நாங்கள் நீதி கேட்டால் மட்டும் எங்கள் நடத்தையும் கேள்விக்குள்ளாவது ஏன் ராமச்சந்திரன்? #VoiceOfAval

பொதுவாகவே பெண்களை போகப்பொருளாகக் கொண்டு பொழுதைக் கழிக்கும் இந்தச் சமூகத்துக்கு, குற்ற வழக்குகளில் சம்பந்தப்படும் பெண்கள் கேள்வி கேட்பாரற்ற கன்டன்ட் ஆகிவிடுகிறார்கள்.
ஒரு பெண் ஒரு முறை பாலியல் வன்கொடுமை செய்யப்படும்போது அதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதையே அவர் மீண்டும் மீண்டும் சொன்னால் என்ன அர்த்தம்? சுயமரியாதை உள்ள பெண் என்றால், ஒருமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பின்னர் தற்கொலை செய்துகொள்வாள் அல்லது மீண்டும் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாதவாறு தன்னை தற்காத்துக்கொள்வாள்.சமீபத்தில் இந்த கண்டனத்துக்குரிய வார்த்தைகளைப் பேசியிருக்கிறார், கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்.

குழந்தைகளுக்கு எதிரான சிறார் வதை, பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்கொடுமைகள், பாலியல் கொலைகள் என மலிந்துகிடக்கும் சமூகத்தில், `பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுயமரியாதை இருந்தால் அவள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்' என்று பேசும் ஒருவர், ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்பது எத்துணை அரசியல் அவலம்?
கேரளாவில் சோலார் பேனல் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கும் சரிதா நாயர், சமீபத்தில் காவல்துறையை அணுகி, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஏபி அனில்குமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்தார். கேரளாவில் ஆளும் யு.டி.எஃப் அரசுக்கு எதிரான போராட்டத்தில், சரிதாவை குறிப்பிட்டுத்தான் ராமச்சந்திரன் அப்படிப் பேசியுள்ளார்.
ஆணோ, பெண்ணோ... குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. என்றாலும், பொதுவாக ஓர் ஆண் குற்றவாளியாக நிற்கும்போது அவர் குற்றம் மட்டுமே பேசுபொருளாகிறது. அதுவே ஒரு பெண் குற்றவாளியாகும்போது, அவர் கேரக்டரும் சேர்த்தே குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படுவது பற்றியும் குறிப்பிட வேண்டியதாகிறது.
இதே கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னாவை `ஸ்வப்ன சுந்தரி' என்று எழுதிய மீடியாவின் அறமற்ற மொழி முதல், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிரப்பட்ட மீம்கள்வரை எல்லாம் பார்த்து வந்தோம்தானே? பொதுவாகவே பெண்களை போகப்பொருளாகக் கொண்டு பொழுதைக் கழிக்கும் இந்தச் சமூகத்துக்கு, குற்ற வழக்குகளில் சம்பந்தப்படும் பெண்கள் கேள்வி கேட்பாரற்ற கன்டன்ட் ஆகிவிடுகிறார்கள். ராமச்சந்திரன், ஓர் அரசியல் மேடையில் சரிதாவை இத்துணை கீழ்த்தரமாகப் பேசுவதற்கும் அதுவே காரணம்.

சரிதாவை பேசுவதாக ராமச்சந்திரன் பேசியிருக்கும் பொருள், அடுத்த விஷம். 5, 6 வயதுகளில் சிறார் வதைக்கு ஆளான குழந்தைகளுக்கு, அதன் பாதிப்பு அவர்கள் வளர்ந்த பிறகும்கூட மனதளவில் அவர்களைத் தொடர்வதாக, தொந்தரவு செய்வதாக மனநல மருத்துவர்கள் சொல்கிறார்கள். பேருந்துகள் முதல் திரையரங்குகள் வரை எங்கெங்கும் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும்போது, அவர்களுக்கு ஏற்படும் மனக்கொதிப்பு எரிமலை தூரின் தகிப்பை ஒத்தது. ஆனால், அந்த நெருப்பை விழுங்கிக்கொண்டு நகர்வதுதான், பெரும்பாலான பெண்களுக்கு இங்கு இதுவரை தீர்வாக இருக்கிறது. அந்த துர்அனுபவம் நினைவெழும்போதெல்லாம், எரிமலையின் வாய் திறந்துகொள்ளும் கொதிப்பு அவர்களுக்குள் பாயத்தொடங்கும் என்பதே நிதர்சனம்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கான ஆறுதலை, தைரியத்தை எப்படி வழங்குவது என்று நினைத்துப் பாருங்கள். குடும்பத்தினருக்கும் மருத்துவர்களுக்கும், நடந்து முடிந்த கொடூரத்தின் ரணத்திலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டுவருவது எந்தளவுக்கு சவாலான காரியமாக இருக்கும்? அப்படியும், தங்களைத் தாங்களே மீட்டுக்கொண்டு உயிர்த்தெழும் பாதிக்கப்பட்ட பெண்கள், இந்த வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிர்பயாவின் நினைவு இப்போது வருகிறது. `என்னைக் காப்பாற்றுங்கள், நான் வாழ வேண்டும்' - பேசக்கூட முடியாத நிலையில் பேப்பரில் கிறுக்கிக் காட்டிய அந்த இளம்பெண், எந்தளவுக்கு மனதிடத்துடன் இதைச் சொல்லியிருப்பார்? குடல் முழுவதும் நீக்கப்பட்டு, இன்னும் சொல்ல முடியாத அவரின் காயங்களுக்கு எல்லாம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், `இந்தக் காயங்களுடன் போராடிக்கொண்டிருக்கும் இவர் உண்மையில் ஒரு போராளி' என்றனர் மரணத்துடனான அவரின் போராட்டத்தை வியந்து.

அந்த நிர்பயா உயிரிழந்துவிட்டார். ஆனால், பாலியல் வன்கொடுமைகளில் உயிர்பிழைத்துக் கிடக்கும் நிர்பயாக்களை, `சுயமரியாதை உள்ள பெண் என்றால், ஒருமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பின்னர் தற்கொலை செய்துகொள்வாள்' என்ற ராமச்சந்திரனின் வார்த்தைகள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கும்?
இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார் என்கிறது, கடந்த அக்டோபரில் வெளியான NCRB டேட்டா. மேலும், 2019-ம் ஆண்டில் ஒரு நாளில் தோராயமாக இந்தியாவில் 88 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டதாகவும் அது கூறுகிறது (வழக்காகப் பதிவு செய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கை தனி). பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களுக்கு எல்லாம் ராமச்சந்திரன் தரும் `அறிவுரை'... `உங்களுக்கெல்லாம் சுயமரியாதை இருந்தால் நீங்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்!'
அடுத்ததாக, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் கான்சப்ட், பெண்கள் பிரச்னைகளில் பொது அம்சமாகவே புகுத்தப்படுகிறது. பாலியல் வன்கொடுமை செய்த ஆண் குற்றவாளி, சட்டம், வழக்கு, தீர்ப்பு, விடுதலை என்று நகர்ந்துவிடுகிறான். அவனால் பாதிக்கப்பட்ட பெண், குற்றவாளியாக மாற்றப்படுகிறாள். இப்போது அவளுக்கு `தற்கொலை தண்டனை'யை பரிந்துரைத்திருக்கிறார் ராமச்சந்திரன்.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, கேரள பெண்கள் குழுவின் தலைவர் ஜோஸ்ஃபின், சி.பி.எம் தலைவர் பிருந்தா காரத், ராமச்சந்திரன் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஷானிமோல் உஸ்மன் என்று, ராமச்சந்திரன் பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. அந்த எதிர்க்குரல்கள் அனைத்தும் பெண்களின் குரல்களாகவே இருக்கின்றன என்பது, அடுத்த அவலம். பெண்களை இழிவுபடுத்தினால் பெண்கள் கேட்டுக்கொள்ளட்டும், பொது சமூகம் வேடிக்கை மட்டுமே பார்ப்போம் என்ற ஒப்புதலாகத்தானே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்?

இறுதியில், `நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன்' என்று கூறியிருக்கிறார் ராமச்சந்திரன். மேடையில் நீங்கள் பேசியதே உங்கள் சுயம், வேறு வழியின்றி அழுத்தத்தின் காரணமாகக் கேட்கும் இந்த மன்னிப்பு வெறும் சாயம் என்றறிவோம் ராமச்சந்திரன். எனவே, மன்னிக்க மாட்டோம். அதுவே, ராமச்சந்திரன்களின் மன்னிப்புகள் தொடர்கதையாகாமல் இருப்பதற்காக வைக்கப்படும் முற்றுப்புள்ளியாக இருக்கும்.
- அவள்
இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்து வைப்பதற்கான அவள் விகடனின் புதிய முன்னெடுப்பு!