Published:Updated:

அதே அரசியல், அதே நாடகம்... உங்கள் மேல் பரிதாபம்தான் வருகிறது குஷ்பு! #VoiceOfAval

குஷ்பு
குஷ்பு ( Photo: Twitter / khushsundar )

`தமிழ்நாட்டுப் பெண்களின் கற்பு பற்றி குஷ்பு கேவலமாகப் பேசுகிறார்' என்று, பெண்களின் மகப்பேறு ஆரோக்கியம் குறித்து அவர் சொன்ன கருத்துகள் திரிக்கப்பட்டு பரப்பப்பட்டபோது பாதிக்கப்பட்டவராக நின்றார் குஷ்பு. இப்போது அதே கத்தரிப்பு, சித்திரிப்பு வேலைகளை அவரே செய்துகொண்டிருக்கிறார்.

`திருமாவளவன் மன்னிப்புக் கேட்கும்வரை விடப்போவதில்லை' என்று கைதான கையோடு சொல்லியிருக்கிறார் குஷ்பு. உண்மையில், அவர் செய்யும் அரசியல் அவருக்குத் தெளிவாக விளங்குகிறதா என்று தெரியவில்லை.

பெண்களை மையப்படுத்தி நடக்கும் இந்த சமீபத்திய அரசியல் நகர்வுகளில், காலம் காலமாகப் பெண்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த அதிர்ச்சி ஒரு பக்கம் என்றால், இந்த அரசியலில் பெண்கள் பயன்படுத்தப்படும் விதம் குறித்த அதிர்ச்சி மறுபக்கம். குறிப்பாக, கண்டனங்கள் தெரிவிப்பது, போராட்டம் நடத்துவது, மன்னிப்புக் கேட்கச் சொல்வது என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைன்மென்ட்டுடன் வரும் குஷ்புவின் செயல்பாடுகள்.

`மனுவில் பெண்கள் பற்றி இவ்வாறு எல்லாம் இழிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது' என்று திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேச, அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு, `திருமாவளவன் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்' என்று பரப்பப்பட்டது. பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் குஷ்பு, `பெண்களை மோசமாகச் சொல்வதுதான் உங்கள் கொள்கையா?' என்று கேட்கிறார். திருமாவளவன் தன் கருத்துகளாகப் பெண்களை இழிவுபடுத்திப் பேசுவதற்கும், `மனுவில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது' என்று சொல்வதற்குமான வித்தியாசம்கூட அவர் அறியவில்லையா?

`மனுவில் பெண்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததைத்தானே திருமாவளவன் சுட்டிக்காட்டினார்?' என்று செய்தியாளர்கள் கேட்க, `அதில் பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு ஏதும் இல்லை' என்று அவர் தந்த பதில், முதிர்ச்சியின்மை. தமிழக பா.ஜ.க தலைவர்களே மனுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இயலாமல், மனு சித்தாந்தங்களிலிருந்து தங்களை விலக்கிக்கொள்ளும் நகர்வில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். `மனுவில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளுக்கும் பா.ஜ.கவுக்கும் என்ன சம்பந்தம்?' என்கிறார் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன். `மனு நீதி எங்கு உள்ளது?' என்று அதன் இருப்பையே மறுக்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல். முருகன். ஆனால், பா.ஜ.கவில் இணைந்து அரை மாதமே ஆகும் குஷ்பு, `மனுவில் பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு ஏதும் இல்லை' என்று, மனுவை முழுவதும் `படித்துமுடித்தவராக' தீர்ப்பு சொல்கிறார்.

Kushboo Protest
Kushboo Protest
Photo: Twitter / BJP4TamilNadu

இன்று, குஷ்பு தலைமையில் பா.ஜ.க மகளிர் அணியினர் திருமாவளவனின் மக்களவை தொகுதியான சிதம்பரத்தில் தர்ணா போராட்டம் நடத்தச் சென்றனர். வழியில் முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டுள்ளார் குஷ்பு. அப்போது, `இந்தப் போராட்டத்தை பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதைக் கண்டித்தே நடத்தவிருந்தோம்' என்று மீண்டும் தெரிவித்திருக்கிறார். `தமிழ்நாட்டுப் பெண்களின் கற்பு பற்றி குஷ்பு கேவலமாகப் பேசுகிறார்' என்று, பெண்களின் மகப்பேறு ஆரோக்கியம் குறித்து அவர் சொன்ன கருத்துகள் கத்தரிக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் பரப்பப்பட்டபோது பாதிக்கப்பட்டவராக நின்றார் குஷ்பு. இப்போது அதே கத்தரிப்பு, சித்திரிப்பு வேலைகளை அவரே செய்துகொண்டிருக்கிறார்.

`கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் இருக்கிறோம். இறுதி மூச்சுவரை பெண்களின் கண்ணியத்துக்காகப் போராடுவோம்' என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ள குஷ்பு, `ஒவ்வொரு பெண்ணுக்காகவும் நடத்தப்படும் போராட்டம் இது' என்றிருக்கிறார். உண்மையில் அரசியல் விளையாட்டில் குஷ்பு எனும் பெண் பயன்படுத்தப்படும் விதத்தை பார்க்கும்போது, நமக்குத்தான் அவர் மேல் பரிதாபம், அயற்சி ஏற்படுகிறது. அரசியலில் கட்சிகள் மாறுவதும், கொள்கைகள் மாறுவதும் இயல்புதான். ஆனால், பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் `அப்படி ஒரு பிரச்னையே இல்லை' என்று பெண்களையே எதிர்வரிசையில் நிற்கவைத்து சொல்லவைக்கும்போது ஏற்படும் அயற்சி அது.

உங்கள் கொள்கை பற்றியோ, நீங்கள் யாருக்கு அரணாக நிற்கிறீர்கள் என்பதோ கேள்வியல்ல குஷ்பு. பெண்கள் தொடர்பான பிரச்னையை பெண்களை வைத்தே மறுக்கும், மறைக்கும், திசைதிருப்பும் யுக்தியில் நீங்கள் நிற்கவைக்கப்பட்டிருக்கும் அரசியலின் மீதுதான் கேள்வி. ஓர் `அரசியல்வாதி'யாக இதில் உங்கள் வைரலான நகர்வுகளுக்குக் கைகொடுக்கலாம். ஆனால், அரசியல் களத்தில் அரிதான எண்ணிக்கையில் இருக்கும் பெண் அரசியல்வாதிகளே, பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் எதிர் நிலைப்பாடு எடுக்கும்போது, குட்டத்தானே வேண்டும்?

திருமாவளவன்
திருமாவளவன்
அமீர் தெரிந்தே அப்படி சொல்லியிருக்கமாட்டார்... ஆனாலும்? #VoiceOfAval

இன்னொரு பக்கம், `மனுவில் மட்டுமா பெண்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்? மற்ற மத நூல்களில் இல்லையா?' என்று எல்லா நூல்களிலும், மதங்களிலும் பெண்களை அடிமைகளாக வைத்திருப்பது பற்றி விவாதம் எழும்புகிறது. அவற்றை எழுதியவர்களும், படித்தவர்களும், பின்பற்றுபவர்களும் தவறாமல் வெட்கப்படுங்கள். இத்தனை அடிமைத்தனங்கள், மடைமைகள், சங்கிலிகள் அறுத்து இன்று பெண்கள் முன்னேறி வந்திருக்கும் நெடும், சுடும் பயணத்தின் உறுதியை தலைவணங்குங்கள்.

இறுதியாக, நூல்களில் எழுதிவைக்கப்பட்டுள்ளவற்றுக்காக சமூக வலைதளங்களில் கொதித்து எழுபவர்கள் எல்லோருமே மேன்மக்களா என்ன? உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கு நீங்கள் தரும் உரிமை, சுதந்திரம், மரியாதையை எல்லாம் கொஞ்சம் சுயபரிசீலனை செய்துபாருங்கள்.

- அவள்

இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் புதிய முன்னெடுப்பு!
அடுத்த கட்டுரைக்கு