ணுக்கு நீதி கேட்க ட்வீட் செய்வதற்கே அந்தப் பெண் சாகவேண்டியிருக்கிறது. மிருகத்தனமான முறையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் பெண்ணுக்கு, சிறப்பு விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி சிகிச்சை அளிக்காதுதான் இந்திய அரசு.

An Indian activist shouts slogans as she is detained by police during a protest in New Delhi, India
An Indian activist shouts slogans as she is detained by police during a protest in New Delhi, India

பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட நிர்பயாக்களின் உடல்களை, அவர்களின் குடும்பத்தினரை பூட்டி வைத்துவிட்டு அதிகாலை 2 மணிக்குக் காவல்துறையால் எரிக்க முடியாது; அவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது, `இவ நடிக்கிறா’ என்று காவல்துறை சொல்லாது. ஆனால், இவையெல்லாம் உத்தரப்பிரதேச தலித் பெண்ணுக்கும், அவர் உடலுக்கும் நடந்திருக்கின்றன.

இத்தனை கொடூரமான வன்முறை, அதிகாரபூர்வ குழந்தை வயதைக் கடந்து ஒரு வருடமே ஆன ஒரு இளம்பெண்ணின் மீது நிகழ்த்தப்பட்டிருந்தும், ``பாலியல் வன்கொடுமை நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை" என்று காவல்துறை சொல்லும் அலட்சியத்துக்கு, அவர் ஒரு தலித் என்ற காரணமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது.

நிர்பயாக்களின் வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை செய்தி லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படும். ஜிஷாக்களின் வழக்குகளைப் பற்றி, நந்தினிகளின் வழக்குகளைப் பற்றி பெட்டிச் செய்திகூட போடமாட்டார்கள். நந்தினியும், ஜிஷாவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்ததாலேயே, சட்டத்தின் மீது பயமில்லாமல் உயர்சாதியினரால் கொல்லப்படுவார்கள். அவர்களின் பெயர்கள்கூட ஒரு வாரத்திற்குப் பின் மக்களுக்கு நினைவிருக்காது. நிர்பயாக்களின் பெயர்கள் எப்போதும் நினைவிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உத்தரப்பிரதேசத்தில் கொல்லப்பட்ட பெண், ஆறு மாதங்களுக்கு முன்பாகவே, தற்போது அவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளால் மிரட்டப்பட்டிருக்கிறார். அவர்கள் வாழும் கிராமத்தில் மிகக் கொடூரமான முறையில் தீண்டாமை வெளிப்படையாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. பள்ளிகளில் தலித் மாணவர்கள் டாய்லெட்டுகளை சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். தலித் மக்கள் பணம் கொடுத்தால், அந்தப் பணம் தண்ணீர் தெளித்து வாங்கப்படுகிறது. இவை எல்லாம் அந்த கிராமத்தில் பின்பற்றப்படும், இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு கிராமங்களில் பின்பற்றப்படும் பல்வேறு வகையிலான தீண்டாமையின் ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையையோ, நந்தினிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையையோ பெண்களுக்கு எதிராக ஆண்களால் நடத்தப்படும் வன்முறை எனப் பொதுவாகக் கடந்துவிட முடியாது. இந்தியாவில் தலித்துகள், பழங்குடி மக்கள் மீது உயர்சாதியினரால் நடத்தப்படும் வன்முறை, திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட வன்முறை. இதில் அரசுக்கும் நீதித்துறைக்கும் பெரும் பங்கிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட, தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையின் அடிப்படைக் காரணம், அவர்கள் பிறந்த சாதி. உயர்சாதியினரால் நிரப்பப்பட்ட நீதித்துறையும், காவல் நிலையமும், மனுநீதியால் ஆளப்படும் இந்திய கூட்டுமனசாட்சியும், ``இவை என்றும் என் பக்கம்தான் நிற்கும்" என்பதோடு இணைந்த சாதியத் திமிருக்கு ஊக்கம் கொடுத்து, தலித்துகள் மீதான வன்முறையை சாத்தியப்படுத்துகிறது. எனவே, இதற்கான அடிப்படை சாதி.

வன்கொடுமை
வன்கொடுமை
காவல் நிலையங்களே பெண்களுக்கு பாதுகாப்பானதில்லையா... திருப்பூர் சம்பவம் சொல்வது என்ன?

இதுபோன்ற ஒரு சமூகச் சூழலில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை, தலித் என்று குறிப்பிடுவதில் இந்த திடீர் மனித உரிமை போராளிகளுக்கு ஏன் கோவம் வரவேண்டும்? ``ஏன் தலித் என்று சாதியை வைத்துப் பிரித்துப் பேசுகிறீர்கள்?" என்று, இன்று கம்ப்யூட்டருக்குள் மறைந்துகொண்டு தலித்துகள் மீதான வன்முறையைப் பற்றி பலர் கேள்வி கேட்கும்போது, அவர்கள் அனுபவிக்கும் ஆதிக்க சாதி சலுகையும் சேர்ந்தே கேள்விக்குள்ளாகிறது. அது பயத்தை ஏற்படுத்தி அவர்களை அமைதியற்றவர்களாக்குகிறது. அந்த பயம்தான் #DalitLivesMatter என்று ட்விட்டரில் பேசினால், #AllLivesMatter என்று ஹேஷ்டேக் போடவைக்கிறது. சாதிக்கு எதிரான கேள்வி அவர்களது சாதிய சலுகையை கேள்விக்குள்ளாக்குகிறது. அவர்கள், தங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ சாதியவாதிகளாக இருக்கிறார்கள்.

நாம் அவர்களுக்கு பதில் சொல்லத்தேவையில்லை. கொல்லப்பட்ட தலித் இளம்பெண்ணுக்காகவும், இந்தியா முழுவதும் தலித்துகள் மீது அதிகரித்திருக்கும் வன்முறைக்கு எதிராகவும் குரல் கொடுப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு