Published:Updated:

பிரபலங்கள் வீட்டுப் பெண்களுக்கு பாலியல் மிரட்டல்... இது என்ன உளவியல்?

Sexual Harassment
Sexual Harassment ( Representative Image )

ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் அவர்கள் வீட்டுப் பெண்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதன் பின்னால் உள்ள உளவியல் காரணங்களை ஆராய்ந்து பார்க்கலாம்.

சமீபத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி, இலங்கையைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு பற்றிய `800' என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதற்குப் பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. அது அவர்களது அரசியல் நிலைப்பாடு. அதைப் பற்றி நாம் பேசப்போவதில்லை. ஆனால், அப்படி எழுந்த எதிர்ப்புப் பதிவுகளில் ஒன்று மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் இருந்தது. விஜய் சேதுபதியின் பெண் குழந்தைக்கு சிறார் வதை மிரட்டல் விடுத்திருந்த பதிவு அது.

சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை தேடிவருகிறது காவல்துறை. இதற்கிடையே, அவர் இன்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், `என்னை மன்னித்துவிடுங்கள்' என்று பேசியுள்ளார்.

Protesting against the alleged gang rape and killing of a Dalit woman in Uttar Pradesh
Protesting against the alleged gang rape and killing of a Dalit woman in Uttar Pradesh
AP Photo/Anupam Nath

சில தினங்களுக்கு முன்பு, கிரிக்கெட் வீரர் தோனி ஐ.பி.எல் மேட்ச்சில் சரியாக விளையாடவில்லை என்பதால் அவரை இழிவுபடுத்தித் தாக்கும் விதமாக, இதேபோல் அவரின் பெண் குழந்தைக்கும் சிறார் வதை மிரட்டல் விடுத்து, 16 வயது ப்ளஸ் டூ மாணவன் போஸ்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது அப்பதிவு.

ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் அவர்கள் வீட்டுப் பெண்களை  அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதன் பின்னால் உள்ள உளவியல் காரணங்களை ஆராய்ந்து பார்க்கலாம்.

பல ஆயிரம் ஆண்டுகளாகப் பெண்ணின் உடல் மீது சமூகம் தொடுத்துவரும் வன்முறையின் ஒரு வெளிப்பாடே இதுபோன்ற மனநிலை. பெண் என்பவள் உயிருள்ள, சுயமாகச் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஓர் உயிராகக் கருதப்படாமல், ஓர் உடமையாகவே, ஒரு பொருளாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறாள், வருகிறாள். பண்டைக் காலத்தில் போர் புரியச் செல்லும்போது எதிரி நாட்டின் மீது படையெடுத்து அந்த நாட்டு ஆடு, மாடுகளைப் பிடித்து வருவார்கள். இதை `நிரை கவர்தல்' என்று சொல்வார்கள். பின்னர், மாடுகளை இழந்த நாட்டைச் சேர்ந்த போர் வீரர்கள் எதிர்த்தாக்குதல் நடத்திப் படையெடுத்துச் சென்று, அந்த மாடுகளை மீட்டு வருவார்கள். `வெட்சி நிரை கவர்தல் மீட்டல் கரந்தையாம்' என்று ஒரு பழம் பாடல் சொல்கிறது.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Pixabay

இதன் நீட்சியாக, போரின்போது எதிரி நாட்டுப் பெண்களைக் கவர்ந்து செல்வது ஓர் ஆணின் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. எதிரி நாட்டுக் குடும்பப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்வது மிகப்பெரிய வெற்றியாகவும் தோற்றவர்களுக்குச் செய்யும் அவமானமாகவும் கருதப்பட்டது. கற்பு என்னும் புனிதத்தன்மை ஏற்றப்பட்டு  எதிரியிடம் சிக்கிக்கொள்வது வாழ்க்கையிலேயே மிகப்பெரிய அவமானம் எனக் கருதி கூட்டாகத் தற்கொலைகளில் ஈடுபட்ட  அரசவம்சப் பெண்களின் மனநிலைக்கும் இதுதான் காரணம். `மண், பெண் இரண்டையும் மாற்றானிடம் இழப்பது மறமாகாது' என வசனம் பேச வைத்ததும் இந்த மனநிலைதான். இன்று, ஆணவக் கொலைகளுக்குக் காரணமாக இருப்பதும் இந்த மனநிலைதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலியல் தேடல் என்பது இயல்பான ஒரு செயலாக இல்லாமல் இருக்கும்போது, அதன் மீது இதுபோன்ற மதிப்பீடுகள் உண்டாகின்றன. மிருகங்களிடையே இணை சேர்வதற்குப் போட்டி இருக்கும்போது இரு ஆண் இனங்கள் சண்டைபோட்டுக் கொள்வதைப் பார்ப்போம். அப்படி, ஆண் இனத்துக்கு பெண் ஒரு பெரிய உடமையாகத் தோன்றுகிறாள். இதனாலேயே பெண்களுக்கு மட்டும் கற்பு போன்ற கடுங்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாளடைவில் அவை சமூகத்தால் ஏற்கப்பட்ட மதிப்பீடுகளாக மாறிவிட்டன. சமீப காலம் வரை `கற்பழிப்பு' என்ற வார்த்தை பொதுத்தளத்தில் புழக்கத்தில் இருந்தது. கற்பை இழப்பது அவமானமாகக் கருதப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்தவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவது எனப் பல்வேறு பழக்க வழக்கங்கள் தோன்றின. ஒருவரை அவமானப்படுத்துவதற்காக அவர் வீட்டுப் பெண்களை பாலியல் ரீதியாகப் பேசுவது இதன் தொடர்ச்சியாகவே வந்திருக்கிறது. இன்றுவரை, சண்டை போடும்போது உபயோகிக்கும் கெட்டவார்த்தைகளில் பலவும் எதிரியின் குடும்பத்துப் பெண்களைக் குறிக்கும் பாலியல் வசைச் சொற்களே.

Twitter
Twitter
Pixabay

காலம் காலமாக இப்பழக்கம் இருந்தாலும் இணையம் வந்த பிறகு, இது அதிகம் பரவலாக்கப்படுகிறது. முன்பெல்லாம் நேரடித் தொடர்பில் இருப்பவருடன் நேரில் வாக்குவாதம் செய்யும்போது மட்டுமே பயன்படுத்தி வந்த வசைகளை, இப்போது யார் வேண்டுமானாலும் யார்மீது வேண்டுமானாலும் சமூக ஊடகங்களில் பொதுவெளியில்  சொல்ல முடிகிறது. அவற்றின் மூலம் எளிமையாகப் பலர் கவனத்தை ஈர்க்க முடிகிறது.

இன்னொரு காரணம், இதுபோன்ற இணையதளங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு வக்கிரத்தை கக்கும் வகையில் வசதியாக அமைந்திருப்பது. அடையாளத்தை மறைத்து அநாமதேயமாகப் பலதும் பகிர முடிகிறது இங்கு. இது, இழிவுமொழிக்காரர்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தை அளிக்கிறது.

இந்த விவகாரத்தில் இருக்கும் இன்னொரு கீழ்மை, சிறு குழந்தைகளைப் பாலியல் ரீதியாகப் பேசுவது. `பீடோஃபிலியா (Pedophilia)' என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற பாலியல் மனவிகாரம் இது. தனது பாலியல் ஈர்ப்பு மற்றும் திறமைகளின்மேல் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத சிறுவர், சிறுமிகளைத் தங்களது பாலியல் தேவைகளுக்கு வடிகாலாகப் பயன்படுத்துவார்கள். வலிமை குறைந்தவர்கள்மீது காட்டும் வன்முறையின் வெளிப்பாடே இது.

இறுதியாகச் சொல்ல வேண்டும் எனில், இவையெல்லாம் மன நோய்கள் அல்ல. மன வக்கிரங்கள். மன நோய்க்குத் தேவை சிகிச்சை. இவற்றுக்குத் தேவை கடும் தண்டனைகள்.

அடுத்த கட்டுரைக்கு