Published:Updated:

மோசமான முன்னுதாரணம் ஜீன்ஸ் அணிந்த பெண்கள் அல்ல; நீங்கள்தான் தீரத் சிங் ராவத்! #VoiceOfAval

உயர்வர்க்க பெண்களிடம் இவரால், 20 குழந்தைகளை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை எனக் கேட்க முடியுமா? சாமானிய மக்களிடமே அவரால் அதைச் சொல்ல முடியும். எனில், இது அறிவிலி வார்த்தைகள் அல்ல; இல்லாதவர்களிடம் மட்டுமே பாயும் ஆதிக்க வார்த்தைகள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`அவளின் குரலை' Podcast-டாகக் கேட்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். தொடர்ந்து அவள் விகடனைப் பின்தொடர சப்ஸ்கிரைப் செய்யவும்

உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் சமீபத்தில் ஒரு நிகழ்வில், ஒருவித ஃபேஷனான கிழிந்த தோற்றமுள்ள ஜீன்ஸை (Ripped Jeans) அணியும் பெண்களை `மோசமான முன்னுதாரணம்' என்று குறிப்பிட்டுப் பேசினார். அதற்கு நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பியது, பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் #RippedJeans என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவிட, அது ட்ரெண்டிங்கில் வந்தது. ஜெயா பச்சன் உட்பட பல பிரபலங்களும் ஆளுமைகளும் அவரின் கருத்துக்கு தங்களின் எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்திருந்தனர்.

பெண்கள், அதுவும் ஓர் அம்மா கிழிந்த ஜீன்ஸ் அணிவது முதல்வர் தீரத் சிங் ராவத்தை மிகவும் தொந்தரவு செய்திருக்கிறது, அதிருப்திக்கு ஆளாக்கியிருக்கிறது. குறிப்பாக, பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து முழங்கால்களைக் `காட்டுவது' குறித்துக் குறிப்பிட்டு, மேற்கத்திய நாடுகள் நம்மை பார்த்து உடலை மூடும் ஆடைகளை அணியத் தொடங்கும்போது, இந்தியர்கள் நிர்வாணத்தை விரும்பி நகர்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.

Ripped Jeans
Ripped Jeans

உங்கள் பழைய சிந்தனைக்கு, பழைய பதில்தான் முதல்வரே. பெண்களின் குணமோ, மாண்போ அவர் உடையில் இல்லை. தன் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப தன் ஆடையைத் தேர்ந்தெடுக்கும் பெண்ணையும், அவள் ஆடையையும் விமர்சிப்பதை, வகுப்பெடுப்பதை பிரதான வேலையாகச் செய்வதை விட்டுவிட்டு, ஆள்பவர்களும் பிரபலங்களும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தலாம். உங்களுக்கு ஓர் அதிகாரம், ஒரு மேடை, ஒரு மைக் கிடைத்துவிட்டாலே பெண்களை விமர்சிக்கும் உரிமை வந்துவிடுகிறது என்பதாகாது.

தொடர்ந்து, தீரத் சிங் ராவத்தின் மனைவி ராஷ்மி த்யாகி வெளியிட்ட விளக்கத்தில், தன் கணவர் என்ன பேசினார் என்பது முழுவதும் விவரிக்கப்படவில்லை என்றும், `நம் நாட்டின் கலாசார மாண்பையும், நம் அடையாளத்தையும், நம் ஆடையையும் காக்க வேண்டியது பெண்களின் பொறுப்பு' என்றும் தெரிவித்திருந்தார். தன் கணவரின் கருத்தில் தவறு என்ன இருக்கிறது என்று கேட்கவும், அதை மீண்டும் உணர்த்தவும் விளைகிறார் ராஷ்மி த்யாகி.

இதுதான் பிரச்னை. பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தை அவர்கள் மட்டுமே கையாள்வதில்லை. இந்தியக் குடும்ப அமைப்பின் ஒவ்வொரு பெண்ணின் ஆழ்மனதிலும் அதை பதியமிட்டு, ஆண்டாண்டு காலமாக வளர்த்துவிட்டிருக்கிறார்கள் விருட்சமாக. குடும்ப அமைப்பில் ஆணே தலை, அவனே தெய்வம். அவனுக்கான ஆதிக்கத்தில், மரியாதையில், முக்கியத்துவத்தில் பழுது எதுவும் ஏற்படாதபடியும், அவனை எதிர்த்து வார்த்தைகள் எதுவும் எழாதபடியும் பார்த்துக்கொள்ள பெண்களை ஏவல் தெய்வமாக வைத்திருக்கிறார்கள். குடும்பம் சமூகத்துடன் இணையும்போது, அங்கும் இதுவே எதிரொலிக்கிறது.

