Published:Updated:

`துப்பட்டா போடுங்க தோழி' குரல்களுக்கு... பெண்களின் பதில் இதுதான்!

Woman (Representational Image)
Woman (Representational Image) ( Image by StockSnap from Pixabay )

மாணவிகள், மாணவர்கள் மீது விதிக்கப்படும் ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்ட எந்தவிதமான கட்டுப்பாடுகளும் அவர்களின் தனி நபர் சுதந்திரத்தைப் பாதிக்குமே தவிர, அவர்களுக்கு பாதுகாப்பை அளிப்பதில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு அவர்கள் அணிந்திருக்கும் உடையே காரணம் என்று, பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றத்தை சுமத்தும் மனப்போக்கு இந்தச் சமூகத்தில் வேரோடிப் போயிருக்கிறது. பெண்கள் தங்களுக்குப் பிடித்த, சௌகர்யமான உடையை அணியும்போது பல சந்தர்ப்பங்களில், தன்னைச் சுற்றியுள்ளவர்களால் ஒழுக்கக் காவல் (Moral policing) செய்யப்படுகிறார்கள். `துப்பட்டா போடுங்கள் தோழி' அறிவுரைகள் சமூக வலைதளங்கள் வரை நீண்டு கிடக்கின்றன.

சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான  ஸ்ரீலா
சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஸ்ரீலா

உண்மையில் பெண்களுக்கான உடைக் கட்டுப்பாட்டுக்குப் பின், சமூக அரசியல் ஒளிந்திருக்கிறது. ஆடை சுதந்திரம் என்ற அடிப்படையான தனி மனித உரிமை, `கலாசாரம்' என்ற பெயரில் பெண்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அந்தப் புனிதத்தன்மை கோட்டிங்கின் கீழ் பெண்களுக்கு அடக்குமுறை புகுத்தப்படுகிறது. `குடும்ப மானம்' என்ற எடைக்கல்லை பெண்ணின் தலையில் வைத்து அவள் எழுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளும் ஆணாதிக்க சமூகமே இதற்கு வேர்க் காரணம். சென்னையைச் சேர்ந்த பெண்ணியவாதியும், சமூக ஆர்வலருமான வழக்கறிஞர் ஸ்ரீலா இது குறித்துப் பேசினார்.

உடை மீதான ஒழுக்கத் தாக்குதலைச் சந்திக்கும்போது..!

``பெண்கள் பலரும் உடை குறித்த ஒழுக்கத் தாக்குதலுக்கு ஆளாகிறோம். அப்போது, பொதுப்புத்தி தனக்குப் புகுத்திய பிற்போக்கு எண்ணங்களின் வழி சிந்திக்கும் பெண், அதற்குப் பணிந்துபோகிறார். பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி அறிய நேர்ந்த பெண், `என் உடை என் ஒழுக்கத்தை தீர்மானிக்காது' என்று எதிர்த்து நிற்கிறார். எனவே, இங்கு பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு தரப்பட வேண்டியது அவசியமாகிறது.

woman (Representational image)
woman (Representational image)
Pexels

கல்லூரிகளில் டிரெஸ் கோடு..!

இங்கு பல கல்லூரிகளிலும் `டிரெஸ் கோடு' கடைப்பிடிக்கப்படுகிறது.
மாணவிகள், மாணவர்கள் மீது விதிக்கப்படும் இந்த ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்ட எந்தவிதமான கட்டுப்பாடுகளும் அவர்களின் தனி நபர் சுதந்திரத்தைப் பாதிக்குமே தவிர, அவர்களுக்கு பாதுகாப்பை அளிப்பதில்லை. ஐஐடி, ஐஐஎம் போன்ற பொதுநிதியில் செயல்படும் முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஆடைக் கட்டுப்பாடுகள் தளர்வாகவே உள்ளன. அந்த மாணவர்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கிறது. எனில், கேம்பஸில் டிரெஸ் கோடு என்பதன் அடிப்படை என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளியாக்குவது என்ன மனநிலை?

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு அவர்களின் உடையே காரணம் என்று சொல்பவர்களைப் பார்க்கிறோம். திருட்டு, கொள்ளை போன்ற பிற குற்றங்களைப் பொறுத்தவரை யாரும் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று, `நீங்கள் வீட்டை பத்திரப்படுத்தாமல் போனது உங்களுடைய தவறே' என்று சொல்வதில்லை. ஆனால், பாலியல் வன்முறை நடக்கும்போது, பாதிக்கப்பட்டவரை குற்றவாளியாக்கும் `விக்டிம் பிளேமிங்' நடக்கிறது. இதை ஒரு தனி மனிதனின் எண்ணத்தின் வெளிப்பாடு என்பதைத் தாண்டி, சமூக வரலாற்றின் பிரதிபலிப்பாகவே புரிந்துகொள்ள வேண்டும். சமூக மாற்றத்தை நோக்கி நகர வேண்டும்.

Abuse (Representational image)
Abuse (Representational image)
நீங்கள் கட்டிக்காத்தது `கண்ணியம்' அல்ல; மொத்தமும் வக்கிரம்! #VoiceOfAval

தீர்வுதான் என்ன?

பெண்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள ஆணாதிக்க சிந்தனையில் இருந்து வெளியே வர வேண்டும். அவர்கள் குழுக்களாக இணைந்து, ஆடை உரிமை பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும்; அதை சக பெண்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். பாலின சமத்துவ புரிந்துணர்வு உள்ள ஆண்களும் இதில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். எங்கோ, யாரோ ஒரு பெண் அவளது ஆடைக்காக விமர்சிக்கப்படும்போது, குற்றவாளியாக்கப்படும்போது, `அது உன் விருப்பம், உன் உரிமை' என்று அவள் கைப்பற்றிச் சொல்ல ஒரு சக உயிர் இருக்கும் நிலை வர வேண்டும். கைகள் இணையும்போது கடிவாளங்கள் தகர்க்கப்படும்!"

- சுப்ரியா தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு