Published:Updated:

சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, முன்னோடியான தென்னிந்திய மாநிலங்கள்... தீர்ப்பும், பெண்களின் கருத்தும்!

சொத்துரிமை
சொத்துரிமை

ஒரு வீட்டில் பிறந்த ஆண் பிள்ளைகளுக்கு சொத்தில் உரிமை இருப்பதைப்போலவே, அந்த வீட்டில் பிறந்த பெண் பிள்ளைகளுக்கும் சம உரிமை இருக்கிறது என்கிற சட்டத் திருத்தத்தை உறுதிசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது தற்போது இந்தியாவெங்கும் பேசுபொருளாக இருக்கிறது.

பொதுவாக நம் சமூக அமைப்பில், ``ஆண்தான் அதிகாரத்துக்கும் குடும்ப சொத்துக்கும் உரியவன். பெண், திருமணம் முடித்து அடுத்த வீட்டுக்கு வாழப்போகிறவள். அதனால், அவளுக்குக் குடும்ப சொத்தில் பங்கு கிடையாது. திருமணத்தின்போது நகை, சீர் வரிசைப்பொருள்கள் தருகிறோமே! அப்புறம் குடும்பச் சொத்தில் ஏன் பங்குத் தர வேண்டும்" என்று சிந்திக்கிற மனோபாவம்தான் பலருக்கும் இருக்கிறது.

இந்நிலையில், இப்போது வந்துள்ள இந்தத் தீர்ப்பு குறித்து, வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் பேசினோம். ``1956-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டப்படி கூட்டுக் குடும்பத்துக்குச் சொந்தமான பரம்பரை சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரிமை என்று சொல்லப்பட்டிருந்தது. இதற்கு எதிராகத் தொடர்ந்து பல வருடங்கள் நடந்த போராட்டங்களின் பலனாக இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் அகில இந்திய அளவில் 2005-ல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

சுதா ராமலிங்கம்
சுதா ராமலிங்கம்

அதன்படி, கூட்டுக்குடும்ப சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு உரிமை இருப்பதைப்போலவே, பெண் வாரிசுகளுக்கும் பங்கு அளிக்கப்பட்டது. இந்தத் திருத்தமே இப்போதும் செல்லுபடியாவதாகவும், இந்தத் திருத்தமே ஏற்கப்படும் என்றும் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது. ஆக, இனிமேல் சகோதர, சகோதரிகளுக்கிடையே பாகுபாடில்லாமல் தங்கள் குடும்பச் சொத்துகளில் உரிமை வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

இந்தியாவில், இந்துக் கூட்டுக்குடும்ப சொத்தில் பெண்களுக்கும் உரிமை இருக்கிறது என்கிற சட்டம் முதல்முதலாக 1976-ம் வருடம் கேரளாவிலும், அதைத்தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சட்ட திருத்தங்கள் மூலம் பெண்களுக்குக் கூட்டுக் குடும்ப சொத்தில் பங்களிக்கப்பட்டு அம்மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டன. இந்த வகையில் இந்தியாவுக்கு தென் மாநிலங்களே முன்னோடிகளாக இருந்துள்ளன. இனிமேல் இந்தியா முழுவதும் , குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு. இதுபற்றி சில பெண்களிடம் பேசினோம்.

``பெண்களோட சொத்துரிமையில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்திருக்கிறது என்பது நமக்கெல்லாம் எவ்வளவு பெரிய பெருமை. சில பவுன்கள் நகைபோட்டுவிட்டு, சொத்தில் பங்கு கிடையாது என்பது நியாயம் கிடையாது. அதைத்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் உறுதி செய்துள்ளது. இந்தக் காலப் பெண்கள் திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்குச் சென்றாலும், பிறந்த வீட்டுக்கான கடமைகளைச் செய்வதிலும் உறுதியாக இருக்கிறார்கள்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இன்றைக்குப் பல பெண்கள் திருமணத்துக்குப் பின்னரும் தங்கள் பெற்றோரைப் பராமரித்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, குடும்பச் சொத்து என்று வரும்போது சம உரிமை தருவதுதானே நியாயம்’’ என்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த கல்பனா.

கீதா நாராயணன்
கீதா நாராயணன்
அமெரிக்கா:`ஹெச் 1-பி விசா நடைமுறைகளில் தளர்வு!' - ட்ரம்பின் தேர்தல் நகர்வு?

சென்னையைச் சேர்ந்த செயற்பாட்டாளர் கீதா நாராயணன் பேசுகையில், ``வரவேற்கப்பட வேண்டிய சட்டம். அதே நேரம், இந்தச் சமூகத்தின் செயல்பாடுகளில் சில மாற்றங்களும் நடந்தால், நம் சமூகத்தில் இருக்கிற தேவையற்ற சில பழக்கவழக்கங்கள் மறையும் என்று நினைக்கிறேன். தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், பெண்களாகிய நாம், ``எங்களுக்குத் தரமான கல்வியையும் சமமான சொத்துரிமையையும் எங்கள் பெற்றோர் வழங்குவார்கள். அதற்கு மேலும் அவர்களிடம், `திருமணத்துக்கு 50 பவுன் போடணும், 100 பவுன் போடணும்’ என்று கேட்கக் கூடாது'' என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். நம் சமூகத்தில் இன்னமும் பெண்ணைப் பெற்றவர்கள் திருமண சீர், ஆடி சீர், பேரக்குழந்தைகள் பிறந்தால் சீர், பேத்தி பெரிய மனுஷியானால் சீர் என்று செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சமூகத்தின் இந்த மனநிலையையும் மாற்றி குடும்பங்களின் பாரம் குறைக்க வேண்டும்’’ என்கிறார் அழுத்தமாக.

இந்தத் தீர்ப்பு பற்றி மக்களிடம், பெண்களிடம் இன்னும் அதிகமான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!

அடுத்த கட்டுரைக்கு