ராஷ்மி த்யாகியும், அப்படி ஒரு ஏவல் தெய்வமாகித்தான் இப்போது தன் கணவருக்காக, இந்தியச் சமூகத்தின் ஆணாதிக்க மனநிலைக்காகப் பேசி, `பெண்கள் கலாசாரத்துடன் இருக்க வேண்டும்' என்கிறார்.

 தீரத் சிங் ராவத்
தீரத் சிங் ராவத்
Twitter

சரி, கலாசாரம் என்றால் என்ன? பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனித இனக்குழுக்கள், தங்களின் சமூகப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், அறிவுத் தளம், சட்டதிட்டங்கள், கலை எனப் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாக தங்கள் கலாசாரத்தை வரையறுத்தனர். அது காலத்துக்கேற்ற தகவமைப்புகளை கொண்டிருக்கும்போதுதான், அந்த இனக்குழு முன்னேற்றமடையும். ஆனால், இங்கே நடப்பது என்ன?

கலாசாரம் என்பதை, மற்ற கூறுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, பெண்களின் ஒழுக்கம் மீதே சுமத்தினார்கள். குறிப்பாக, பெண்களின் ஆடை அதில் பிரதானமானது. அவளுடைய ஆடையும், பாலுறவு தேர்வும், வாழ்க்கையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை, கலாசாரம் என்ற பெயரில் புனிதப்படுத்தப்பட்டது. அதிலிருந்து விலகும் பெண்கள் எல்லாம் கலாசாரத்தை அழிக்கும் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள். ஓர் இனக்குழுவின் மொத்த மரியாதையும் பெண்களின் நடத்தையில்தான் இருக்கிறது என்று திணிக்கப்பட்டு, அதை அவர்களின் பொறுப்பாகச் சூடிக்கொள்ளச் சொன்னார்கள். அதன் 2021 வெர்ஷன்தான், `நாட்டின் கலாசாரத்தை பெண்கள் காக்க வேண்டும்' என்கிற ராஷ்மி த்யாகியின் வார்த்தைகள்.

`கலாசாரம்' என்று கொடி பிடிப்பவர்கள், கோயில்களில் கச்சைகளோடு நிற்கும் பெண் சிலைகளை கலாசாரமற்றது என்பார்களா? காலத்துக்கு ஏற்ப பெண்களின் அந்த ஆடை வழக்கங்கள் மாறி வந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறோம், அது முன்னேற்றம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்தானே? கலாசாரம் என்பது, அப்படித்தான் காலமாற்ற தகவமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியது. அந்த வகையில் கிழிந்த ஜீன்ஸ், 2021-ன் ஆடை கலாசாரம்; கலாசார சீரழிவு அல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ராஷ்மி த்யாகியிடம் கேட்க இன்னொரு முக்கியமான கேள்வி இருக்கிறது. ஆடையில்தான் கலாசாரம் இருக்கிறது என்று நம் பெண்களுக்கு வகுப்பெடுக்கும் ராஷ்மி, முன்னாள் மாடல். `மிஸ் மீரட்' பட்டம் வென்றவர். `கலாசாரமாக' வரையறுக்கப்பட்ட ஆடைகளை அணிந்துதான் நீங்கள் `மிஸ் மீரட்' போட்டிகளின் அனைத்து சுற்றுகளிலும் கலந்துகொண்டீர்களா ராஷ்மி?

முன்னரெல்லாம், மாடல்கள் என்றாலே அவர்களின் ஆடை மற்றும் தொழில்முறை இயல்பின் காரணமாக அவர்கள் மீது பழைமை கருத்துகள் படர்ந்திருக்கும். அதிகமாக ஜட்ஜ்மென்ட்டுக்கு ஆளாவார்கள். ஆனால், அதையெல்லாம் எதிர்த்து ஒலிக்க ஆரம்பித்த குரல்களில் விளைவாக, இன்று அந்தத் துறை நடுத்தரவர்க்கக் குடும்பத்துப் பெண்களும் தேர்ந்தெடுக்கும் துறையாக ஆகியுள்ளது.

இந்நிலையில், அந்தத் துறையின் முன்னோடியான உங்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளிலிருந்து பெண்களை விடுவிக்கும் பொறுப்பு அதிகமாகவே இருக்கிறது ராஷ்மி. ஆனால் நீங்களோ, பெண்கள்தான் தங்களின் ஆடைகளின் மூலம் நாட்டின் கலாசாரத்தை காக்க வேண்டும் என்கிறீர்கள். முன்னாள் மாடலா, முதல்வரின் மனைவியா... எது உங்களின் சுயம் ராஷ்மி த்யாகி?

ராஷ்மி த்யாகி
ராஷ்மி த்யாகி
Facebook

பொதுவாக, பணம் உள்ளவர்களுக்கும் பணம் இல்லாதவர்களுக்கும் இங்கு இரண்டு வகையான கலாசார வரையறைகள் நிலவுகின்றன என்பதுதான் நிதர்சனம். `கலாசாரம், பண்பாடு' என்று கூப்பாடு போடும் அரசியல் தலைவர்களின் வீடுகளுக்குள் பார்த்தால், அவர்கள் பின்பற்றும் கலாசாரம் என்பது ஸ்விஸ் பேங்கில் அக்கவுன்ட்டும், கால்படாத தீவுகளுக்கு டூரும். ஆனால் இல்லாத மக்களும், பெண்களும் தங்கள் ஆடைகளின் மூலம் இந்தியாவின் கலாசாரத்தை காக்க வேண்டும்.

முன்னாள் மாடல், `மிஸ் மீரட்'டான உங்களின் கலாசாரமும், இந்த இரட்டை வேட கலாசாரம்தானா ராஷ்மி த்யாகி? உங்கள் கணவர்கூட, கிழிந்த ஜீன்ஸ் அணியும் உயர் வர்க்கத்தினரை குற்றம் சொல்லவில்லை. கிழிந்த ஜீன்ஸ் அணிவதன் மூலம் தங்களை பணக்காரர்களாக `காட்டிக்கொள்ள' நினைப்பவர்களையே குற்றம் சொன்னார்.

இப்போது உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், ``கொரோனா ஊரடங்கில் 10 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்துக்கு 50 கிலோ, 20 குழந்தைகள் கொண்ட குடும்பத்துக்கு 100 கிலோ, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு 10 கிலோ என ரேஷன் பொருள்கள் கிடைத்தன. இப்போது, இரண்டு குழந்தைகளைக் கொண்டவர்கள் ஏன் பொறாமைப்படுகிறார்கள்? நேரம் இருந்தபோது, நீங்கள் இரண்டு குழந்தைகளை மட்டும் பெற்றெடுத்தீர்கள். ஏன் 20 குழந்தைகளைப் பெற்றெடுக்கவில்லை" என்று பேசியிருக்கிறார்.

தீரத் சிங் ராவத் - ராஷ்மி த்யாகி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். ராஷ்மி ஏன் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கேட்பதற்கான உரிமை இங்கு யாருக்கும் இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனால், அந்த அடிப்படை நாகரிகம்கூட ஏன் மாநில முதல்வருக்குத் தெரியவில்லை?

 தீரத் சிங் ராவத்
தீரத் சிங் ராவத்
Twitter
`பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவது என்ன மாதிரியான செயல்?' - உத்தரகாண்ட் முதல்வர் சர்ச்சை கருத்து

ரேஷன் பொருள்களுக்காகத் தன் மாநிலப் பெண்களை 20 குழந்தைகள் ஏன் பெற்றுக்கொள்ளவில்லை எனக் கேட்கும் முதல்வரின் வார்த்தைகளை, அறிவு போதாமை, பிற்போக்கு என்று கடந்துவிடுவதுதான் ஆபத்து. சமூக சேவகர் மற்றும் பேராசிரியரான தன் மனைவியிடம் இவரால், 20 குழந்தைகளை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை எனச் சொல்ல முடியுமா? அல்லது, கல்விபெற்ற, உயர்வர்க்க பெண்களிடம் இவரால், 20 குழந்தைகளை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை எனக் கேட்க முடியுமா? ரேஷன் பொருள்களில் வாழ்க்கை நடத்தும் வறுமை நிலையில் உள்ள மக்களிடமே அவரால் அதைச் சொல்ல முடியும். எனில், இது அறிவிலி வார்த்தைகள் அல்ல; இல்லாதவர்களிடம் மட்டுமே பாயும் ஆதிக்க வார்த்தைகள்.

கிழிந்த ஜீன்ஸ் அணிந்து விமானத்தில் உங்களுடன் பயணித்த இரண்டு குழந்தைகளின் தாயை, மோசமான முன்னுதாரணம் என்றீர்கள். பெண்கள் 20 குழந்தைகள் பெற்றுக்கொண்டு ரேஷன் பொருள்கள் வாங்கப் பரிந்துரைக்கிறீர்கள். பதவியேற்ற இரண்டே வாரங்களுக்குள், நீங்கள்தான் மோசமான முன்னுதாரண முதல்வர் ஆகியிருக்கிறீர்கள் தீரத் சிங் ராவத்.

- அவள்
இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு