`நிகழ்ந்த அநீதியை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்!' - பிரியா ரமணி தீர்ப்பு சொல்லும் மெசேஜ் என்ன?

எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தனக்கு நேர்ந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியும் எனும் அழுத்தமான நம்பிக்கையைத் தூண்டுகிறது பிரியா ரமணிக்கு கிடைத்த தீர்ப்பு
தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமையைப் பொதுவெளியில் கூறிய பத்திரிகையாளர் பிரியா ரமணியின் மீது பா.ஜ.க முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பர் என்பவரால் மான நஷ்ட வழக்கு போடப்பட்டிருந்தது. மூன்று வருடங்களாக நடந்து வந்த அந்த வழக்கில் பிரியா ரமணிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வெளியான நிலையில் அதில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான கருத்துகள் பற்றிப் பேசுகிறார் வழக்கறிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.
``ஒரு பெண்ணாகவும் பெண் வழக்கறிஞராகவும் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். ஒரு பெண் பத்திரிகையாளருக்கே நீதி கிடைக்க இத்தனை காலம் என்றால் மற்ற பெண்களின் நிலைமை என்னவாக இருக்கும்!

சமூகத்தில் பெரிதாக மதிக்கப்படும் நபரால் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை வெளியே கூறினால் பாதிக்கப்பட்டவரைத்தான் அது பதம் பார்க்கும் என்பதைத்தான் பிரியா ரமணி மீது போடப்பட்டுள்ள அவதூறு மறைமுகமாகக் கூறுகிறது. தாங்கள் சந்தித்து வந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண்களைத் தொடர்ந்து குரல் கொடுக்கச் செய்யாதபடி எப்படி அடக்கலாம் என `செக்மேட்' வைப்பது போன்றதான வெளிப்பாடுதான் பிரியா ரமணியின் மீது அக்பர் தொடுத்திருந்த மான நஷ்ட வழக்கு. இது மிகத் தவறு!
பணி புரியும் இடத்தில் தனக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையைக் குறிப்பிட்ட காலத்துக்குள்ளாகச் சொல்லி விட வேண்டும் எனக் கூறுவது எப்படிச் சரி ஆகும்? தான் தாக்கப்பட்ட நேரத்தில் அவர் அதை வெளியே சொல்ல முடியாத சூழலில் இருந்திருக்கலாம். பிரியா ரமணி விஷயத்தில் அவர் தனக்கு நடந்ததைக் காலம் கடந்தாலும் அவர் வெளிப்படுத்தியது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயம். இது மற்ற பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கும். இந்தத் தீர்ப்பு பல சர்ச்சைகளைக் கொண்டு வந்தாலும்கூட இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு" என்றபடி, பிரியா ரமணி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களுக்கு வந்தார் வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.

``என்னதான் பாரதியாரும் பெரியாரும் பிறந்த மண்ணாக இருந்தாலும், ஏன் ராஜாராம் மோகன்ராய் போன்றோர் பெண்களுக்காகக் காலம் காலமாகக் குரல் கொடுத்திருந்தாலும் கூட பெண்களுக்குப் பேச்சு சுதந்திரம் இன்னும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பேச்சு சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் கான்ஸ்டிடியூஷனில் (constitution) இருந்தாலும் கூட தங்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் மென்று முழுங்கியேதான் வருகிறார்கள் பெரும்பாலான பெண்கள். அப்படிப்பட்ட விஷயங்களை மனத்தடைகளை உடைத்து எப்படியாவது பேசிவிட வேண்டும் எனப் பேசிய பெண்களை சமூகம் இதுவரை ஏற்றுக்கொண்டதே இல்லை என்பதுதான் உண்மை.
பாலியல் வன்கொடுமைக்கு தான் ஆளாகியிருப்பதைப் பொதுவெளியில் ஒரு பெண் கூறினால், `அவள் என்ன செய்திருப்பாளோ... எப்படியெல்லாம் அவனைத் தூண்டியிருப்பாளோ?' என எளிதாக சமூகம் முத்திரை குத்திவிடுகிறது. என்னதான் சமூகம் இத்தனை அதிவேக வளர்ச்சி அடைந்தும்கூட பாதிக்கப்பட்டவரை `கேரக்டர் அசாசினேஷன்' செய்வது முழுவதுமாக விலகிவிடவில்லை.

பாதிக்கப்பட்ட நபர் தனக்கு நடக்கும் பாலியல் வன்முறையை வெளியே கூற முன்வராத பட்சத்தில் மற்றொரு பெண் அதை எதிர்த்து கேள்விகேட்டால், `அவளைத் தெரியாதா... அவளே அந்த மாதிரியான பெண்' என பர்சனல் வாழ்க்கையைக் கையில் எடுத்து கேரக்டர் அசாசினேஷன் செய்வதும் இன்றும் இருந்துவருவது வருத்தத்துக்குரியது. தனக்குள்ளேயே வைத்து அழுத்திக்கொண்டிருக்கும் பிரச்னையை பொதுவெளியிலோ பொது மேடையிலோ பேசினால் அது நிச்சயம் சரிதான் எனும் நிலைமை விரைவில் வர வேண்டும். அதற்கு பிரியா ரமணிக்கு கிடைத்திருக்கும் தீர்ப்பு நிச்சயம் வழி செய்யும்" என்கிறார் வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.
``எத்தனையோ சைபர் குற்றங்கள் பெண்களை மையப்படுத்தி சர்வ சாதாரணமாக அரங்கேறுகின்றன. அந்தக் குற்றங்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்கும் வழக்கம் இன்னும் நம்மிடையே உருவாகவில்லையே! இதை ஒரு குற்றமாகக்கூட பார்க்காத சமூக பார்வை ஆபத்தானதும்கூட. பெண்களுக்குச் சட்டங்கள் பல வகைகளில் தைரியத்தைக் கொடுக்கின்றனதான். ஆனால், பாலியல் வன்கொடுமைகள் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாகப் பேசும் தைரியத்தைத் தருகின்றனவா என்றால் கேள்விக்குறிதான்! அப்படி வெளிப்படையாகப் பேசும்போதும்கூட சட்டம் என்னைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு கொடுக்கும்.

தங்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை எல்லா பெண்களும் வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். சகித்துக் கொண்டு தங்களுக்குள்ளேயே வைத்துப் புழுங்கும் பெண்களுக்கு மத்தியில் வெளிப்படையாக யாராவது ஒரு பெண் பேசினால் ஏதாவது ஒரு வகையில் மற்ற பெண்களுக்கு அது தைரியத்தை வரவழைக்கும். இது பிரியா ரமணிக்கான தீர்ப்பு மட்டுமல்ல எல்லா பெண்களுக்குமான தீர்ப்பும்தான்!" என்கிறார் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.
``ஒரு குழந்தைக்கு 8 வயதில் நடந்த பாலியல் வன்கொடுமையைப் பற்றி அவர் தன் 23 வயதிலும் கூறலாம், 83 வயதிலும் கூட கூறலாம். அது பாதிக்கப்பட்டவரின் மனநிலையைப் பொறுத்தது. எனக்கு நடந்ததை நான் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். `இன்று நான் அதைப் பேசத் தயாராக இல்லாமல் இருக்கலாம். கூச்சம் மற்றும் பயம் காரணமாக இத்தனை காலம் பொறுத்து இப்போது நான் பேசுகிறேன், அதனால் என்ன?' எனப் பாதிக்கப் பட்ட நபர் உறுதியாகப் பேசுமளவுக்கு இந்தத் தீர்ப்பு வழி செய்யும். பெண்ணின் மானத்தையும் கண்ணியத்தையும் காப்பது சட்டத்தின் கடமை மட்டுமல்ல, சமூகத்தின் கடமையும்தான்.

குடும்ப வன்முறை, பாலியல் அத்துமீறல், ஆசிட் வீச்சுக்குள்ளானவர், மகனால் அடித்து விரட்டப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான வன்முறை என எதுவாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு பெண்ணின் குரலும் எங்கே எட்ட வேண்டும் என நினைக்கிறார்களோ அங்கே எட்டுவதற்கு முழு சுதந்திரம் இருக்க வேண்டும். `அவள் அப்படித்தான்' என்னும் மனநிலை இல்லாமல் காதுகொடுத்துக் கேட்கும்போதுதான் முழு சுதந்திரம் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் கிடைக்கிறது.
எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தனக்கு நேர்ந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியும் எனும் அழுத்தமான நம்பிக்கையைத் தூண்டுகிறது பிரியா ரமணிக்கு கிடைத்த தீர்ப்பு" என்கிறார் வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.